Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Translations

இரத்தம் தோய்ந்த கைகள்


ஆங்கிலத்தில்: கலாநிதி மஹாதிர் முஹம்மத்
முன்னாள் மலேஷிய பிரதமர்

தமிழில்: அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
தலைவர் - ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
பொதுச் செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


கலாநிதி மஹாதிர் முஹம்மத் மலேஷியாவின் முன்னாள் பிரதமராவார். சுமார் 22 ஆண்டுகள் பிரதமர் பதவியிலிருந்த அவர் அண்மைக் கால முஸ்லிம் நாட்டு தலைவர்களுள் குறிப்பிட்டுச் சொல்லப்படக்கூடிய ஒருவர். மலேஷியாவை பல வகைகளிலும் முன்னேற்றுவதில் வெற்றிகண்ட அவர் தனது சிந்தனைகள், பேச்சுக்கள், செயல்கள் மூலம் உலக அரங்கில் குறிப்பாக முஸ்லிம் உலகில் பிரபல்யம் பெற்றவர். சிறந்த பேச்சாளரான கலாநிதி மஹாதிரின் முக்கிய உரைகள் நூலுருவில் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 2005.09.09 அன்று நடைபெற்ற சுஹாகாம் மனித உரிமைகள் மாநாட்டில் அவர் ஆற்றிய கருத்தாழமிக்க ஆற்றொழுக்கான ஆங்கில உரை சமூகத்தின் நலன் கருதி தமிழாக்கப்பட்டு இங்கு தரப்படுகின்றது. மனித உரிமைகள், மனித உரிமை மீறல்கள், பூகோளமயமாக்கல் மேலும் மனித உரிமைகள் எனும் பெயர்களில் அமெரிக்காவும், ஐரோப்பாவும் உலக மட்டத்தில் ஆடி வருகின்ற கபட நாடகங்கள் பற்றியெல்லாம் வரலாற்று ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டுகின்ற சரித்திர முக்கியத்துவமிக்க இவ்வுரையை மாநாட்டில் அவர் நிகழ்த்திக் கொண்டிருக்கும்போதே அதில் கலந்துகொண்டிருந்த பல வெளிநாட்டு தூதுவர்கள் உறைக்கும் உண்மைகளை பொறுத்துக்கொள்ள முடியாது வெளிநடப்புச் செய்தமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.

எனக்கிருப்பதைவிட உங்களுக்கு அறிவும் அனுபவமுமுள்ள ஒரு விடயத்தில் உரையாற்றும் இந்த கௌரவத்துக்காக சுஹாகாமுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.

நீங்கள் மனித உரிமைகள் பற்றி அக்கறை கொண்டுள்ளீர்கள். ஒரு நாகரிகமடைந்த சமூகம் என்ற வகையிலும் தேசம் என்ற வகையிலும் நாம் எல்லோரும் நம் நாட்டிலும் உண்மையில் உலகிலும் மனித உரிமைகள் பற்றி கட்டாயம் அக்கறை கொண்டிருப்பதுதான் சரியானதாகும்.

மனித உரிமைகள் இன்னும் நல்லதொரு வாழ்க்கை தரத்துக்கு பங்களிப்புச் செலுத்த முடியும் என்பதனால் அவை பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு சிலரின் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன என நீங்கள் சந்தேகிப்பதனால் ஓரிலட்சம் மக்களை கொல்வது முரணாக தோன்றுகின்றது. எனினும் மனித உரிமைக்காக குரல் கொடுப்போரின் தீவிரம் பாதுகாக்கப்பட்ட மக்கள் தொகையை விட அதிகமான மக்களின் உரிமைகளும் உயிர்களும் தடுக்கப்படுவதற்கு இட்டுச் செல்கின்றது. நாம் நமது ஒப்பிட்டுப் பார்க்கும் அறிவை இழந்திருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது.

சிந்திக்க முடியாத, அற்ப ஆசைகள், உணர்வுகளின் செல்வாக்கை தோற்கடிக்க முடியாத இறைவனின் ஏனைய படைப்புகளிலிருந்து மனித சமூகம் மென்மேலும் தன்னை பிரித்தறிய முயல்வதே நாகரிக முன்னேற்றங்களுடன் சரியானது. பலமிக்கவருக்கும் சக்தி வாய்ந்தவருக்கும் கட்டுப்படுதல் விலங்குலகிலும், ஆதி கால மனித சமூகங்களிலும் சரியானதாக இருந்தது, எனினும் சமூகம் அதிகமாக முன்னேறும் அளவிற்கு சிந்தித்து, அறிந்து, சரியையும் பிழையையும் பிரித்தறியும் மேலும் வெறும் அற்ப உணர்வுகள், ஆசைகளை விடுத்து, அதிக சிந்திக்கும் ஆற்றலைக் கொண்டு சரிக்கும் பிழைக்கும் இடையில் தெரிவு செய்யக்கூடிய திறமை கூடுதலாக இருக்க வேண்டும்.

