Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Forewords

நூல் : அல்-துர் அல்-நலீம் பீ முதஷாபிஹ் அல்-குர்ஆன் அல்-அலீம்


ஆசிரியர் : அஷ்;-ஷைக் ஏ.ஜே. முஹம்மத் ரிகாஸ்

ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத் தலைவர்,
நத்வத்துர் ரஹ்மானிய்யீனின் செயலாளர் அஷ்;-ஷைக் எச். அப்துல் நாஸர் (ரஹ்மானி) அவர்கள் மனமுவந்தளித்த அணிந்துரை


பாரைப் படைத்தாளும் பரம தயாளன், மாட்சிமைமிகு ஏக இறைவன், ஈடிணை அற்றவன் அல்லாஹ் தஆலாவுக்கே அனைத்துப் புகழும். வல்லவன் வழங்கிய வான் மறையை வையகத்தார் வாழ்வாங்கு வாழும்வண்ணம் விளக்கியுரைத்து வித்தியாசமான வனப்புமிகு வாழ்வு வழியை விட்டுச்சென்ற அழியாப் புகழ் பெற்ற அன்பு நபி (சல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அன்னாரது அன்புக்கினிய உத்தம குடும்ப அங்கத்தவர்கள், அவர்தம் தோளாக, துணையாகவிருந்த தீனின் சோலை மலர்களான அருமை சஹாபிகள், நபி வழியை தம் வழியாக ஏற்று வாழ்ந்தோர், வாழ்வோர், அவ்வழிக்காக அழைப்போர், உழைப்போர் எல்லோர் மீதும் சதா சலாத்தும் ஸலாமும் உண்டாகட்டுமாக!

தித்திக்கும் திருமறை குர்ஆன் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் சங்கை நிறைந்த வார்த்தைகள். அவை பரிசுத்தமானவை, அற்புதமானவை, ஆழமான, அகலமான அர்த்தமுள்ளவை. ஒவ்வொரு சொல்லிலும் இழையோடிக்கிடக்கும் பொருள்களை, விளக்கங்களை அதன் சொந்தக்காரன் மாத்திரமே சரியாக அறிவான்.

திவ்விய திருக்குர்ஆனில் பதங்கள், வசனங்கள், சொற்றொடர்கள் மீண்டு மீண்டு வரக் காண்கிறோம். இதன் இரகசியத்தை, நோக்கத்தை, காரணத்தை இறை மறையை இறக்கிவைத்தவனே அறிவான். மனிதர்களின் எழுத்துக்களில் ஒரே விடயம் அல்லது சொல், வசனம், சொற்றொடர் மீள மீள இடம்பெறுவது அலுப்பைத் தரும், அப்படைப்புகளின் தரத்தைக் குறைக்கும். ஆனால் அல்லாஹ்வின் அருள் மறையைப் படிக்கும்போது சுறுசுறுப்புதான் வருகிறது, தரம்தான் மேலோங்கி நிற்கிறது. இது இறை சக்தி. அல்-குர்ஆன் தெய்வீக மறை என்பதற்கு இதுவும் ஓர் அத்தாட்சி.

ஒரே மாதிரியான வசனங்கள், சொற்றொடர்கள் புனித மாமறையில் பல இடங்களில் வருகின்றன. மனனத்திலிருந்து ஓதும் வேளை இவ்விடங்களில் வெகு அவதானம் அவசியம். அல்-குர்ஆன் மனனம்செய்த ஹாஃபில்கள் பெரும்பாலும் தவறு விடுகின்ற அல்லது தடுமாறுகின்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இதன் முக்கியத்துவம் கருதியே அல்-குர்ஆன் மனன கற்கைநெறியில் இவ்விடயத்துக்கு அலாதி கவனம் செலுத்தப்படுகிறது. திரு மறை மனனப் போட்டிகளில் பங்குகொள்வோர் ஒரே மாதிரியான வசனங்கள், சொற்றொடர்கள் பற்றியும் முக்கியமாக பரீட்சிக்கப்படுகின்றனர்.

