In the light of Wah'y :
(And when they hear the vain talk, they avoid it and say: our deeds are for us and your deeds are for you. Peace be on you. We do not seek the ignorant.” (28 : 55“
             
 


 Online Guests


Subscribe for Update


     Name:

Email:

        

 
 
                   
Articles

------------------------------------------------------------------------------------------------------------

குடும்பச் சுமை

    அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
தலைவர், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
 
மனிதர்களைப் படைத்திட்ட அல்லாஹ் தஆலா அவர்களுக்கிடையே பல்வேறு உறவுகளை ஏற்படுத்தினான். ஒவ்வோர் உறவுக்கும் அது அதற்கே உரிய தனியான பரிமாணங்களையும் அறிமுகம்செய்து வைத்தான். உறவுகளின் அடிப்படையில் ஒருவர் மற்றவருக்கு உதவக் கடமைப்பட்டவராக்கினான். அவர்களில் சிலரை சிலருக்கு பொறுப்பாக்கினான்.

இத்தகைய உறவுகளுள் குடும்ப உறவு முக்கியமானது. தாய், தந்தை, மக்கள், கணவன், மனைவி, உடன்பிறப்புக்கள் என குடும்ப உறவு அகன்று விரிகிறது. பிள்ளைகளுக்கு பெற்றோரையும், மனைவிக்கு கணவனையும் அல்லாஹ் பொறுப்பாக்கி வைத்தான். ஒருவர் தன் மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகளுக்கு செலவு செய்து அவர்களின் நலன்களைக் கவனிக்குமாறு அவன் பணித்தான். உணவு, உடை, உறையுள் இன்னும் இத்தகைய தேவைகளை அவர்களுக்கு நிறைவேற்றி வைக்குமாறு அவனை வேண்டினான்.

நம் செலவுக்குட்பட்டவர்களை முறையாகக் கவனிப்பது நம் கடமை. இஸ்லாம் இதனைக் கடமைப்படுத்திய அதே வேளை அதற்கு பலவித நற்கூலிகளை, வெகுமதிகளை வாக்களித்துள்ளது.

நான் பெற்றோரைக் கவனிக்க வேண்டும், பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும், மனைவியைக் கவனிக்க வேண்டும், சகோதரர்களைக் கவனிக்க வேண்டும், சகோதரிகளைக் கவனிக்க வேண்டும், என் குடும்பச் சுமை அதிகம், பாரம் என்றெல்லாம் சொல்லி, முனங்கி, புலம்பி நாம் அன்றாடம் அடிக்கடி அலுத்துக்கொள்கின்ற, இதனை எவ்வாறு சமாளிப்பது என யோசித்து யோசித்து தலையைப் பிய்த்துக்கொள்கின்ற விவகாரத்தை திவ்விய நெறி இஸ்லாத்தின் வெளிச்சத்தில் நின்று பார்க்க வேண்டியுள்ளது.

அறவே குடும்பப் பாரம் இல்லாதவர் நமக்கிடையே குறைவு. சிறிதோ, பெரிதோ குடும்பப் பளுவுடன் வாழ்வோரே அதனம். சிலருக்கு மனைவி மட்டும். வேறு சிலருக்கு மனைவி, பிள்ளைகள். இன்னும் சிலருக்கு மனைவி, பிள்ளைகள், பெற்றோர். மற்றும் சிலருக்கு மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உடன்பிறந்தார். இது அல்லாஹ்வின் ஏற்பாடு. மாறாதது, மாற்ற முடியாதது. இறை ஏற்பாட்டை முழுக்க முழுக்க மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வது ஈமானைச் சார்ந்தது.


தாபரிப்பு ஓர் இறை கட்டளை

தன்னில் தங்கி வாழ்வோருக்கு தாபரிப்பு வழங்குமாறு ஆணித்தரமாக ஆணையிட்டுள்ளான் அல்லாஹ் தஆலா. அக்கட்டளை அருள் மறையில் இவ்வாறு வருகிறது:

“வசதியுடையவர் தன் வசதியிலிருந்து செலவு செய்யவும்! எவரின் ரிஸ்க் அவர் மீது நெருக்கடியாக்கப்பட்டுள்ளதோ அல்லாஹ் அவருக்கு கொடுத்துள்ளதிலிருந்து அவர் செலவு செய்யவும்! அல்லாஹ் ஓர் ஆத்மாவை தான் அதற்கு கொடுத்துள்ளதையன்றி சுமத்துவதில்லை. ஒரு கஷ்டத்தின் பின் ஓர் இலேசியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.” (65 : 07)

தனது செலவின் கீழுள்ளோரை தன் வசதிக்கேற்றவாறு கவனிப்பது கட்டாயம் என்பதை மேற்படி வசனம் பட்டவர்த்தனமாக எடுத்துரைப்பதாக இமாம்கள் கூறுகின்றனர்.