சரியான தெரிவுகளைச் செய்யும் ஆற்றலைப் பொருத்தமட்டில் இன்றைய உலகு இன்னும் கூட முன்னேற்றமடையாமல் உள்ளது. உதாரணமாக அதி நாகரிகமடைந்தோரென வாதிடுவோர் தம் எதிரிகளின் நடவடிக்கைகளின் விளைவாக அவர்களுக்கேற்படும் துரதிர்ஷ்டம் பிழையானது. ஆனால் அவர்களின் எதிரிகளை அவர்கள் துன்புறுத்தும் துரதிர்ஷ்டம் சரியானது. ஈராக்கில் 1700 அமெரிக்கப் படையினர் மரணித்தது தொடர்பான அக்கறையிலிருந்தும் கோபத்திலிருந்தும் இது காணப்படுகிறது. என்றாலும் ஈராக்கில் இராணுவம் ஆக்கிரமித்து தொடர்ந்திருப்பதன் விளைவாகவும் ஜனநாயக தேர்தல்களை விதிப்பதன் மூலம் தோற்றுவிக்கப்பட்ட யுத்தத்தின் விளைவாகவும் ஏற்பட்ட இதை விட நூறு மடங்கு அதிகமான ஈராக்கியர்களின் மரணம் பிரஸ்தாபிக்கப்படக் கூட இல்லை.

ஈராக்கிய மரணங்கள் குறித்த கணக்கே இல்லை. என்றாலும் அமெரிக்கப் படையினரின் ஒவ்வொரு மரணமும் உலகுக்கு அறிவிக்கப்படுகின்றது. இவர்கள் கொல்லப்பட கட்டாயம் எதிர்பார்க்கப்படும் படைவீரர்கள். எனினும் அமெரிக்க நடவடிக்கை நிமித்தம் அல்லது ஈராக்கில் அமெரிக்கா உண்டுபண்ணியுள்ள உள்நாட்டு போர் நிமித்தம் மரணிக்கும் ஈராக்கியர்கள் அப்பாவி பொதுமக்கள். சத்தாம் ஹுஸைனின் சர்வாதிகாரத்தின் கீழ் இவர்கள் உயிரோடு இருப்பர்.

நீங்களும் நானும் ஈராக்கியர்களின் மரணச் செய்திகளை மன அமைதியுடன் அது சரியானதாகவும் நீதியாகவும் இருப்பது போல் படிக்கின்றோம். இந்த அநியாயம் குறித்தோ, வாழ்வதற்கும் மேலும் அரச ஏற்பாட்டிலான பயங்கரம் உட்பட பயங்கரத்திலிருந்து விடுபட்டிருப்பதற்குமான ஈராக்கியரின் உரிமைகளின் துஷ்பிரயோகம் குறித்தோ நீங்களும் நானும் கோபத்துடனும் பயங்கரத்துடனும் மறு நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை.

போலி நடிப்பில் ஈராக் மீது படையெடுப்பதற்கு முன் பொருளாதார தடை ஈராக் மக்களுக்கு மருந்து, உணவை மறுத்ததன் விளைவாக ஐந்து இலட்சம் சிறுவர்கள் உயிரிழந்தனர். அக்காலை அமெரிக்க இராஜாங்க செயலாளராக இருந்த மெடலின் அல்ப்ரைட்டிடம் சத்தாமின் சர்வாதிகாரத்தை நிறுத்துவதற்கு செலுத்தப்பட்ட கிரயம் அதி கூடியதாக இருக்கவில்லை என அவள் யோசித்ததுண்டா என பத்திரிகைகளினால் கேட்கப்பட்ட போது அது கடுமையானதாக இருந்தது, என்றாலும் கிரயம் (ஐந்து இலட்சம் சிறுவர்களின் மரணம்) அதற்கு பெறுமதியானதாக இருந்தது என கூறினார்.

இது நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை மனித உரிமைகளில் அக்கறையுள்ளோர் எங்கிருந்தனர்? பிரித்தானியா, அமெரிக்காவின் துஷ்பிரயோகங்களை அவர்கள் வெளிக்கொணர்ந்தனரா? அவர்களின் சொந்த அரசாங்கங்களுக்கு எதிராக தமது எதிர்ப்பைத் தெரிவித்தனரா? இல்லை. அது எதிரிகள் கொல்லப்படுகின்றனர் என்பதனாலாகும். அது ஏற்புடையது. எனினும் அவர்களது சொந்த மக்கள் கொல்லப்படக்கூடாது. அவர்களைக் கொல்வது பயங்கர நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.

பயங்கர நடவடிக்கை என்பது என்ன? அது மக்களை திகிலூட்டும் ஏதோ ஒரு செயல் இல்லையா? குண்டு போடப்பட்டு கொல்லப்படும் திட்டத்தில் மக்கள் பயமுறுத்தப்படுவதில்லையா? குண்டுகளை வெடிக்கச்செய்வதன் மூலம் கொல்லப்படவுள்ளோர் தலைகள், அவயவங்களிலிருந்து தமது உடல்கள் பிரிக்கப்பட்டு போகும் என அறிவர். சிலர் சந்தேகமின்றி உடனடியாக மரணிப்பர். ஆனாலும் பலர் உடனடியாக மரணிப்பதில்லை. தமது அவயவங்கள் உடல்களிலிருந்து வேறாக்கப்பட்டிருப்பதையும் கிழிக்கப்பட்டுள்ள வயிற்றினூடாக உள்ளுறுப்புக்கள் தரையில் சிதறியிருப்பதையும் அவர்கள் உணர்வர். அவர்கள் கடும் வலியுடன் உதவிக்காகக் காத்திருப்பர். அந்த உதவி சில வேளை வராமலும் இருக்கலாம். அடுத்த குண்டை அல்லது ராக்கட்டை எதிர்பார்த்து மீண்டும் பயங்கரத்தை அவர்கள் அனுபவிப்பர். தப்பியவர்களோ நாளையோ, நாளைய மறு தினமோ, ஒரு வாரம், மாதம் கழித்தோ மீண்டும்; குண்டு வீசும் விமானங்கள் வரும் போது தனிப்பட்ட முறையில் தமக்கு நேரிடக்கூடியதின் பயங்கரத்தை அறிவர்.

