Speeches
சுனாமி அனர்த்தத்தின் பின்னரான எதிர்கால சமாதான செயன்முறை
சுனாமி அனர்த்தத்தின் பின்னரான எதிர்கால சமாதான செயன்முறை எனும் தலைப்பில் 2005.01.29 அன்று அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு-07 இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய ஆசியுரையின் தமிழாக்கம்.
மத குருக்களே! கௌரவ அமைச்சர் அவர்களே! சீமாட்டிகளே!
கணவான்களே!
இம்முக்கிய நிகழ்வில் உங்களுடன் கலந்து கொள்வதற்கு அரசியலமைப்பு அலுவல்கள்
மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு எனக்கு விடுத்திருந்த அன்பான அழைப்பு
மூலம் நான் கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறேன்.
எம் நாட்டின் ஆயிரமாயிரம் ஆண்களும், பெண்களும் வடித்த கண்ணீர் உலர்வதற்கு மிக
நீண்ட நேரத்துக்கு முன் காத்திரமான எதிர்கால சமாதான முன்னெடுப்புக்கள் பற்றி
கலந்துரையாட நாம் இங்கு கூடியுள்ளோம். ஆயிரமாயிரம் ஆண்களும், பெண்களும், சிறார்களும்
அகதி முகாம்களிலும், இதர அமைப்பிலான தற்காலிகத் தங்குமிடங்களிலும் எதிர்காலம்
பற்றிய மிகப் பெரிய கேள்வி முன்னிற்க ஊமைக் கண்ணீர் வடித்து நிற்கும் நிலையிலே
எதிர்கால சமாதானப் பேச்சுவார்த்தைகள் பற்றி கலந்தாலோசிக்க நாம் இங்கு குழுமியுள்ளோம்.
யுத்தத்தால் கிழிக்கப்பட்ட இந்நாடு அண்மையில் முகங்கொடுத்த அனர்த்தம் எமது
நினைவுக்குட்பட்ட நாட்களில் மிக மோசமானதாகும்.
நலிந்த இந்நாட்டை சுனாமி தாக்குவதற்கு முன்னர் இந்நாட்டின் ஒவ்வொரு சமூகமும்
மற்றொன்றின் கழுத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஆழிப் பேரலைக்கு முன்னர்
கொடூர உள்நாட்டு யுத்தம் ஆயிரக் கணக்கானோரைப் பலிகொண்டு, ஆயிரக் கணக்கானோரை
வீடற்றோராக்கியது. இப்போது சுனாமி அக்கைங்கரியத்தைச் செய்துள்ளது. அன்று தமது
உரிமைகளை மீறுவதாக தமிழ் சமூகம் சிங்கள சமூகத்தைக் குற்றஞ் சொல்லியது. தம்
சொந்த மண்ணிலிருந்து தம்மை வேரறுத்தமைக்காக முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகத்தின்
மீது பழி சுமத்தியது. இப்போது யார் யாரைக் குற்றம் சொல்வதெனத் தெரியாதுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்ப ஒருவர் மற்றவருடன் கைகோர்க்க விளைகிறார். ஐக்கியம் தற்போது
பரவலாகப் பேசப்படும் கருப்பொருளானது. ஆயினும் கூட நிவாரண நடவடிக்கையிலும்,
புனர்நிர்மான நடவடிக்கைகளிலும் தமக்கு புறமுதுகு காட்டப்படுவதாக கூக்குரல்கள்
வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து எழுகின்றன.
சம்பந்தப்பட்ட எல்லா திறத்தினரும் நேர்மையாக, முற்கட்டுப்பாடேதுமின்றி அமர்ந்து
பேச விரும்புகின்றனரா, எல்லா திறத்தாருமே கொடுத்துப் பெறும் பன்பைக் கடைபிடித்து
ஒன்றாக அமர்ந்து பேச விரும்புகின்றனரா என்பதுதான் இப்போது நம் முன்னுள்ள ஆளமான
கேள்வி. காத்திரமான எதிர்கால சமாதானப் பேச்சுக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும்
கேள்வியும் இதுதான். கொடுத்துப் பெறும் பண்பு பற்றி நான் இங்கு பிரஸ்தாபிக்கையில்
இறைத் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தமது எதிரிகளுடன்
செய்து கொண்ட உடன்படிக்கை என் மனதில் நிழலாடுகிறது.
வரலாற்றுப் பிரசித்திபெற்ற உடன்படிக்கைகளில் ஒன்றான ஹுதைபியா உடன்படிக்கையைப்
பற்றி சில வார்த்தைகள் பேச என்னை அனுமதியுங்கள். தன் சொந்த மண்ணிலிருந்து புலம்
பெயர்க்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக இறைத் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி
வசல்லம்) அவர்கள் இஸ்லாத்தின் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான உம்ரா வழிபாட்டுக்காக
தமது பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். ஹதைபியா என்றழைக்கப்படும் இடத்தில்
வைத்து அவர்களின் முன்னேற்றம் அவரது எதிரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. இரு
தரப்பினரும் உடன்பாடொன்றுக்கு இணங்க உடன்பாடொன்று வரையப்பட்டது.