ஒரு கனவான் குடும்பத்துக்கு செலவளிப்பதில் பின்நிற்க மாட்டான். அதை மனநிறைவோடு ஏற்றுக்கொள்வான். அதில் அலாதி இன்பம் காண்பான். எத்தனை எத்தனை ரூபாய்களை சம்பாதித்து சேமித்து வைத்திருந்தாலும் தன் குடும்பத்தவரின் நலனுக்கு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அவற்றை செலவளிப்பதில் கஞ்சத்தனம் காட்டுவது சிலரின் குணம். இதனை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. எவ்வளவு சம்பாதித்திட்ட போதிலும் தனது பெற்றோர், மனைவி, மக்கள், சகோதர சகோதரிகளுக்கு நிரப்பமாக உண்ணக் கொடுத்து, நிறைவாக உடுத்தக் கொடுத்து, அவர்களை ஒழுங்காக வசிக்க வைத்து வாழ் வாங்கு வாழச் செய்வதில்தானே இவ்வுலகில் நெஞ்ச நிறைவு.

மனிதன் பலருக்கு பல்வேறு விடயங்களுக்கு செலவளிக்கின்றான். அவனின் விதம் விதமான செலவினங்களில் சிறந்த செலவினம் அவனின் குடும்பத்துக்கான அவனது செலவினமாகும். பின்வரும் நபி மொழி இவ்வுண்மையை பறைசாற்றுகிறது:

“மனிதன் செலவளிக்கும் தீனாரில் (தங்க நாணயம்) மிகச் சிறந்தது அவனில் தங்கி வாழ்பவர்களுக்கு அவன் செலவு செய்யும் தீனாராகும்.” (அறிவிப்பவர் : ஸவ்பான் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் முஸ்லிம்)


மனைவியைக் கவனித்தல்

மனைவி ஒரு முக்கிய குடும்ப அங்கத்தவர். தாய், தந்தை, மகன், மகள், சோதரன், சோதரி போன்றல்லாது தெரிவுசெய்து இணைத்துக்கொண்ட ஒரு குடும்ப உறுப்பினர். பானம், உணவு, உடை, உறையுள் உள்ளிட்ட அவளின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பது, அவளுடன் நன்முறையில் நடந்துகொள்வது வல்ல அல்லாஹ்வை முன் வைத்து அவனின் பெயர் கொண்டு அப்பெண்ணைக் கரம்பற்றிய கணவனின் கடமை.

நாம் கட்டிக்கொண்டுள்ள மனைவி நம் துணைவி, நமது சுகம், நமது இன்பம், நமது ஆறுதல். அவள் நமக்கு வேளைக்காரியுமல்ல, சேவகியுமல்ல. அவளை அன்பாக, கண்ணியமாக நடத்த வேண்டும்.

புனித அல்-குர்ஆன் பேசுகிறது:

“மனைவிகளை நீங்கள் அவர்கள் பால் அமைதி பெறும் பொருட்டு உங்களிலிருந்து உங்களுக்காக அவன் (அல்லாஹ்) படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும் கருணையையும் ஏற்படுத்தியுள்ளமை அவனின் அத்தாட்சிகளில் நின்றுமுள்ளதாகும்.” (30 : 21)

“மேலும் அவர்களுடன் (மனைவிகளுடன்) நீங்கள் நன்முறையில் நடந்துகொள்ளுங்கள்!” (04 : 19)

“நன்முறையில் அவர்களின் (தன் பிள்ளைகளின் தாய்மாரின்) உணவு, அவர்களின் உடை தந்தை மீதாகும்.” (02 : 233)

இறைத் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பேசுகிறார்கள்:

“அவர்களுக்கு (மனைவியருக்கு) நன்முறையில் அவர்களின் உணவு, அவர்களின் உடை உங்கள் (கணவர்கள்) மீதாகும்.” (அறிவிப்பவர் : ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் முஸ்லிம்)

“நீங்கள் உண்ணுவதிலிருந்து அவர்களுக்கு (மனைவியருக்கு) உண்ணக் கொடுங்கள்! மேலும் நீங்கள் உடுத்துவதிலிருந்து அவர்களுக்கு உடுத்தக் கொடுங்கள்!” (அறிவிப்பவர் : முஆவியா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன் அபீ தாவூத்)

மனைவிக்கு தாபரிப்பு வழங்குவதை ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சதக்காவாகப் பிரகடனப்படுத்தினார்கள். அப்பிரகடனம் இதுதான்:

“நீர் என்ன செலவு செய்தாலும் திண்ணமாக அது தர்மம். நீர் உமது மனைவியின் வாயின் பால் உயர்த்தி விடுகின்ற கவலம் உட்பட.” (அறிவிப்பவர் : ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் அல்-புகாரி)

இதனைவிட ஒரு படி மேலே சென்று மனைவிக்கான செலவளிப்பை ஜிஹாதுக்கு செலவளிப்பது, அடிமையை உரிமையிட செலவளிப்பது, ஏழைக்கு சதக்கா கொடுப்பதைக்காட்டிலும் சிரேஷ்டமானதாகப் பிரகடனப்படுத்தினார்கள் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். அப்பிரகடனம் பின்வருமாறு:

“அல்லாஹ்வின் பாதையில் நீர் செலவளித்த ஒரு தீனார், ஓர் அடிமையை உரிமையிடுவதில் நீர் செலவளித்த ஒரு தீனார், ஓர் ஏழைக்கு நீர் தர்மம் கொடுத்த ஒரு தீனார், உம் மனைவிக்கு நீர் செலவளித்த ஒரு தீனார் இவற்றில் கூலியால் மிகப் பெரியது உமது மனைவிக்கு நீர் செலவளித்தீரே அதுவாகும்.” (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் முஸ்லிம்)

மனைவிக்கு தாபரிப்பு வழங்குவதில் கணவன் கருமித்தனம் காட்டும்போது அவனுக்குத் தெரியாமலே அவனிடமிருந்து போதுமான அளவு மனைவி நன்முறையில் எடுத்துக்கொள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது. பின்வரும் ஹதீஸில் இதனைக் காணலாம்:

“அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அபூ ஸுஃப்யான் ஓர் உலோபியான மனிதர். அவர் அறியாத நிலையில் நான் அவரிடத்திலிருந்து எடுத்ததைத் தவிர எனக்கும் என் பிள்ளைக்கும் போதுமானதை அவர் எனக்குத் தருவதில்லை என ஹிந்த் (ரழியல்லாஹு அன்ஹா) கூற “உமக்கும் உமது பிள்ளைக்கும் போதுமானதை நீர் நன்முறையில் எடுத்துக்கொள்க!” என்றார்கள் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.” (அறிவிப்பவர் : ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா), நூல் : சஹீஹ் அல்-புகாரி)


பிள்ளைகளைக் கவனித்தல்

எமது பிள்ளைகள் அருளாளன் அல்லாஹ் நமக்கு ஈந்தளித்த விலை மதிக்க முடியாத அன்பளிப்புகள். அவர்களில் எமக்கு கண் குளிர்ச்சி உள்ளது. அவர்களை அன்போடு அரவணைப்பது, வாஞ்சையோடு முத்தமிடுவது, பாசத்தோடு வளர்ப்பது, அவர்களின் சகல தேவைகளையும் பூர்த்திசெய்து கொடுப்பது, அவர்களின் நலன்களில் முழு அளவில் அக்கறை காட்டுவது பொதுவாக பெற்றோரின் குறிப்பாக தந்தையின் கடமையாகும்.

