“நிச்சயமாக நாம்
நம் தூதர்களை தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்.
மேலும் மனிதர்கள் நீதியைக் கொண்டு நிற்பதற்காக அவர்களுடன்
(தூதர்களுடன்) வேதத்தையும் தராசையும் நாம் இறக்கினோம்.”
(57 : 25)
மேற்படி இரண்டு வசனங்களிலும் வேதத்துடன்
தராசையும் இறக்கி வைத்துள்ளதாக வல்லவன் அல்லாஹ் பிரஸ்தாபிப்பது
எம்மையெல்லாம் பெரும் திகைப்பில் ஆழ்த்துகிறது. அல்லாஹ்
இறக்கி வைத்த தராசு எங்கே? உண்மையில் இந்த இடங்களில்
அல்லாஹ் தஆலா தராசு என்று குறிப்பிடுவது நீதியையாகும்
என அல்-குர்ஆன் வியாக்கியானிகள் விளக்குகின்றனர்.
மனிதர்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நீதியாக நடக்கும்
பொருட்டு வழங்கப்பட்ட மார்க்கமே புனித இஸ்லாம். இஸ்லாத்தின்
ஒவ்வொரு போதனையும் நீதமாகும். இஸ்லாம் என்றால் நீதம்
என்று சொன்னால் அது தப்பு அல்ல.
நீதியின் யதார்த்தம்
நீதம் என்றால் என்ன? உரிமையுடைய ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும்
அவரின், அதன் உரிமையைக் கொடுத்து விடல். இது நீதியின்
வரைவிலக்கணமாகும்.
மனிதர்கள், ஜின்கள், பறவைகள், மிருகங்கள், மரம், செடி,
கொடி, நீர், நிலம், வானம், பூமி, காற்று, மழை, மலை,
நெருப்பு இன்னோரன்ன அனைவருக்கும், அனைத்துக்கும் நீதி
செல்லுபடியானதாகும். ஒருவருக்கு, ஒன்றுக்கு கிடைக்க
வேண்டியது மறுக்கப்படும்போது, தடுக்கப்படும்போது, நிறுத்தப்படும்போது,
குறைக்கப்படும்போது அவருக்கு, அதற்கு உரிய நீதி கிடைக்காமல்
போகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உரிய நீதி வேண்டி
கோரிக்கை கோஷம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என்பன உரிமை
என்ற பெயரில், நியாயம் என்ற பெயரில், நீதி என்ற பெயரில்
வெடிப்பது தவிர்க்க முடியாததாகும். நீண்ட நெடிய உலக
வரலாற்றுப் பக்கங்களில் நாம் தரிசிக்கின்ற நீதிக்கான
எண்ணிறந்த போராட்டங்கள் இதற்கு தக்க சான்றாகும்.
நீதம் இறை கட்டளை
அருளாளன் அல்லாஹ் சிருஷ்டிகளை சிருஷ்டித்து அவற்றின்
இயக்கத்தை நீதியின் அடிப்படையில் ஆக்கிவைத்து, மனிதர்களின்
வாழ்வியலை நெறிப்படுத்த அவன் அறிமுகப்படுத்திய சன்மார்க்கத்தையும்
நீதியின் அடிப்படையில் அமைத்துள்ளதோடு படைப்புகள் எல்லோரும்
நீதமாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாகக் கட்டளையிட்டுள்ளான்.
பின்வருமாறு சங்கைமிகு அல்-குர்ஆனில் அல்லாஹ் இயம்புகிறான்:
“நீதியாக நடக்குமாறும்
நன்முறையில் நடந்துகொள்ளுமாறும் உறவினருக்கு கொடுக்குமாறும்
திண்ணமாக அல்லாஹ் ஏவுகிறான்.” (16 : 90)
“மேலும் நீங்கள்
நீதமாக நடந்துகொள்ளுங்கள்! திண்ணமாக அல்லாஹ் நீதியாக
நடப்போரை நேசிக்கின்றான்.” (49 : 09)
“நீங்கள் நீதமாக
நடந்துகொள்ளுங்கள்! அது (நீதமாக நடப்பது) பயபக்திக்கு
மிக நெருக்கமானது.” (05 : 08)
“விசுவாசிகளே!
நீங்கள் நீதியைக் கொண்டு நிற்பவர்களாக, அல்லாஹ்வுக்காக
வேண்டி சாட்சிசொல்பவர்களாக இருங்கள்! உங்களுக்கு அல்லது
பெற்றோர், பிள்ளைகளுக்கு பாதகமாக இருந்தாலும் சரியே.”