தமது தலைகளும் அவயவங்களும் உடல்களிலிருந்து பெரும்பாலும் துண்டிக்கப்படுமென்பது அவர்களுக்கு தெரியும். தாம் கடுமையாக மரணிப்பர் அல்லது கடும் நோவில் குறை கை, கால்களுடன் என்றும் ஊனமுற்றவர்களாக தப்பிப்பிழைப்பர். இருந்தும் குண்டுகள் போடுவது தொடர்ந்து கொண்டிருக்கும். வளைகுடா யுத்தத்துக்கும் ஈராக் ஆக்கிரமிக்கப்படுவதற்கும் இடையில் பத்து ஆண்டுகள் ஈராக்கில் மக்கள் கடும் அச்சத்தில் வாழ்ந்தனர். அவர்கள் பயமுறுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஏதும் உரிமைகள் இருக்கின்றனவா? உலக மக்கள் அக்கறை காட்டினார்களா?

அவர்களின் இலக்குகளாக மாத்திரம் இருந்த மக்களையே கொல்வதற்கும் ஊனமுறச் செய்வதற்கும் தமது அதி முன்னேற்ற ரக விமானங்களில் குண்டுகள் போட பொத்தான்களை அழுத்திக்கொண்டு எதிர்ப்புகளின்றி பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் பிரித்தானிய, அமெரிக்க குண்டுவீச்சு விமானமோட்டிகள் வந்தனர். இக்கொலைகாரர்கள் அது தான் அவர்கள் என்பதனால் பணி வெற்றிகரமாக முடிவுற்றதை (Mission Accomplished) கொண்டாட திரும்பிச் செல்வர்.

யார் பயங்கரவாதிகள்? கீழேயிருந்த குண்டு போடப்பட்ட மக்களா அல்லது குண்டு போட்டவர்களா? யாரின் உரிமைகள் பிடுங்கப்பட்டுள்ளன?

மனித உரிமைகள் தொடர்பில் இரு கொள்கைகள் அல்ல பல கொள்கைககள் இருக்கின்றன என்பதனால் நான் இதனை கூறுகின்றேன். சிறைக் கைதிகள், இந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வேலையாளர்கள் நன் முறையில் நடத்தப்படுகின்றனரா இல்லையா என்பது குறித்து நாம் உரிய முறையில் அக்கறை செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் அவரது வாக்குரிமையை பிரயோகிக்க முடிகின்றதா இல்லையா, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு ஆரோக்கியத்துக்கு உகந்ததா இல்லையா, உண்மையில் விசாரணையின்றி தடுத்து வைத்தல் மனித உரிமை மீறலா இல்லையா என்பது பற்றி நாம் அக்கறை கொள்ள வேண்டும்.

ஈராக்கிய, ஆப்கானிய, பனாமா, நிகரகுவா, சிலி, ஈக்குவடோர் அப்பாவி மக்களின் இரத்தத்தினால் தமது கைகளைத் தோய்த்துக் கொண்டுள்ளோர், பனாமா, சிலி, ஈக்குவடோர் நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொன்றவர்கள், பனாமா சட்டங்களின் கீழ் அல்லாது தமது சொந்த நாட்டு சட்டத்தின் கீழ் நொரேகாவை கைது செய்து விசாரிக்கும் பொருட்டு சர்வதேச சட்டத்தை புறக்கணித்துவிட்டு பனாமாவை ஆக்கிரமித்து நூற்றுக் கணக்கான மக்களை கொன்று குவிக்கும் இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டோர், இரத்தம் தோய்ந்த கரங்களுடையோர் எமது நாட்டில் மனித உரிமைகள் பற்றி சந்தேகப்படுவதற்கும் உலக நாடுகளில் வருடாந்தம் மனித உரிமைப் பதிவை பட்டியலிட்டு தரப்படுத்துவதற்கும் உரிமை உள்ளவர்கள் தானா?

தமது நட்பு நாடுகளில் அப்பட்டமான மனித உரிமை துஷ்பிரயோகங்களை இவர்கள் சந்தேகத்துடன் பார்க்கவில்லை. இந்த நாடுகள் மனித உரிமை துஷ்பிரயோகங்களில் இஷ்டப்படி ஈடுபடுவதற்கு இவர்கள் உண்மையில் உதவிகள் வழங்குகின்றனர்.

மக்களுக்கு எதிராக போர்தொடுப்பதற்கு இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், ஹெலிகொப்டர் யுத்தக் கப்பல்கள், ஐதாக்கப்பட்ட யுரேனியம் பூசப்பட்ட ரவைகள் வழங்கப்படுகின்றன. இம்மக்கள் பதில் தாக்குதல் நடத்துவதற்கு உள்ள ஒரே வழி தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்வது தான். மேனிக் கவசம் மூலம் இஸ்ரேலிய படை வீரர்கள் நன்கு பாதுகாக்கப்பட்டனர். வேகமாக வந்து பாலஸ்தீனியர்களுக்கு குண்டு போட்டு குடியிருப்பவர்கள் உள்ளே இருக்கும் நிலையிலேயே பாலஸ்தீனியர்களின் வீடுகளை நிர்மூலமாக்குவதற்காக கவசத் தாங்கிகள் கவச புல்டோசர்களை அவர்கள் இயக்கினர்.

இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. எனினும் ஏனைய நாடுகளிலுள்ள பேசப்படுகின்ற அணு ஆராய்ச்சி நிலையங்களை குண்டு தாக்குதல் நடத்துவதற்கு குண்டு வீச்சு விமானங்கள் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டன. அமெரிக்க, பிரித்தானிய நடவடிக்கைகளுடன் இஸ்ரேலிய குண்டுகளும் ராக்கெட்களும் உயிருடன் இருந்த பாலஸ்தீனியர்களையும் ஈராக்கியர்களையும் அழித்தொழித்தன. விரைவில் சிரிய மக்களையும் ஈரானிய மக்களையும் அழித்தொழிக்கும். அவர்கள் கொன்ற மக்களுக்கு உரிமைகள் இருக்கின்றன, அவர்களது உயிர்களுக்கும் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் மனித உரிமைகள் உள்ளன என்பதை கொஞ்சம் கூட அவர்கள் கவனத்திற் கொள்ளவில்லை.

அத்துடன் இப்பயங்கரவாத நாடுகளின் வேறு நண்பர்களும் இருக்கின்றனர். அவர்கள் அவர்களது சொந்த மக்களின் உரிமைகளை துஷ்பிரயோகம் செய்கின்றனர். அவர்களின் மக்களை சிறைபடுத்தியும் நீதியான விசாரணையின்றி மரண தண்டனை வழங்கியும் மிகச் சாதாரண ஜனநாயக உரிமைகளைக் கூட அவர்களுக்கு மறுக்கின்றனர். ஆனால் இதற்காக அவர்கள் விமர்சிக்கப்படுவதுமில்லை, கண்டிக்கப்படுவதுமில்லை.

இவ்வல்லரசுகளுடன் நாடுகள் சிநேகமில்லாத போது, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பணத்தைச் செலவிடவும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவும் தமக்குக் கட்டுப்பட விரும்பும் அபேட்சகர்கள் மாத்திரம் வெற்றி பெறுகிறார்கள் என்பதை உறுதி செய்யவும் அவர்களுக்கு உரிமை இருப்பதாக வல்லரசுகளின் அரசாங்கங்கள் வாதிடுகின்றன. சுயாதீனமாக இருக்க விரும்பும் வேட்பாளர்கள் மறுக்கப்பட்டு இவ் அரசுகளுக்கு வழிப்பட தயாராக இருப்போர் மாத்திரம் போட்டியிட்டு வெல்ல அனுமதிக்கும் தேர்தல்களை ஏற்கனவே நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லையென நாடுகள வாக்குறுதியளித்த காலம் ஒன்றிருந்தது. இதன் விளைவாக பல அடக்குமுறை அரசுகள் தோன்றி அவை பயங்கர கொடூரங்களைச் செய்தன. கம்போடியா, பொல் பொட் ஆகியவை நினைவில் உள்ள ஓர் உதாரணம். நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமைக் கொள்கை காரணமாக இரண்டு இலட்சம் கம்போடியர்கள் பயங்கர மரணங்களை தழுவினர்.

தலையிடுவதற்கு ஒரு சூழ்நிலை இருக்கிறது. ஆனால் ஒரு சூழ்நிலை எப்போது இருக்கின்றது என்பதை தீர்மானிப்பது யார்? இந்த உரிமை ஒரு குறிப்பிட்ட வல்லரசுக்கு கொடுக்கப்படவுள்ளதா? அப்படியாயின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட நாட்டின் மிகுந்த நலனுக்காக அந்த வல்லரசு செயற்படும் என்ற உறுதி எமக்கு வழங்கப்படுமா? சத்தாம் ஹுஸைன் ஊடகத்தினால் விசாரிக்கப்பட்டு தனது மக்களை கொடுமைப்படுத்திய குற்றவாளியாக காணப்பட்டார். ஆனால் ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கு அது சாட்டாக இருக்கவில்லை. ஈராக் பேரழிவு ஆயுதங்களினால் உலகை அச்சுறுத்தியமை சாட்டாக இருந்தது. குறிப்பாக சத்தாம் கட்டளையிட்டு 45 நிமிடங்களில் பிரித்தானியாவை தாக்க முடியுமான பேரழிவு ஆயுதங்கள் கொண்டு பிரித்தானியா அச்சுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

நம் யாவருக்கும் தெரிந்தது போல் அது ஒரு பொய்யாக இருந்தது. சத்தாமிடம் பேரழிவு ஆயுதங்கள் இருந்தன எனும் குற்றச்சாட்டு உண்மையானது தானா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு வழங்கப்பட்ட எல்லா நிறுவனங்களும் அதனை எண்பிக்க முடியாது போயின. அமெரிக்காவையோ அல்லது பிரித்தானியாவையோ அல்லது உலகையோ சத்தாம் அச்சுறுத்த முடியுமான பேரழிவு ஆயுதம் இருக்கவில்லை என்றே அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் உளவு நிறுவனங்கள் கூட கூறின. சத்தாமினதும் அவருடைய மக்களினதும் தடையின்றி மேற்கொள்ளப்பட்ட முழுமையான தேடுதல் முடிந்து பல மாதங்கள் கழிந்தும் இன்றும் பேரழிவு ஆயுதம் கண்டு பிடிக்கப்படவில்லை.