பிள்ளைகளுக்கு செலவளிப்பதில் பின்நிற்றலாகாது. அவர்களின் தாபரிப்பு விடயத்தில் அசிரத்தை காட்டும்போது அவர்களுக்குத் தேவையான செலவினத்தை அப்பிள்ளைகளின் தாய் அவர்களின் தகப்பனிடமிருந்து அவருக்குத் தெரியாமல் நன்முறையில் எடுத்துக்கொள்ளலாம். கீழ்வரும் நிகழ்வு இதற்கு ஆதாரமாக அமைகிறது:

“அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அபூ ஸுஃப்யான் ஓர் உலோபியான மனிதர். அவர் அறியாத நிலையில் நான் அவரிடத்திலிருந்து எடுத்ததைத் தவிர எனக்கும் என் பிள்ளைக்கும் போதுமானதை அவர் எனக்குத் தருவதில்லை என ஹிந்த் (ரழியல்லாஹு அன்ஹா) கூற “உமக்கும் உமது பிள்ளைக்கும் போதுமானதை நீர் நன்முறையில் எடுத்துக்கொள்க!” என்றார்கள் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.” (அறிவிப்பவர் : ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா), நூல் : சஹீஹ் அல்-புகாரி)

பொதுவாக ஆண்களைவிட பெண்கள் பலவீனமானவர்கள். அல்லாஹ் அவர்களை அப்படித்தான் சிருஷ்டித்துள்ளான். இந்த வகையில் ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் பெண் பிள்ளைகள் பலகீனர்கள். ஆகவே பெற்றோர் பெண் பிள்ளைகள் விடயத்தில் அதீத பொறுப்புடன், கூடிய கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டியுள்ளது. இதனால்தான் பெண் மக்களைக் கவனிக்கும் பெற்றோர் நபி மொழிகளில் அதிகமதிகம் சிலாகிக்கப்படுகின்றனர்.

“ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) கூறுகிறார்கள்: தனக்குரிய இரு மகள்களுடன் ஒரு பெண் யாசகம் கேட்டு வந்தாள். ஒரு பேரீத்தம் பழத்தைத் தவிர எதையும் அவள் என்னிடத்தில் பெற்றுக்கொள்ளவில்லை. அவளுக்கு நான் அதனைக் கொடுத்தேன். அவள் தன் இரண்டு பெண் பிள்ளைகளுக்கிடையில் அதனைப் பங்குவைத்தாள். அவள் அதிலிருந்து சாப்பிடவில்லை. பின்னர் அவள் எழுந்து வெளியேறிவிட்டாள். நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எம்மிடத்தில் வந்தார்கள். நான் அவர்களிடம் அறிவித்தேன். “எவர் இப்பெண் மக்களிலிருந்து ஒன்றைக் கொண்டு சோதிக்கப்படுகிறாரோ அவர்கள் அவருக்கு நரகிலிருந்து திரையாக இருப்பர்” என அவர்கள் கூறினார்கள்.” (நூல் : சஹீஹ் அல்-புகாரி)

“எவருக்கு மூன்று புதல்விகள் இருந்து அவர்களின் கஷ்டத்தில் பொறுமை செய்வாரோ அவர் அவர்களுக்கு கருணை காட்டியதன் காரணமாக அல்லாஹ் அவரை சுவனத்தில் நுழைவிப்பான் என அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். “இரண்டு புதல்விகள் அல்லாஹ்வின் தூதரே!” என்றார் ஒரு மனிதர். இரு புதல்விகளும்தான் என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஒருவள்” என்றார் ஒரு மனிதர். ஒருவளும் என்றார்கள்.” (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)

“எவர் இரு பெண்களை போஷித்து கவனித்து வளர்த்தாரோ நானும் அவரும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் எனச் சொல்லி தனது இரு விரல்களைக் கொண்டு சுட்டிக்காட்டினார்கள் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.” (அறிவிப்பவர் : அனஸ் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன் அல்-திர்மிதி)

“நானும் இரு கன்னங்களின் நிறம் மாறிப்போன ஒரு பெண்ணும் மறுமை நாளில் இவ்வாறு இருப்போம் என்றார்கள் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். யஸீத் (அறிவிப்பாளர்) நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் கொண்டு சுட்டிக்காட்டினார். தன் கணவனை இழந்த சிறப்பும் அழகுமுடைய ஒரு பெண். தனது அநாதைகள் மீது அவர்கள் வேறாகும் அல்லது மரணிக்கும் வரை அவள் தன்னைத் தடுத்து வைத்தாள்.” (அறிவிப்பவர் : அவ்ஃப் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன் அபீ தாவூத்)

“அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நான் சுவனத்தின் வாயில் எவருக்காக திறக்கப்படுமோ அவரில் முதலாமவன். எனினும் ஒரு பெண் என்னை முந்திக்கொண்டு வருவாள். “உமக்கென்ன, நீர் யார்” என அவளிடம் நான் கேட்பேன். நான் எனது அநாதைகளின் மீது உட்கார்ந்த ஒரு பெண் என்று அவள் கூறுவாள்.” (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : முஸ்னத் அபீ யஃலா)

பிள்ளைகளைப் பெற்றது முதல் அவர்கள் புத்திரர்களாயின் பருவ வயதை அடைந்து தம் வாழ்க்கையை ஓட்டுவதற்குத் தேவையான வருமானத்தைப் பெற்று வேறாகும் வரை, புத்திரிகளாயின் திருமணமாகி வேறாகும் வரை அவர்களுக்காக செலவளித்து கவனித்து வளர்ப்பது பெற்றோரின் கட்டாய கடமையாகும். இக்கடமையை செவ்வனே நிறைவேற்றுகின்ற பெற்றோர் திண்ணமாக அல்லாஹ்வினால் கண்ணியப்படுத்தப்படுவர் என்பதை மேற்கண்ட நாயக வாக்கியங்கள் துலாம்பரமாக எடுத்தியம்புகின்றன.

பெண் பிள்ளைகளைக் கட்டிக்கொடுக்கும்போதுகூட நமது பொறுப்பை அலட்சியப்படுத்த முடியாது. திருமணத்தில் பெண் தரப்பில் எவ்வித செலவும் கட்டாயம் இல்லை என்றிருந்தபோதிலும் உடுத்த உடையுடன் அவளைக் கரைசேர்க்க முடியாது. மணமகளாக அவள் புது வாழ்க்கையில் புகும் வேளை அம்மங்கை மனப் பூரிப்புடன் புத்துலகு காணப் புறப்பட வேண்டும். தப்பினோம் பிழைத்தோம் என ஏனோதானோவென்று அவளைக் கரைசேர்ப்பது அழகல்ல. நபியவர்களின் காலத்தில் பெண்கள் நல்ல முறையில் மணமுடித்துவைக்கப்பட்டனர் என்பதே வரலாறு.

திருமணமாகும் பெண் பிள்ளைக்கு பெற்றோர் எதுவும் கொடுக்காது கணவனிடம் ஒப்படைப்பதே முறை அல்லது எதுவும் கொடுத்து ஒப்படைப்பது கூடாது என்பது தவறான வாதமாகும். பெண் தரப்பாரிடம் ஆண் தரப்பார் ஏதும் தருமாறு கோருவதே தப்பு. இதனை பின்வரும் சம்பவம் புலப்படுத்துகிறது:

“ஸஃத் இப்ன் அல்-ரபீஃ (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களின் மனைவி ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களின் இரு புத்திரிகளுடன் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் ஸஃதின் இரு புதல்விகள். அவர் தங்களுடன் உஹுத் அன்று கொள்ளப்பட்டார். நிச்சயமாக இவ்விருவரின் தகப்பனின் சகோதரர் அவ்விருவரின் தந்தை விட்டுச்சென்ற அனைத்தையும் எடுத்துக்கொண்டார். திண்ணமாக பெண் அவளின் சொத்தின் மீதே அன்றி மணமுடித்துவைக்கப்படுவதில்லை” எனக் கூறினார்கள். மரணச் சொத்து வசனம் இறக்கப்படும் வரை அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மௌனித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸஃத் இப்ன் அல்-ரபீஃ (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களின் சோதரரை அழைத்து “ஸஃதின் இரு புதல்விகளுக்கும் அவரின் செல்வத்தில் மூன்றில் இரண்டைக் கொடுப்பீராக! அவரின் மனைவிக்கு எட்டில் ஒன்றைக் கொடுப்பீராக! எஞ்சியதை நீர் எடுத்துக்கொள்வீராக! எனச் சொன்னார்கள்”.” (அறிவிப்பவர் : ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன் இப்னி மாஜஹ்)

பெண் மக்களைக் கட்டிக்கொடுக்கும் வேளை செலவின்றி கட்டிக்கொடுப்பதுதான் சரியென்றிருந்தால் அல்லது அதற்காக செலவளிப்பது பிழையென்றிருந்தால் மேற்கண்ட நிகழ்வின்போது “திண்ணமாக பெண் அவளின் சொத்தின் மீதே அன்றி மணமுடித்துவைக்கப்படுவதில்லை” என்ற ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களின் மனைவியின் கூற்று ஒன்று ஏகன் அல்லாஹ்வினால் அல்லது அவனின் அருள் தூதரினால் திருத்தப்பட்டிருக்கும்.