உடன்பாட்டின் எல்லா ஷரத்துக்களுமே மிகத் தெளிவாக முஹம்மத் நபி (சல்லல்லாஹு
அலைஹி வசல்லம்) அவர்களுக்குப் பிரதிகூலமாகவே இருந்தன.
ஒரு ஷரத்து முஹம்மத் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் உம்ரா வழிபாட்டைச்
செய்யாமலே மதீனாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கட்டுப்படுத்த, இன்னுமொரு
சரத்தானது எதிரணியிரின் தரப்பிலிருந்து யாராவதொருவர் முஹம்மத் நபி (சல்லல்லாஹு
அலைஹி வசல்லம்) அவர்களிடம் சென்றுவிட்டால் அவர் உடனடியாக எதிரணியினரிடம் திருப்பி
அனுப்பப்பட வேண்டும் எனவும், மாற்றமாக முஹம்மத் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்)
அவர்களின் பக்கமிருந்து ஒருவர் எதிரணியினரிடம் சென்று விட்டால் அவர் திருப்பி
அனுப்பப்பட மாட்டார் எனச் சொன்னது. அனைத்தையும் விட மிகப் பிரதிகூலமான அம்சம்
என்னவெனில் முஹம்மத் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அல்லாஹ்வின் தூதர் என்ற
பட்டத்தை அந்த உடன்படிக்கையிலே எழுதும் உரிமை மறுக்கப்பட்டமையாகும். அச்செயல்
எவ்வளவு அவமானத்துக்குரியதாயினும் கூட முஹம்மத் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்)
அவர்கள் நல்லிணக்க வெளிப்பாடாக அவ்வசனத்தை தம் சொந்தக் கையாலேயே உடன்படிக்கையிலிருந்து
அழித்ததுடன், தமது நம்பிக்கையாளர்களின் பலத்த ஆட்சேபனைக்கு மத்தியிலும், அவ்வாண்டு
உம்ராக் கடமைகளைச் செய்யாமலேயே மதீனா நோக்கிப் பின்வாங்கினார்கள். இறுதியில்
அவர்கள் தமது எதிரிகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கை அவர்களின் வெற்றிக்கு பெரிதும்
உறுதுணையாக இருந்தது.
எம் நாட்டின் ஒவ்வொரு மகனும், மகளும் அவாவி நிற்கும் சமாதான முன்னெடுப்பு
பற்றி இப்போது கவனம் செலுத்துவோம். என்னைப் பொறுத்தமட்டில் இலங்கையின் சமாதான
முன்னெடுப்பும், நல்லிணக்கமும் வெறும் உதட்டு வேதாந்தம் தான். அர்ப்பண சிந்தையுடனும்,
ஈடுபாட்டுடனும் இதய சுத்தியுடனும் செயற்படத் தக்கதான இணக்கயப்பாட்டை அடைய வேண்டும்
என்ற கவலை யாரிடமும் இருப்பதாய்க் காணோம். சமாதானத்தை வானத்திலிருந்து கொண்டு
வர முடியாது. நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் அடி மனதிலிருந்து அது வெளிவர வேண்டியுள்ளது.
போரில் ஈடுபட்டுள்ள பிரிவினர்கள் ஒருவர் மற்றவருக்குச் செவிமடுத்து, திறந்த
மனத்துடன் பேசினால் அந்த சமாதானம் வெளிவரவே முடியாத கருந்துவராமுமல்ல. மனித
சமத்துவம், மனித சகோதரத்துவம், மதச் சுதந்திரம் என்பவற்றின் தாத்பரியங்களை
உணர்ந்து செயற்படாத வரையில் நீடு நிலைக்கும் சமாதானம் சாத்தியமற்றதென ஒவ்வொருவரும்
மனதிலிருத்த வேண்டும்.
புதிதாகப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான வழியை சுனாமி ஏற்படுத்தித்
தந்துள்ளதாக எல்லோராலுமே பேசப்படுகிறது. சமூகங்கள், அரசியற் கட்சிகள், சமூக
அந்தஸ்த்துக்கள், மத அமைப்புக்கள் எனவும், போரிடும் பிரிவினர் என்றும் சுனாமி
பேதங் காட்டவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம், பரங்கி இனத்தவர்கள் இன்னுமொரு
சமூகத்து அங்கங்களின் உயிர்களைக் காப்பாற்றியதை நாம் கண்டோம். அடுத்த சமூகத்தவரின்
பூத உடல்களை நல்லடக்கம் செய்யக் கண்டோம். ஒரு இனத்தவர் மற்ற இனத்தவருக்கு உணவு
கொடுக்கவும், ஆடை அணிவிக்கவும், புகலிடம் கொடுக்கவும், மத வழிபாட்டுத் தலங்களை
தற்காலிகத் தங்குமிடங்களாக்கவும் கண்டோம்.