(04 : 135)
தன் அருமைத் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களைப் பார்த்து அல்-குர்ஆனில் இவ்வாறு
கட்டளை இடுகிறான் வல்ல ரஹ்மான்:
“அல்லாஹ் இறக்கி
வைத்த வேதத்தை நான் நம்பியுள்ளேன் என்றும் உங்களுக்கிடையில்
நான் நீதமாக நடக்கும்படி பணிக்கப்பட்டுள்ளேன் என்றும்
நீர் கூறுவீராக!” (42 : 15)
வாழ்வியலின் அனைத்து அம்சங்களிலும்
நீதி பிறழாமை அத்தியாவசியமானது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்
நீதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்வினதும்
அவனது தூதரினதும் அசைக்க முடியாத அழுத்தம்திருத்தமான
கட்டளையாகும்.
பேச்சில் நீதமாக நடந்துகொள்ளுமாறு
பணித்த அல்லாஹ் நமது நீதமான பேச்சினால் பாதிக்கப்படுபவர்
எமது உறவினராக இருந்தபோதிலும் சரியே என்ற வகையில் பணித்துள்ளான்.
பின்வருமாறு அல்லாஹ் தஆலா அவனின் பரிசுத்த குர்ஆனில்
அருளுகிறான்:
“நீங்கள் பேசினால்
நீதமாக நடந்துகொள்ளுங்கள். பாதிக்கப்படுபவர் உறவினராக
இருந்தாலும் சரியே.” (06 : 152)
அளவை நிறுவையில் நீதமாக நடந்துகொள்வதை வல்ல அல்லாஹ்
கண்டிப்பாக வலியுறுத்துகிறான். இதனைப் பின்வரும் வசனம்
புலப்படுத்துகிறது:
“அளவையையும்
நிறுவையையும் நீதியைக் கொண்டு நிறைவேற்றுங்கள்!” (06
: 152)
சாட்சிசொல்லும்போது நீதத்தைக் கொண்டு
சாட்சிசொல்லுமாறு ரஹ்மான் ஏவினான். அல்-குர்ஆன் பேசுகிறது:
“விசுவாசிகளே!
நீங்கள் அல்லாஹ்வுக்காக வேண்டி நிற்பவர்களாக, நீதியைக்
கொண்டு சாட்சிசொல்பவர்களாக இருங்கள்!” (05 : 08)
சண்டையிட்டுக்கொண்ட இரு சாராருக்கிடையில்
சமரசம் செய்து வைக்கும்போது நீதியைக் கொண்டு சமரசம்
செய்யுமாறு பணிக்கின்றான் ஏக இறைவன் அல்லாஹ். பின்வரும்
குர்ஆன் வசனம் இதனைத் தெளிவுபடுத்துகிறது:
“அவ்விருவருக்குமிடையில்
நீங்கள் நீதியைக் கொண்டு சமாதானம் செய்து வையுங்கள்!”
(49 : 09)
நீதியைக் கொண்டு தீர்ப்புச் செய்ய
வேண்டுமென்றான் அருள் மறையில் அல்லாஹ் தஆலா.
“அமானிதங்களை
அவற்றுக்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைக்க வேண்டுமென்றும்
மேலும் நீங்கள் தீர்ப்புச் செய்தால் நீதத்தைக் கொண்டு
நீங்கள் தீர்ப்புச் செய்ய வேண்டுமென்றும் நிச்சயமாக
அல்லாஹ் உங்களைப் பணிக்கிறான்.” (04 : 58)
மனைவியருக்கிடையில் நீதமாக நடக்க வேண்டுமென்பது
அல்-குர்ஆனில் அல்லாஹ்வின் மற்றொரு கட்டளையாகும்.
“நீங்கள் நீதமாக
நடக்க முடியாது என்று பயந்தால் ஒருத்தியை அல்லது உங்களின்
வலக் கரம் சொந்தமாக்கிக்கொண்டவளைக் கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்!”
(04 : 03)
பிள்ளைகளுக்கிடையில் நீதமாக நடந்துகொள்ளுமாறு
நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பணித்தார்கள்.
“நீங்கள் அல்லாஹ்வைப்
பயந்துகொள்ளுங்கள்! மேலும் உங்கள் பிள்ளைகளுக்கிடையில்
நீதமாக நடந்துகொள்ளுங்கள்!” (அறிவிப்பவர் : நுஃமான்
இப்னு பஷீர் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : சஹீஹ் அல்-புகாரி)
இவ்வாறு அல்லாஹ்வினதும் அவனது தூதர்
முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களினதும் நீதியாக
நடப்பதை வலியுறுத்துகின்ற உறுதியான கட்டளைகள் ஏராளம்
ஏராளம்.