மகளைக் கரைசேர்த்து விட்டேன். என் கடமை இனிதே முடிந்தது. இனி அவள்பால் என் மீது எந்தப் பொறுப்பும் இல்லை என நிம்மதிப் பெருமூச்சு விட்டான் பிதா. ஏதோ ஒரு காரணமாக அவளின் இல்லற வாழ்வு மணமுறிவைக் கண்டது. அல்லது கணவன் மரணித்துப்போய் விட்டான். இப்போது அப்பெண்மணி தன் தந்தையிடமே திரும்ப வருகிறாள். அவளுக்கு தாபரிப்புக் கொடுக்கும் பொறுப்பு மீண்டும் தகப்பனின் தோளிலே. அந்தோ தந்தையின் மனக்கோட்டை சரிகிறது. என்ன செய்ய? தகப்பன் அவளைக் கவனிக்கிறான். இந்தத் தந்தை இப்போது அவளுக்காக செலவிடுவது மிகப் பெரிய சதக்காவாகும். இந்த உண்மை நன்மாறாயத்தை பின்வரும் ஹதீஸில் காணக் கிடைக்கின்றது:

“ஸுராக்காவே! மிகப் பெரிய தர்மத்தை நான் உமக்கு காட்டித்தர வேண்டாமா எனக் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். ஆம். அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள் அவர்கள். உமது மகள் உம்மிடம் மீளளிக்கப்பட்டுள்ளாள். அவளுக்கு உம்மைத் தவிர சம்பாதிப்பவர் எவருமிலர் எனச் செப்பினார்கள் அவர்கள்.” (அறிவிப்பவர் : ஸுராக்கா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : முஸ்னத் அஹ்மத்)


பெற்றோரைக் கவனித்தல்

சொல்லொனா கஷ்ட நஷ்டங்களை சந்தித்தவர்களாக, ஆற்றொனா துன்ப துயரங்களை சகித்தவர்களாக, கனவுகள் பலவற்றை சுமந்தவர்களாக பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி விட்ட பெற்றோர்கள் என்றும் தம் மக்களின் கனிவான, பணிவான பராமரிப்புக்கு பாத்திரமானவர்கள். அவர்களைக் கவனிக்குமாறு, அவர்களுக்கு தாபரிப்பு வழங்குமாறு புனித இஸ்லாம் பணிக்கின்றது. கீழ்வரும் ஹதீஸ் இவ்விடயத்தில் மிகுந்த கவனத்திற்குரியது:

“ஒரு மனிதர் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! திண்ணமாக எனக்கு செல்வமும் பிள்ளையும் உண்டு. நிச்சயமாக என் தந்தைக்கு என் செல்வம் தேவைப்படுகிறது” என்றார். “நீரும் உம் செல்வமும் உம் தகப்பனுக்காகும். திண்ணமாக உங்கள் பிள்ளைகள் உங்களின் சம்பாத்தியத்தில் மிகத் தூய்மையானதில் நின்றுமுள்ளவர்கள். எனவே உங்கள் மக்களின் சம்பாத்தியத்திலிருந்து நீங்கள் உண்ணுங்கள்” என்றார்கள்.” (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : ஸுனன் அபீ தாவூத்)


உடன்பிறந்தாரைக் கவனித்தல்

ஒருவருக்கு சகோதர சகோதரிகள் கிடைப்பது அல்லாஹ்வின் பெரும் கிருபையாகும். உடன்பிறப்புக்கள் உண்மையில் ஒருவர் மற்றவருக்கு உற்ற துணை. ஆதலால் ஒருவர் மற்றவரைக் கவனிப்பது இன்றியமையாதது. தன் சகோதரனை, சகோதரியை தாபரிப்புக் கொடுத்து கவனித்து வருவது மிக முக்கியமாகும். பிரபல சஹாபி ஹழ்ரத் ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களின் முன்மாதிரிமிக்க நடத்தையை இந்த விடயத்தில் நாம் படித்தாக வேண்டும்.