என்றாலும் சொல்லப்படும் அடக்குமுறை அரசாங்கத்தை அகற்ற வேண்டும் என்பதற்காக ஈராக் மீது படையெடுப்பதென அமெரிக்காவும் பிரித்தானியாவும் தன்னிச்சையாக முடிவு செய்து கொண்டன. படையெடுப்பின் விளைவு சத்தாம் என்றும் குற்றஞ்சொல்லப்பட்டதை விட இன்னும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுமுள்ளனர். இன்னும் மோசம் என்னவெனில் ஈராக்கியர்களை பாதுகாக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படும் அரசுகள் ஈராக்கியர்களையும் ஏனையோரையும் குவான்டனாமோ, அபூகுரைப் மேலும் வேறு இடங்களிலும் தடுத்து வைத்து சித்திரவதை செய்வதன் மூலம் மனித உரிமைகள் குறித்த சர்வதேச சட்டங்களை மீறியுள்ளனர்.

எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக பிற நாடுகளின் உள் விவகாரங்களில் எப்போது தலையிடுவது என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்த பேரரசுகளுக்கு மாத்திரம் இருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா?

மலேஷியா அதன் எல்லைகளுக்குள் மனித உரிமைகள் பற்றி அக்கறையுடன் உள்ளது. அதன் எல்லைகளுக்குள் மனித உரிமை துஷ்பிரயோகங்கள் இல்லையென்பதை மேற்பார்வை செய்வதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் என்றே ஓர் அமைப்பாக சுஹாக்காமை அது நிறுவிக்கொள்வதற்கு முன் வெளி அரசுகளின் தலையீடு மலேஷியாவிற்கு தேவையில்லை.

மலேஷிய மக்கள் ஓரளவு சந்தோஷமாக இருப்பதாகத் தெரிகின்றது. அவர்கள் வேலை செய்தும் வியாபாரம் செய்தும் அவர்கள் விரும்புகின்ற அளவு பணம் அவர்களுக்கு சம்பாதிக்க முடியும். சுற்றித்திரிவதற்கும் வெளிநாடு போவதற்கும் கூட சுதந்திரத்தில் கட்டுப்பாடு இல்லை.

அவர்களுக்கு அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அவை அரசாங்கத்திற்கு ஆதரவானவையோ அல்லது எதிரானவையோ அவற்றில் அவர்கள் இணைந்து கொள்ள சுதந்திரம் உண்டு. அரசாங்கத்தை ஆதரிக்கின்ற அல்லது எதிர்க்கின்ற செய்தித் தாள்களை அவர்கள் வாசிக்கலாம். உள்நாட்டு இலத்திரனியல் ஊடகம் அரசாங்கத்திற்கு ஆதரவானதாக இருந்த போதிலும் அரசாங்கத்தை பெரும்பாலும் விமர்சிக்கின்ற வெளிநாட்டு ஒளி, ஒலிபரப்புகளை பார்ப்பதிலிருந்தோ அல்லது கேட்பதிலிருந்தோ யாரும் தடுக்கப்படுவதில்லை.

வெளிநாட்டு பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் கட்டுப்பாடுகளின்றி கிடைக்கக்கூடியவையாயுள்ளன. உண்மையில் International Herald Tribune, Asian Wall Street Journal போன்ற பல வெளிநாட்டு பத்திரிகைகள் மலேஷியாவில் அச்சிடப்பட்டு மலேஷியர்களுக்கு கட்டுப்பாடுகளின்றி கிடைக்கக்கூடியவையாயுள்ளன. அத்துடன் அபகீர்த்தித் தாங்கிய பொய்கள் திரையிடப்பட்டாலும் கூட யாருமே தடுத்து நிறுத்த முடியாது தோன்றுகின்ற இன்டர்நெட்டும் உள்ளது.

மலேஷியாவில் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் தவறாது தேர்தல்கள் இருக்கும். யாரும், எல்லோரும் இத்தேர்தல்களில் பங்குபற்றலாம். இரு தரப்பினரது நடவடிக்கைகளும் பலமானவை, காட்டமானவை. ஜனநாயகமற்ற செயற்பாடுகளுக்காக அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இருந்தும் பல எதிர்த் தரப்பு வேட்பாளர்கள் வெற்றியீட்டுவதை முடிவுகள் தெளிவாகக் காட்டும். உண்மையில் பல அரசுகள் எதிர்க் கட்சிகளிடம் தோற்றுப்போயுள்ளன. ஒரு குறித்த நாட்டில் நடைபெறுவது போல் வெற்றிபெறும் எதிர்க் கட்சி அபேட்சகர்களில் ஒருவர் கூட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு சில சிறிய தேர்தல் ஒழுங்கு மீறல்கள் குற்றவாளியாகக் காணப்பட்டு நாடாளுமன்றத்தில் அவரது ஆசனத்தை பெறுவதிலிருந்து தடுக்கப்படவில்லை.