இந்தப் பேரழிவு ஒற்றுமையுணர்வையும், ஒரு நாட்டவர் என்ற உணர்வையும், சர்வதேச
சகோதரத்துவ உணர்வையும் கொண்டு வந்தது. அரசாங்கத்தின் நிவாரண, மீள்கட்டமைப்புப்
பணிகளுக்குக் கைகொடுத்துதவ நாடாளுமன்றத்திலே எதிர்க்கட்சியினர் வாக்களித்ததை
நாம் கண்டோம். தயக்கமின்றி உலக நாடுகளும், நிதி அமைப்புக்களும், சர்வதேச அரச
சார்பற்ற நிறுவனங்களும் உதவியளித்ததையும், எமது மேதகு ஜனாதிபதி அவர்கள் விடுதலைப்
புலிகளின் பெண் போராளிகளுக்கு நற்புக் கரம் நீட்டியதையும் கண்டோம்.
சமாதானப் பேச்சுக்களை எங்கிருந்து தொடங்குவது என்பது நமக்கு முன்னுள்ள பாரிய
கேள்வியாகவும், பேச்சுக் கருப் பொருளாகவும் இப்போது வந்துள்ளது. இச்சந்தர்ப்பத்திலே
எல்லா அரசியற் கட்சிகள், சமூகங்களையும் பிரதிநிதித்துவஞ் செய்யும் ஒரு நிரந்தர
சமாதான, நல்லிணக்கக் குழு ஒன்று அமைக்கும் பிரேரணையை முன்வைக்க அனுமதி கோரி
நிற்கிறேன். அப்படி ஒரு குழு அமைக்கப்படும் பட்சத்து அரசாங்க மாற்றம் சமாதான
முன்னெடுப்பை வழிதவறச் செய்ய முடியாத நிலை உருவாகும். தென்னாபிரிக்காவின் நெல்சன்
மண்டேலா யுகத்து வரலாற்றிலே எமக்கொரு நல்ல பாடம் உண்டு. மேலாயர் டெஸ்மன்ட்
டூ டூ அவர்களின் தலைமையில் ஒரு சமாதான நல்லிணக்க, ஆணைக்குழுவை அவர் நியமித்தார்.
அவ்வாணைக் குழுவில் எல்லா சமூகத்தாரும் பிரதிநிதித்துவஞ் செய்யப்பட்டார்கள்.
அதன் விழைவாக அந்நாட்டிலே மக்கள் சமாதானத்தை அனுபவிக்கிறார்கள். அந்நாட்டிலே
11 மொழி பேசும் சமூகங்கள் உண்டு. எல்லா மொழிகளுக்கும் அங்கு உத்தியோகபூர்வ
அந்தஸ்த்துண்டு. எம் மத்தியில் மூன்று மொழிகளே உள்ளன. அவை மூன்றுக்குமே உத்தியோகபூர்வ
அந்தஸ்து உள்ளது என்பது கூட ஒரு உதட்டளவு வேதாந்தம்தான். இக்குறைபாடுகள் தொடரும்
வரையில் இவ்வப்பாவித் தேசம் அதன் சரியான இலக்கை அடையப் போவதில்லை.
நீண்ட சொற்பொழிவொன்றை ஆற்ற எனக்கு நேரம் இடங்கொடக்காது என அஞ்சுகிறேன். எனது
ஆசனத்துக்கு நான் திரும்பும் முன்னர் சம்பந்தப்பட்ட பகுதியினர் அனைவருக்கும்
ஒரு பணிவான வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன். பேச்சுவார்த்தைகளின் போது வெளிப்படைத்
தன்மை, நேர்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கடைபிடிக்குமாறும், ஒரு இணக்கம்
ஏற்படும் வரையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தத்தமது பிரத்தியேக
கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்து ஒருமித்த குரலில் பேசுமாறும் வேண்டுகிறேன்.
சமாதான பேச்சுவார்த்தை வெகு விரைவில் மீண்டும் தொடங்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்ட
எம் பிறந்த மண் நிரந்தர சமாதானத்தை அனுபவிக்க வேண்டும் என அவாவி நிற்கிறேன்.
நிலையான சமாதானம், மகிழ்ச்சி, சுபீட்சம் ஆகியவற்றைக் கொண்டு எல்லாம் வல்ல
அல்லாஹ் இவ்வழகிய தீவை ஆசீர்வதிப்பானாக!
நன்றி.