ஒரே மாதிரியான வசனங்கள், சொற்றொடர்கள் விடயத்தை மையப்படுத்திய ஆய்வுகள் அன்றும், இன்றும் பல உள. மரியாதைக்குரிய, கண்ணியமான இமாம் பெருந்தகைகள் இது குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு எண்ணிறந்த நூல்களும் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர். பிற்பட்ட காலத்திலும் இன்றும் செய்யப்படும் இது பற்றிய ஆராய்ச்சிகள், யாக்கப்படும் நூல்கள் யாவும் முன்னோர்களான இமாம்களின் இமாலய ஆய்வுகளை, எழுத்துக்களை மூலாதாரமாகக்கொண்டவையே.

தகவல் தொழில்நுட்பம் ஓங்கி ஒய்யாரமாய் வளர்ந்து வாழ்வியலின் பல் துறைகளிலும் செல்வாக்கு செலுத்திவரும் நிகழ்காலத்தில் வைகறை விளக்கான குர்ஆன் தொடர்பிலான அம்சங்களை உள்ளடக்கிய மென்பொருள் செயலிகளும் இருக்கின்றமை கண்கூடு. அருளாளனின் அருள் மறை தாங்கியுள்ள ஒரே மாதிரியான வசனங்கள், சொற்றொடர்களை இத்தகைய மென்பொருள் செயலிகளின் துணையுடன் தேடி அடைவதும் எளிதாகிவிட்டது. இலகுபடுத்தப்பட்ட இப்பணிகள் யாவும் இறையனுக்கிரகம் பெற்;ற இமாம்களது பகீரதப் பிரயத்தனங்களின் விளைவான அவர்களின் எச்சங்களைத் தழுவியவைதாம்.

ஓத ஓத தெவிட்டாத உயர் மறையை அலங்கரிக்கும் ஒரே மாதிரியான வசனங்கள், சொற்றொடர்கள் தொடர்பில் வெளிவந்துள்ள நூல்களையும் வேறு ஆக்கங்களையும் பொதுவானவை எனவும், சிறப்புத் தேவையை நிறைவேற்றிவைப்பவை எனவும் கூறுபடுத்தலாம். குர்ஆன் மனனம் செய்பவர்கள், செய்தவர்களின் தேவையை மையப்படுத்தி தொகுக்கப்பட்ட நூல்கள் பிந்திய வகையைச் சேர்ந்தவையாகும்.

வாசகர்களின் கரங்களில் தவழும் ‘அல்-துர் அல்-நலீம் பீ முதஷாபிஹ் அல்-குர்ஆன் அல்-அலீம்’ எனும் நாமம் சுமந்த இந்த நூல் ஒரே மாதிரியான வசனங்கள், சொற்றொடர்கள் குறித்து குர்ஆன் மனனத்திலீடுபட்டுள்ளோர், மனனமிட்டு முடித்துள்ளோரின் தேவையை நிவர்த்திசெய்துவைக்கும் பொருட்டு தொகுக்கப்பட்டுள்ள ஒன்று. குறியாகக் கொண்டுள்ள நோக்கத்தில் கவனம் குவித்து மிகவும் சிறப்பாக ஆக்கப்பட்டுள்ள ஒரு படைப்பு.

இந்த நல்ல படைப்பை ஆக்கியவர் அஷ்;-ஷைக், அல்-ஹாஃபில் ஏ.ஜே. முஹம்மத் ரிகாஸ் (ரஹ்மானி) அவர்கள். அல்-குர்ஆன் மனன கற்கைநெறி மற்றும் அரபு மொழி, ஷரீஅஹ் கற்கைநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்துவிட்டு ஹதீஸில் விசேட கற்கையும் அஷ்ர் கிராஆத்தில் விசேட கற்கையும் வெற்றிகரமாகப் பூர்த்திசெய்தவர். குர்ஆன் மனன பாடநெறி ஆசிரியராக சுமார் 11 ஆண்டு கால அனுபவம் பெற்றுத் திகழ்பவர். ஒரே மாதிரியான வசனங்கள், சொற்றொடர்கள் தொடர்பில் தொகுப்பாக்கம் செய்யத் தேவையான பின்புலம் கொண்டுள்ளவராக அவரை நான் காண்கிறேன்.