நபித் தோழர் ஹழ்ரத் ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களின் தகப்பன் அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்கள் உஹுத் போரில் ஷஹீதானார்கள். அவர்கள் வபாத்தாகும்போது அவர்கள் செலுத்த வேண்டிய கடன்கள் நிறைய இருந்தன. போதாக்குறைக்கு ஆறு அல்லது ஏழு பெண் பிள்ளைகள். பெரும்பாலும் அனைவரும் சிறு வயதினர். இவர்களை வளர்த்தெடுக்கின்ற இமாலய பொறுப்புடன் தகப்பனார் கொடுக்க வேண்டிய பெரும் தொகையான கடன்களை அடைக்கின்ற மிகப் பாரமான பொறுப்பும் ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களின் தலையிலாகும்.

கடன்கள் யாவும் அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஏற்பாட்டில் கொடுத்து முடிக்கப்பட்டன. சிறியவர்களான தன் சகோதரிகளை பராமரித்து வளர்த்தெடுக்க வேண்டுமென்பதற்காக ஏலவே திருமணமாகி கணவனை இழந்த ஒரு பெண்ணைக் கரம்பற்றினார்கள் ஹழ்ரத் ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்கள். தன் இளந்தாரிப் பருவத்தில் ஒரு கன்னியைக் கட்டிக்கொள்ள முடியுமாயிருந்தும் தன் சகோதரிகளின் நலனுக்காக தன் நலனை விட்டுக்கொடுத்த, அவர்களின் சுகத்துக்காக தன் சுகத்தைத் துறந்த, அவர்களின் இன்பத்துக்காக தன் இன்பத்தை இழந்த, அவர்களுக்காக தன் வாலிபத்தை ரசித்து, ருசித்து, சுவைத்துப் பார்க்காது அதனைத் தத்தம்செய்திட்ட இந்த ஆதர்ச புருஷரை எப்படித்தான் பாராட்டி முடிப்பது?


தாபரிப்புக்குட்பட்டோரைக் கவனியாது விடுவது பாவம்

தான் தாபரிப்புக் கொடுத்து வாழ வைக்க வேண்டியோருக்கு உரிய முறையில் செலவினம் வழங்காது விடுவது அல்லாஹ்விடத்தில் குற்றமாகக் கருதப்படுகின்றது. அப்படிச் செய்வது பாவமாகும். தன்னை நம்பி தன்னிலே தங்கி வாழ்வோரை உதாசீனம் செய்வது, கவனிப்பாரற்று விடுவது, அவர்களின் தாபரிப்பு விடயத்தில் பொறுப்பற்றவண்ணம் நடந்துகொள்வது, அவர்களுக்கு செலவு செய்வதை பெரும் சுமையாகக் கருதி புறுபுறுப்பது முதலாய செயல்கள் ஆகாதவை, முற்றாக தவிர்க்கப்பட வேண்டியவை. ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நவின்றார்கள்:

“தன் தாபரிப்புக்குரியவரை வீணாக்குவது மனிதனுக்கு பாவத்தால் போதுமானதாகும்.” (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)

உத்தம தூதர் உம்மி நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன் குடும்பத்தினரைக் கவனித்த பாங்கு அலாதியானது. எளிமையிலும் முடியுமான அளவு தாபரிப்பை அவர்களுக்கு சரிவர கொடுத்து வாழ வைத்தார்கள். ஹிஜ்ரி நான்காம் ஆண்டு பனூ அல்-நழீர் யூதக் கோத்திரத்தை முஸ்லிம்கள் வெற்றிகொண்டதைத் தொடர்ந்து நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு கிடைத்த ஓரளவு செல்வத்தைக் கொண்டு அவர்களின் குடும்பத்தாருக்குத் தேவையான உணவுக்குரிய ஏற்பாட்டை ஒரு வருடத்துக்கு ஒழுங்கு செய்துகொள்பவர்களாக இருந்தார்கள். இது நபியவர்கள் தன்னில் தங்கி வாழ்ந்தோரின் உணவுக்காக செய்துகொண்ட ஒழுங்குமுறையாகும்.