இத்தனையுமிருந்தும் நான் பிரதமராக பதவி வகித்த 22 வருடங்களில் சர்வாதிகார அரசாங்கம் இருந்ததாக மலேஷியா குற்றஞ்சாட்டப்படுகின்றது. பிரதமராக கடமையேற்றதைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தோரை நான் விடுதலை செய்திருந்ததும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை நடுத்தரமாக நான் பாவித்திருந்ததும் நான் சர்வாதிகாரியாகவும் மனித உரிமை து‘;பிரயோகக்காரனாகவும் இருந்தேன் என்ற குற்றச்சாட்டை குறைக்காதா?

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தாதிருப்பதும் விசாரணையின்றி ஒருவரை தடுத்து வைக்காதிருப்பதும் இரண்டுமே உதவ மாட்டா. ஆகவே முன்னாள் பிரதி பிரதமர் ஒருவர் நீதிமன்றில் குற்றம்சாட்டப்பட்டு ஒன்பது வழக்கறிஞர்களால் அவர் சார்பில் எதிர்வாதம் புரியப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை ஊடாக குற்றவாளி என காணப்பட்ட போது சொல்லப்பட்டதெல்லாம் அங்கு சதித்திட்டம் ஒன்று இருந்தது, நீதிமன்றம் செல்வாக்குச் செலுத்தப்பட்டது, விசாரணை ஒரு பாசாங்காக இருந்தது என்பது தான். எனவே நீங்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தினாலும் விமர்சிக்கப்படுகிறீர்கள், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தாவிட்டாலும் விமர்சிக்கப்படுகிறீர்கள்.

உலகம் முழுவதுமுள்ள மனித நடத்தைக்கான இந்த சுயநியமன நீதிபதிகளின் பார்வையில் அவர்களுக்கு உங்களை பிடிக்காவிட்டால் நீங்கள் என்ன செய்தாலும் நீங்கள் ஒருபோதும் சரியானவர்களாக இருக்கமாட்டீர்கள். அவர்களுக்கு உங்களை பிடித்தால் உங்களுக்கு சார்பான நகைப்புக்கிடமான அடிப்படைகளில் கூட உள்ள ஒரு நீதிமன்றத் தீர்ப்பு சரியானதாக இருக்கும்.

இவர்கள் தான் மனித உரிமைகளுக்கான அடிப்படை விதிகளை வகுக்கும் உரிமையை தமக்கென எடுத்துக்கொள்வதாக தற்போது தெரிவதுடன், உலகின் மனித உரிமை தகைமைகளை கண்காணிப்புச் செய்பவர்களாக தம்மைத் தாமே நியமித்துக்கொண்டுமுள்ளனர்.

இப்போது பூகோளமயமாக்கல் என தாம் அழைக்கின்ற ஒன்றை இதே நபர்கள் தான் உருவாக்கியுள்ளனர். முதலில் பூகோளமயமாக்கலை முன்மொழிவதற்கும் வியாக்கியானம் செய்வதற்கும் யாருக்கு உரிமையுண்டு? பூகோளமயமாக்கல் வறிய நாடுகளின் எண்ணக்கரு அல்ல என்பது நிச்சயம். இது செல்வந்தர்களின் எண்ணத்தில் பிறந்து அவர்களினால் வியாக்கியானம் செய்யப்பட்டு துவக்கிவைக்கப்பட்டது.

பூகோளமயமாக்கப்பட்ட உலகு எல்லைகளற்றதாக இருக்கப்போகிறது. ஆனால் நாடுகள் எல்லைகளைக் கொண்டிராவிட்டால் நிச்சயமாக முதலில் நடக்க வேண்டியது மக்கள் எவ்வித நிபந்தனைகளும் ஆவணங்களும் கடவுச்சீட்டுகளும் இன்றி ஒரு நாட்டிலிருந்து இன்னொன்றுக்கு செல்ல முடியுமாக இருக்கும். வறிய நாடுகளிலுள்ள ஏழை மக்கள் தொழில்களும் வாய்ப்புகளும் உள்ள செல்வந்த நாடுகளுக்கு குடிபெயர முடியுமாயிருத்தல் வேண்டும்.

ஆனால் பூகோளமயமாக்கல், எல்லையில்லாமை என்பவை மக்களுக்கானவையல்ல் முதலுக்கும் நாணய வர்த்தகர்களுக்கும் கூட்டுத்தாபனங்களுக்கும் வங்கிகளுக்கும் பேசப்படும் மனித உரிமை துஷ்பிரயோகங்கள், ஜனநாயகமின்மை, இவை போன்றவை குறித்து அக்கறையுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. உங்களால் பார்க்கக்கூடியதாயுள்ளது போல் ஓட்டம் ஒரு திசையில் மாத்திரம் தான். எல்லையைக் கடத்தல் செல்வந்தர்களினால் செய்யப்படும். ஆகவே தான் அவர்களுடைய வியாபாரம், வங்கிகள், நாணய வியாபாரிகள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கான அவர்களின் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பயன் கொடுக்க முடியும்.