அஷ்;-ஷைக் ஏ.ஜே. முஹம்மத் ரிகாஸ் அவர்கள் அக்குறணையைச் சேர்ந்தவர். அவரின் பால்யம் முதல் அவரை எனக்குத் தெரியும். அடியேன் மாணவனாகவிருந்த அக்குறணை அல்-ஜாமிஅஹ் அல்-ரஹ்மானிய்யாவில் 1990இன் இறுதிப் பகுதியில் அவர் மாணவராக சேர்ந்தார். அந்நாள் முதல் இந்நாள் வரை அவர் தொடர்பு எனக்குண்டு. அருமையானவர், அன்பானவர், பண்பானவர், பணிவானவர், துடிப்பானவர், பழகத்தக்கவர்.

அஷ்;-ஷைக் ஏ.ஜே. முஹம்மத் ரிகாஸ் அவர்களின் இம்முயற்சி தனது அறிவை, அனுபவத்தை அடுத்தவரோடு பகிர்ந்துகொள்;ளும் கைங்கர்யமாகும். இதன் பயன்பாடு பொதுவாக யாவருக்கும் விசேடமாக ஹிஃப்ல் செய்வோருக்கும் ஹாஃபில்களுக்குமாகும். இவ்வரிய பணியின் மூலம் வல்ல அல்லாஹ்வின் முடிவுறாத அறிவுக் கருவூலம் உன்னத அல்-குர்ஆனுக்கு ஒரு பணிவிடை செய்துள்ளார். அதனால் அவரது அந்தஸ்து உயர்ந்து போகிறது.

1983இல் ஹிஃப்ல் அல்-குர்ஆன் மாணவராக இருந்த காலை சிறியவனாகிய நானும் இப்படியான முயற்சியொன்றை தொட்டுத் தொடங்கினேன். ஓரளவு செய்யக்கிடைத்தது. இடை நடுவில் நின்றுபோனது. இந்த வரிகளை எழுதும் தருணத்தில் அந்த வரிகளும் எந்தன் மனத் திரையில் வந்து போகின்றன. அந்த ஏட்டையும் ஒரு தடவை சுகமான நினைவுகளுடன் புரட்டிப் பார்க்கிறேன். ஒரே மாதிரியான வசனங்கள், சொற்றொடர்கள் விடயத்தை எனக்கும் என் சக மாணவர்களுக்கும் அறிமுகம்செய்து, வழிகாட்டிவைத்த உஸ்தாத் ஏ.ஏ. கலீல் அல்-ரஹ்மான் அவர்களையும் இத்தறுவாயில் நெஞ்சு நிறைய நன்றிப் பெருக்குடன் நினைத்து மகிழ்கின்றேன், பிரார்த்தனை புரிகின்றேன்.

ஒரு பயனுள்ள படைப்புக்கு அணிந்துரை அளித்து அகம் குளிரும் அதே வேளை அல்லாஹ் தஆலாவின் அற்புத அருள் வேதத்துக்கான பணிவிடை ஒன்றில் எங்கோ ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பையிட்டு ஆத்ம திருப்தியுறுகிறேன். அல்-ஹம்து லில்லாஹ்.

அல்-துர் அல்-நலீம் பீ முதஷாபிஹ் அல்-குர்ஆன் அல்-அலீம் கொண்டு சகலரும் பயனுற வேண்டும். இந்த படைப்பாக்கம் மூலம் அதன் ஆசிரியர் ஆவலுடன் எதிர்பார்க்கும் நோக்கம் கிட்ட வேண்டும். அள்ள அள்ள வற்றாத அறிவுக் கடல் அல்-குர்ஆனுக்கு, அதன் ஹிஃப்லுக்கு, ஹாபில்களுக்கு ஆற்றப்பட்டுள்ள ஒரு மகத்தான சேவையாக இத்தொகுப்பை ரஹ்மான் ஏற்றருள வேண்டும். பொய்யா வானம் தொய்யா மழையாக நூலாசிரியரின் எழுதுகோல் மனித நன்மைக்காக இயங்கிக்கொண்டிருக்க வேண்டும். இது இவ்வடியேனின் அவாவும் துஆவும்.


எச். அப்துல் நாஸர்.
229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

1436.08.01
2015.05.20




 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page