Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Condolences

ருவைஸ்தீன் ஹாஜியார் சில நினைவுகள்


1980களின் இறுதியிலும் 1990களின் ஆரம்பத்திலும் எலமல்தெனியவுக்கு அவ்வப்போது போய் வரும் பழக்கம் எனக்கிருந்தது. நான் ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாவில் பயின்றுகொண்டிருந்த காலம் அது. இரண்டு ஆண்டுகள் என்னைவிட முது நிலையராக இருந்த யூஸுப் முப்தி எலமல்தெனியவைச் சேர்ந்தவர். வியாழன், வெள்ளிகளில் இருந்திருந்து நான் அவரின் ஊருக்குப் போவதுண்டு. யூஸுப் முப்தியும் நானும் ஆத்மார்த்த நண்பர்கள். எங்களுக்கிடையிலான செலவுகளுக்கு கணக்குவழக்குப் பார்க்காதவர்கள். வாடா போடா என கூட்டாளித்தனமாக பேசிக்கொள்பவர்கள். அன்று எப்படி பேசிக்கொண்டோமோ இன்றும் அப்படித்தான். சில சமயங்களில் பழக்கதோஷத்தில் அருகிலிருப்பவர்களை சட்டைசெய்யாது வாடா போடா என பேசி பின்னர் விளக்கம் சொல்லியாக வேண்டிய நிலையும் நமக்கு ஏற்படுவதுண்டு.

ருவைஸ் தீன் ஹாஜியார் யூஸுப் முப்தியின் ஊர்க்காரர் மட்டுமல்ல, இரத்த உறவுக்காரரும்கூட. ருவைஸ் தீன் ஹாஜியார் யூஸுப் முப்திக்கு தாய் மாமன். யூஸுப் முப்தியின் சிநேகிதத்தில் நான் எலமல்தெனிய போகும்போதெல்லாம் அந்தச் சின்ன ஊரில் பெரும்பாலும் அடியேனுக்கு சந்திக்கக் கிடைக்கும் மனிதர்களுள் ருவைஸ் தீன் ஹாஜியாரும் ஒருவர். அவரின் இல்லத்தில் தேநீர் அருந்திய சந்தர்ப்பங்களும், ஒரு தடவை உணவுண்ட சந்தர்ப்பமும் உள்ளன.

எலமல்தெனிய போய் வரும் அந்தக் காலப் பகுதியில் ருவைஸ் தீன் ஹாஜியாரின் புதல்வரான மவ்லவி பர்ஹான் நாவலப்பிட்டி தார் அல்-உலூம் அல்-ஹாஷிமிய்யாவில் ஓதிக்கொண்டிருந்தார். வியாழன், வெள்ளிகளில் அவரும் சில வேளை வீடு வந்திருப்பார். இப்படி எல்லோருமாக கூடி ஆனந்தித்த நாட்கள் அவை. இளசுகளான நாம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது நம்முடன் உட்கார்ந்து ருவைஸ் தீன் ஹாஜியாரும் அளவளாவுவார். சந்தோஷமாக இருக்கும்.

மலர்ந்த முகம், உயர்ந்த உருவம், கம்பீரமான தோற்றம். இவை ருவைஸ் தீன் ஹாஜியாரின் அடையாளங்கள். மார்க்கப் பற்று, சமூகக் கவலை, தஃவத் பிரக்ஞை. இவை ருவைஸ் தீன் ஹாஜியாரின் இலட்சணங்கள்.

இப்படி ருவைஸ் தீன் ஹாஜியாருடனான தொடர்பு இருக்கும் காலத்தில் அன்னார் ஒரு முறை புத்தளத்துக்கு தப்லீக் பணியில் வந்திருந்தார். அவர் புத்தளம் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அவரை சந்திக்க சென்றேன். புத்தளம் நகரின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள நாகூர் பள்ளியில் அவரின் ஜமாஅத் தங்கி வேலை செய்துகொண்டிருந்தது. அப்பொழுது நாகூர் பள்ளி அதன் பழைய கட்டிடத்தில் நிலைகொண்டிருந்தது. நான் ருவைஸ் தீன் ஹாஜியாரைப் பார்க்க சென்றிருந்த வேளையில் அந்த மஸ்ஜிதோடு சேர்ந்து அமைந்திருந்த ஓதப்பள்ளியில் அவர் கார்க்கூன்களுக்கு தர்பியத் செய்துகொண்டிருந்தார். மஸ்ஜிதிலிருந்து ஓதப்பள்ளிக்குள்ளே நுழையும் வாசல்படியில் உட்கார்ந்து ருவைஸ் தீன் ஹாஜியார் தர்பியத் செய்ய கார்க்கூன்கள் ஓதப்பள்ளியில் கீழே அமர்ந்து அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தினர். அவரின் தர்பியத் நிறைவுபெறும்வரை காத்திருந்தேன்.