பாக்கியவான்கள்

மனைவி, மக்களை, தாய், தந்தையை, சகோதர, சகோதரிகளை வாழவைக்க வேண்டும், பிள்ளைகளை, உடன்பிறப்புக்களை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும், தன் குடும்பத்தினரை சமூகத்தில் அடுத்தவரோடு சரி நிகர் சமானமாக தலைநிமிர்ந்து வாழவைக்க வேண்டும், தன் தாபரிப்புக்குட்பட்ட எவரும் பிறரிடம் கைநீட்டி வாங்கும் நிலையில் இருக்கக் கூடாது என்ற எண்ண மேலீட்டால் பகல் இரவு பாராது, வெய்யில் மழை பாராது, சூடு குளிர் பாராது ஆலாய்ப்பறந்து அல்லும்பகலும் உழைப்போர் பலர். ஊர் விட்டு, நாடு விட்டுச் சென்று அரும் பாடு பட்டு திரவியம் தேடுவோர் பலர். கடல் கடந்து நெடுந் தொலைவில் இரத்தங்களைப் பிரிந்து, இரக்கங்களைப் பிரிந்து சம்பாதிப்போர் பலர். பல அடி உயரம் மேலே நின்று, பல அடி ஆழம் உள்ளே சென்று பெரும் ராட்சத இயந்திரங்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டு உயிரைப் பணயம் வைத்தவர்களாக ஜீவனோபாயம் தேடுவோர் பலர்.

இம்மனிதர்கள் உண்மையில் கனவான்கள், பாக்கியவான்கள், இறையருளுக்குரித்தானவர்கள். அல்லாஹ் இவர்களை நிச்சயம் நற்கூலிகள், சன்மானங்கள் வழங்கி கண்ணியப்படுத்துவான்.

இவர்களில் பலர் தமது பொருளீட்டல் முயற்சிகள், முனைவுகளின் போது ஏற்படுகின்ற அல்லல்கள், அவலங்கள், கஷ்டங்கள், நிஷ்டூரங்கள், இன்னல்கள், கிடைக்கின்ற ஏச்சுக்கள், இழிச் சொற்கள், பழிச் சொற்கள் என்பனவற்றை குடும்ப அங்கங்களுடன் பகிர்ந்துகொள்ளாது மறைத்துக்கொண்டு தளராது தொடர்ந்து முயன்று உழைத்து வருகின்றனர் எனும் மற்றொரு உண்மை ஈண்டு குறிப்பிடத்தக்கது.


தாபரிப்பு பெறுவோர் கடமை

படாத பாடு பட்டு மிகுந்த பிரயாசையுடன் சம்பாதித்து தமக்கு உண்ண, குடிக்க, அணிய, கற்க, மருந்துக்காக, பயணத்துக்காக, இன்னோரன்ன தேவைகளுக்காக அள்ளி அள்ளி கொட்டுகின்றவர்களை தாபரிப்பு பெறுவோர் பெரிதும் கனம் பண்ண வேண்டும். அவர்களின் முயற்சிகளை வெகுவாக மதிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடக்க வேண்டும். அவர்கள் தருபவற்றை பெரு மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் கொடுப்பதிலிருந்து கூடுமானவரை மீதப்படுத்த வேண்டும். அதை வீண், விரயம் செய்யலாகாது. அவர்களை சதா நன்றிப் பெருக்குடன் பார்க்க வேண்டும். இறுதி வரை அவர்களை ஒரு போதும் மறத்தலாகாது.


முடிவாக

குடும்பச் சுமை இயல்பானது, தவிர்க்க முடியாதது. அது இறை நியதி. அதனை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வோம்! நம்மில் தங்கி வாழ்வோரை நெஞ்சார நேசிப்போம்! அவர்களின் நலன்களில் அதீத கவனமெடுப்போம்! அவர்களை மகிழ்வுடன் வாழவைப்போம்! விரிந்த இதயத்தோடு தாபரிப்பு வழங்கி மனநிறைவடைவோம்! அகன்ற அகத்தோடு அவர்களை அரவணைத்துக் கவனித்து ஆத்ம திருப்தி எய்துவோம்!

1432.06.04
2011.05.09

       
COMMENTS
 
------------------------------------------------------------------------------------------------------------
  * இஸ்லாம் வலியுறுத்தும் ஜீவகாருண்யம்
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?

 
 
 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© Ash-Shaikh Abdul Nazar