எதிர் திசையில் ஓட்டங்கள் இருக்கமாட்டா - வறிய நாடுகளிலிருந்து செல்வந்த நாடுகளுக்கு; தொழில்களைத் தேடி ஏழை மக்களின் ஓட்டம், குறிப்பிட்ட கட்சிகளை வளர்ப்பதற்காக ஊடகம் சுய தணிக்கையில் ஈடுபடுகின்ற, சந்தேகத்துக்கிடமான தேர்தல் முடிவுகள் சொல்வதைக்கேட்டு நடக்கும் நீதிமன்றங்களால் செல்லுபடியாக்கப்படுகின்ற பணக்கார, பலமிக்க நாடுகளிலுள்ள மனித உரிமை துஷ்பிரயோகங்களில் அக்கறையுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் ஓட்டம். வெள்ளையர்களின் நாடுகளுக்கு வெள்ளையர்கள் அல்லாதோரின் ஓட்டம் இராது. அவர்கள் வென்றால் அவர்கள் கைது செய்யப்பட்டு சமுத்திரத்தின் நடுவிலுள்ள தனிமையான தீவுகளுக்கு அனுப்பப்படுவர் அல்லது அவர்கள் ஒருவாறு தரையிறங்கி விட்டால் வெட்டுக்கம்பி வேலிக்குப் பின்னால் வைக்கப்படுவர். இவையனைத்தும் மிக ஜனநாயகமானவையும் மனிதனின் உரிமைகளில் கவனம் செலுத்துவதுமாகும்!

நாம் பின்னோக்கி பார்க்க விரும்பினால் பூகோளமயமாக்கல் அது எதுவாக இருக்கின்றதோ அதுவாக நாம் அதனை புரிந்து கொள்வோம். இது எதார்த்தத்தில் ஒரு புதிய சிந்தனையே அல்ல. இனவாத ஐரோப்பியர்கள் மேற்குக்கும் கிழக்குக்கும் கடல் மார்க்கங்களை கண்டுபிடித்த போது வர்த்தகத்தை பூகோளமயப்படுத்தல் நடைபெற்றது. வர்த்தகம் அவர்களுக்குத் தேவைப்பட்டது. என்றாலும் ஆயுதம் தாங்கிய வணிகக் கப்பல்களில் துப்பாக்கிகளுடன் வந்து அவர்களின் வர்த்தகப் பங்காளிகளை ஆக்கிரமித்து வெற்றிகொண்டு காலணித்துவப்படுத்தினர்.

சுதேச மக்கள் பலயீனர்களாக இருந்தால் அவர்கள் அப்படியே கொல்லப்படுவர், கண்ட மாத்திரத்தில் சுடப்படுவர், அவர்களின் நிலம் அபகரிக்கப்பட்டு புதிய இனவாத ஐரோப்பிய நாடுகள் அமைக்கப்படும். இல்லையாயின் சூரியன் என்றும் அஸ்தமிக்காத பேரரசுகளின் பங்காளியாக அவர்கள் ஆக்கப்படுவர். அவர்களின் வளங்கள் சுரண்டப்படும், அவர்களின் மக்கள் அவமதிப்புடன் நடத்தப்படுவர்.

இன்று உலகப் படம் இனவாத ஐரோப்பியர்களால் வரலாற்றில் வியாக்கியானப்படுத்தப்படுவது போல் பூகோளமயமாக்கலின் விளைவைக் காட்டுகின்றது. ஐரோப்பியர்கள் கடற் பாதைகளைக் கண்டுபிடித்து பூகோள வர்த்தகத்தை ஆரம்பிக்கும் வரை அமெரிக்காவோ, கனடாவோ, அவுஸ்திரேலியாவோ, இலத்தீன் அமெரிக்காவோ, நியூஸிலாந்தோ இருக்கவில்லை.

ஐரோப்பியர்களுக்கு முன்னர் அராபிய, இந்திய, சீன, துருக்கிய வர்த்தகர்கள் இருந்தனர். வணிகத்தின் பொருட்டு இம்மக்கள் கடற் பயணங்கள் மேற்கொண்ட போது தோற்கடித்தலோ, காலணித்துவப்படுத்தலோ இருக்கவில்லை. ஐரோப்பியர்கள் உலக வாணிபத்தை மேற்கொண்ட போது தான் நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டன, மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன, இனப்படுகொலை நடைபெற்றது, பேரரசுகள் உருவாக்கப்பட்டன, மற்றோருக்குச் சொந்தமான நிலத்தில் புதிய இனவாத ஐரோப்பிய நாடுகள் உண்டாக்கப்பட்டன.

இவை வரலாற்று உண்மைகளாகும். இன்றைய பூகோளமயமாக்கல் பலயீனமான நாடுகள் மீண்டும் காலணித்துவப்படுத்தப்படுவதையும் புதிய பேரரசுகள் உண்டாக்கப்படுவதையும் உலகம் மொத்தமாக ஒரு நாட்டின் தலைமையின் கீழ் கொண்டு வரப்படுவதையும் விளைவாகக் கொண்டு வராதா? இன்றைய பூகோளமயமாக்கல் மனித உரிமை துஷ்பிரயோகங்களை விளைவாகக் கொண்டு வராதா?

இன்றைய உலகில் 20% மக்கள் 80% செல்வத்துக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். பெரும்பாலும் 2 பில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டொலரில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு போதுமான உணவோ, உடையோ, அவர்களது தலைகளுக்கு மேலால் ஒழுங்கான கூரையோ இல்லை. குளிர் காலத்தில் இவர்களில் பலர் உறைந்து மடிகின்றனர். பலமிக்க நாட்டு மக்கள் எமது மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்து அக்கறை கொண்டுள்ளனர்.