தப்லீக் பணி புரியும் கார்க்கூன்கள் எவ்வளவு நேரம் அதிகமாக, எத்தனை அர்ப்பணங்களுடன் உழைக்க வேண்டும் என்பதை அந்த தர்பியத்தில் ருவைஸ் தீன் ஹாஜியார் விபரமாக எடுத்துக்கூறியது என் காதில் விழுந்தது. அவர் அங்கு சொன்னதில் இதுவும் ஒன்று. ஒரு கடிகாரத்தைப் பாருங்கள். அதில் மூன்று முட்கள் உள்ளன. மணித்தியாள முள், நிமிட முள், வினாடி முள். மூன்று முட்களும் சேர்ந்துதான் கடிகாரம் ஓடுகின்றது. அது போலதான் இந்த தப்லீக் வேலையும். உயர் நிலை கார்க்கூன்கள் வினாடி முள் போல் அதிகமாக ஓடினால்தான் இடை நிலை கார்க்கூன்கள் ஓரளவு நிமிட முள் போல ஓடுவார்கள். இடை நிலை கார்க்கூன்கள் நிமிட முள் போல ஓடினால்தான் ஆரம்ப நிலை கார்க்கூன்கள் சற்றேனும் மணித்தியாள முள் போல ஓடுவார்கள்.

1992இல் ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாவில் கற்கைநெறியைப் பூர்த்திசெய்துகொண்டு ஊர் வந்துவிட்டேன். யூஸுப் முப்தியும் அதற்கு ஓர் ஆண்டுக்கு முன் உயர் கல்விக்காக பாக்கிஸ்தான் சென்றுவிட்டார். அதன் பின் எலமல்தெனிய போவதும் ரொம்பவே குறைந்துவிட்டது. ருவைஸ் தீன் ஹாஜியார், அவரின் மகன் மவ்லவி பர்ஹான் எல்லோரும் மனதிலும் கண்ணிலும் வாழ்பவர்களாயினர். இடையிடையே எலமல்தெனிய போன சமயங்களிலும் ருவைஸ் தீன் ஹாஜியாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ருவைஸ் தீன் ஹாஜியார் காலமாகிவிட்டார் எனும் செய்தி நேற்று கிடைத்தபோது மிகவும் கவலையாக இருந்தது. இதயத்தின் அடியில் உறங்கிக்கிடந்த பழைய நினைவுகள் விழித்துக்கொண்டன. இதயத்தின் மேல் பகுதிக்கு பாய்ந்தெழுந்து வந்தன. கதிரையில் அமர்ந்து நீண்ட நேரம் பழைய நிகழ்வுகளை அசைபோட்டேன். மூன்று தசாப்தங்களுக்கு முன்னிருந்த எலமல்தெனிய, அதன் பாதைகள், வீடுகள், கடைகள், மஸ்ஜித்கள், மனிதர்கள், யூஸுப் முப்தியின் மனை, அவரின் குடும்பம், ருவைஸ் தீன் ஹாஜியாரின் இல்லம் என பலதும் பத்தும் என் மனத் திரையில் பளிச்பளிச்சென வந்து போயின. கூடி கும்மாளமடித்தது, சிரித்து மகிழ்ந்தது, உண்டு குடித்தது யாவும் எனது ஞாபகத்தில் மின்னி மின்னி மறைந்தன. அந்த நாட்களை நினைக்க நினைக்க இனிமையும் பசுமையும் குளுமையும் என் நினைவுகளை ஒருசேர ஆண்டன. காலங்கள் மாற, இடங்கள் மாற உறவுப் பிணைப்புகளும் மாறுவது தவிர்க்க முடியாதது. அடிக்கடி சந்திக்க எத்தனை தடவைகள் எத்தனை முறைகளில் யோசித்தாலும் திட்டமிட்டாலும் பிள்ளைகுட்டி, வேலைவெட்டி என்றான பின் எல்லாமே வெறும் யோசனைகளும் வெறும் திட்டங்களும்தான்.

மெய்யாகச் சொல்கிறேன். கனத்த இதயத்துடனயே ருவைஸ் தீன் ஹாஜியார் அவர்களின் மரணச் செய்தியைப் பெற்றேன். அதே பாரமான இதயத்துடனேயே அவருக்காக பிரார்த்திக்கிறேன், அவரின் இரத்தங்களுக்கும் இரக்கங்களுக்கும் ஆறுதல் சொல்கிறேன். தீன் சேவைக்காக, தஃவத் தொண்டுக்காக தன்னை அர்ப்பணித்து உழைத்த ஒரு பெருமகனின் மறைவாக ருவைஸ் தீன் ஹாஜியாரின் மறைவை நான் பார்க்கிறேன்.

யா அல்லாஹ்! ருவைஸ் தீன் ஹாஜியாரை நீ ஏற்றருள்வாயாக! அன்னார் செய்த நற்கிரியைகளை அங்கீகரித்து அவற்றுக்கு முழுமையான கூலிகளை வழங்குவாயாக! அவரின் பாவங்களை மன்னித்து, அவற்றை மறைத்து, அவற்றை அன்னாருக்கு நன்மைகளாக மாற்றிக் கொடுப்பாயாக! ஜன்னத் அல்-பிர்தவ்ஸை அவரது வாழுமிடமாக ஆக்கிவைப்பாயாக! அன்னாரின் குடும்பத்தவர்களுக்கு பொறுமையை, ஆறுதலை நல்குவாயாக!


அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1440.05.22
2019.01.29


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page