Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Translations

காலம் தான் நாடியதைச் செய்யட்டும் விட்டுவிடு!


‘دع الأيام تفعل ما تشاء’ (காலம் தான் நாடியதைச் செய்யட்டும் விட்டுவிடு) எனும் இமாம் ஷாபிஈ (ரஹிமஹூல்லாஹ்) அவர்களின் காலத்தால் அழியாத கவிதையை 2017.10.15 அன்று பதிவேற்றி இருந்தேன். சில பெரியவர்கள் அந்த கவிதையை தமிழில் மொழிபெயர்க்குமாறு கேட்டிருந்தனர். அதன் தமிழாக்கம் இதோ.

அரபு மொழியில் கொடுமுடியை எய்திருந்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹூல்லாஹ்) அவர்களின் கவிதையொன்றை அதன் இலக்கியச் சுவை குன்றாமல் பொருள் குலையாமல் மொழிமாற்றம் செய்வது அறவே இயலாத காரியம். அதிலும் என்னைப் போன்றவர்கள் நினைத்தும் பார்க்க முடியாத விடயம். இருந்த போதிலும் ஒரு முயற்சி செய்துள்ளேன். அரபும் இமாம் ஷாபிஈ (ரஹிமஹூல்லாஹ்) அவர்களும் இச்சிறியவனை மன்னித்தருள வேண்டும்.

காலம் தான் நாடியதைச் செய்யட்டும் விட்டுவிடு

காலம் தான் நாடியதைச் செய்யட்டும் விட்டுவிடு
விதியின் தீர்ப்பா சந்தோஷப்படு

காலத்தின் சோதனை கண்டு பதறாதே
காசினியின் சோதனைகள் நிரந்தரமற்றவை

திகில்களில் உறுதி படைத்த மனிதனாயிரு
உன் குணம் ஈகையும் நிறைவேற்றலுமாயிருக்கட்டும்

உன் குறைகள் படைப்புகள் மத்தியில் அதிகமா
அவற்றுக்கு உறையிருப்பது உனக்கு ஆனந்தமா

கொடையால் மறைந்துகொள்
கொடை சகல குறைகளையும் மறைக்குமாம்

சத்துருக்களுக்கு ஒருபோதும் தலைக்குனிவைக் காட்டிடாதே
சத்துருக்களின் அவலமகிழ்வு சோதனையாகும்

கஞ்சனிடம் கொடையை நம்பாதே
தாகித்தவனுக்கு நெருப்பில் தண்ணீர் கிடையாது

தாமதம் உன் ரிஸ்கை குறைப்பதுமில்லை
களைப்பு ரிஸ்கை கூட்டுவதுமில்லை

கவலையும் நிலையற்றது மகிழ்ச்சியும் நிலையற்றது
வறுமையும் நிலையற்றது செழிப்பும் நிலையற்றது

திருப்தியுறுகிற இதயம் கொண்டவனாக நீ இருந்தால்
நீயும் உலகையே உரிமையாக வைத்திருப்பவனும் சமமே

எவரது முற்றத்தில் மரணம் இறங்கிவிட்டதோ
அவரை பூமியும் காப்பாற்றாது வானமும் காப்பாற்றாது

அல்லாஹ்வின் பூமி விசாலமானதெனினும்
விதி இறங்கிவிட்டால் வெளியும் நெருக்கடியாகிவிடும்

காலம் ஒவ்வொரு பொழுதிலும் துரோகமிழைக்கட்டும் விட்டுவிடு
மருந்து மரணத்தை விட்டு (உன்னை) அப்புறப்படுத்தாது

அபூ அவ்வாப்
1439.01.28
2017.10.19


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page