ஒரு தகுமான வாழ்க்கைக்குரிய அவர்களின் உரிமைகளிலிருந்து 2 பில்லியன் மக்களை தடுத்த சமனற்ற செல்வப் பங்கீட்டை பற்றி நாம் அக்கறை கொள்ள வேண்டாமா? எம்மைப் பற்றியும் எமது நாட்டில் மனித உரிமை துஷ்பிரயோகத்தை விளைவாகக் கொண்டு வந்துள்ள நினையாது இருந்திருந்து நடைபெறுகின்ற சிறு சிறு தவறுகள் பற்றியும் அக்கறை கொண்டுள்ளதாக தென்படுகின்ற அந்த மக்களின் பேராசை இந்த உரிமைகளை தடுத்திருக்கின்றது.

நம் நாட்டில் மனித உரிமை துஷ்பிரயோகங்களை நாம் கண்டிக்கத்தான் வேண்டும். எனினும் நாம் மிகவும் சுதந்திரமுள்ளவர்களாக இருக்கின்றோம், நம் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை வழங்குவதில் பாரிய அளவு வெற்றிகண்டிருக்கின்றோம் என்பதனால் எம்மை தளர்வடையச் செய்ய விரும்புவோர் பற்றி நாம் அவதானமாக இருக்க வேண்டும். எல்லா விமர்சனத்துடனும் உலகின் பலம் வாய்ந்த நாடுகளின் பெரும்பாலான நண்பர்களை விட நாம் ஜனநாயகமுள்ளவர்களாக இருக்கின்றோம்.

வறுமைப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் பற்றி அக்கறை கொள்வதை பூகோளமயமாக்குவது முழுமையான நயவஞ்சகமாகும். அக்கறை கொண்டுள்ளதாக தோன்றுகின்ற இவர்கள் மலேஷியாவில் சில வேளைகளில் நாம் முகங்கொடுக்க வேண்டிய நிலைமைக்கு அவர்கள் முகங்கொடுத்தால் அவர்களின் மறு நடவடிக்கைகளும் பதில்களும் எம்மை விட மோசமானவையாக இருக்கின்றன. குவான்டனாமோ தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் சித்திரவதை செய்யப்பட்டு இழிவுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் சிலர் சிறு அளவில் கூட பயங்கரவாதத்தோடு தொடர்பில்லாதவர்கள். அபூ குரைபில் அதியுயர் அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கு உண்மையாகவே அங்கீகாரம் வழங்கினர்.

இந்த கண்டனத்துக்குரிய செயல்களுக்கு பொறுப்பானோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உலக அபிப்பிராயத்தினால் நிர்ப்பந்திக்கப்பட்ட வேளை குற்றவாளிகள் குற்றவாளிகளாகக் காணப்படவில்லை அல்லது இலகுவான தண்டனைகள் கொடுக்கப்பட்டனர். அவர்களது சொந்த சட்டங்களின் கீழ் அவர்களின் சொந்த நீதிமன்றங்களினால் அவர்கள் விசாரிக்கப்பட்டனர். அவர்களால் பாதிக்கப்பட்டோருக்கு வழக்கறிஞர்கள் இருக்கவில்லை. குற்றங்கள் நடைபெற்ற நாடுகளுக்கு நியாயாதிக்கம் மறுக்கப்பட்டது. மொத்தத்தில் முழு சட்ட நடவடிக்கையும் பாரிய கண்துடைப்பாக இருந்தது. இருந்தும் இந்த நாடுகளும் மக்களும் தான் மலே ஷிய நீதிமன்றங்கள் அரசாங்கத்தால் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன என்றும் உரிமை துஷ்பிரயோகங்கள் மலேஷியாவில் மிதமிஞ்சி உள்ளன என்றும் வாதிடுகின்றனர். மலேஷிய அரச சார்பற்ற நிறுவனங்களும் ஊடகங்களும் ஏனையவையும் அதனை அப்படியே எடுத்துக்கொள்கின்றன.

மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும். மனித உரிமைகளுக்காக நாம் போராட வேண்டும். ஆனாலும் அடுத்தவரின் உரிமைகளை, பெரும்பான்மையினரின் உரிமைகளை நாம் எடுக்கக்கூடாது. மனித உரிமைகளின் பெயரில் நாம் அவர்களைக் கொல்லவோ, அவர்களின் நாடுகளை ஆக்கிரமிக்கவோ, அழிக்கவோ கூடாது. இஸ்லாத்தினதும் மற்றைய மதங்களினதும் பெயரில் பல தவறான விஷயங்கள் செய்யப்படுவது போலவே மிக மோசமான விஷயங்கள் ஜனநாயகம், மனித உரிமைகள் பெயரில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விடயங்கள் பற்றிய ஒரு சரியான பார்வை நமக்கு இருக்க வேண்டும். இரு தவறுகள் ஒரு சரியை உண்டாக்குவதில்லை. வெறும் தனிப்பட்டவருக்கோ, சிறுபான்மையினருக்கோ அன்றி சமூகத்துக்கு உரிமைகள் இருக்கின்றன என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

நாம் அரசியல் சுதந்திரத்தை பெற்றிருக்கின்றோம். ஆனால் பலரின் மனங்கள் இன்னும் காலணித்துவப்படுத்தப்பட்டே உள்ளன.

2008.02.08

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page