நீதியில் மன இச்சைக்கு இடமில்லை
பொதுவாக மனிதன் தனக்கு எல்லாவற்றிலும்
நீதியை எதிர்பார்க்கிறான். அதில் அவன் கண்ணும்கருத்துமாக
இருக்கிறான். ஆனால் அடுத்தவருக்கு நீதி கிடைக்க வேண்டும்
என்பதிலே அவன் அசிரத்தைக் காட்டுகிறான். எனவேதான் எல்லாம்
வல்ல அல்லாஹ் நீதமுடன் நடப்பதில் மனிதனின் விருப்பு
வெறுப்புகளுக்கு, காய்தல் உவத்தலுக்கு அறவே இடமளிக்கக்
கூடாது என்று துலாம்பரமாக சொல்லி வைத்தான். பின்வரும்
குர்ஆனிய வசனங்களில் இதனை நாம் அவதானிக்கலாம்:
“ஆகவே நீதியாக
நடப்பதில் நீங்கள் மன இச்சையைப் பின்பற்றாதீர்கள்!”
(04 : 135)
“ஒரு கூட்டத்தாரை
வெறுப்பது நீங்கள் நீதமாக நடக்காதிருப்பதற்கு திண்ணமாக
உங்களைத் தூண்ட வேண்டாம்!” (05 : 08)
தலைமைகளிடம் நீதம்
பொதுவாக சகல மனிதர்களும் நீதி தவறாது
நடந்துகொள்ள கண்டிப்பாக எதிர்பார்க்கப்படும் அதே சமயம்
ஆட்சிக் கதிரையில் அமர்ந்துள்ளோர், மக்களை நிருவகிப்போர்
நீதி வழுவாது காரியமாற்ற மிக மிக கண்டிப்பாக எதிர்பார்க்கப்படுகின்றனர்.
இந்தப் பின்னணியிலேயே நீதி தவறாத தலைவர்கள் இஸ்லாத்தில்
விதந்து கூறப்பட்டுள்ளனர். கீழ்வரும் நாயக வாக்கியங்களில்
இவ்வுண்மையை நன்கு அவதானிக்கலாம்:
“தன்னுடைய நிழல்
தவிர்ந்த வேறு நிழலில்லாத நாள் மறுமை நாளில் அல்லாஹ்
தஆலா தனது நிழலில் நிழல் கொடுக்கும் எழுவர் நீதமான தலைவன்,
அல்லாஹ்வின் வணக்கத்தில் வளர்ந்த வாலிபன், மஸ்ஜித்களில்
தன் இதயம் இணைக்கப்பட்டுள்ள மனிதன், அல்லாஹ்வுக்காக
பரஸ்பரம் நேசித்த இரு மனிதர்கள் - அவன் பேரில் சேர்ந்தனர்
மேலும் அவன் பேரில் பிரிந்தனர், அந்தஸ்தும் அழகுமுள்ள
ஒரு பெண் தன்னை அழைக்க நிச்சயமாக நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்
என்று கூறிய மனிதர், ஒரு தர்மம் செய்து தன் வலக் கரம்
செலவளிப்பதை தன் இடக் கரம் அறியாதிருக்கும் பொருட்டு
அதனை மறைத்த மனிதர், தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து
கண்ணீர் பெருக்கெடுத்த மனிதர்.” (அறிவிப்பவர் : அபூ
ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் அல்-புகாரி)
“நீதமாக நடப்பவர்கள்
நிச்சயமாக அல்லாஹ்விடம் ரஹ்மானின் வலதில் ஒளியினாலான
மேடைகள் மீதிருப்பர். அவனின் இரண்டு கைகளுமே வலதாகும்.
தம்முடைய தீர்ப்பிலும் தம்முடைய குடும்பத்தவர்களிலும்
தாம் பொறுப்பேற்றதிலும் நீதமாக நடந்துகொள்கின்றனரே அத்தகையவர்கள்.”
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு
அன்ஹுமா), நூல் : சஹீஹ் முஸ்லிம்)
“முஸ்லிமான நரையுடையவரையும்
அல்-குர்ஆனில் அளவுகடந்து போகாத மேலும் அதனைப் புறக்கணிக்காத
அதனை மனனமிட்டவரையும் நீதியான அரசனையும் கண்ணியப்படுத்துவது
அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்துவதைச் சார்ந்ததாகும்.” (அறிவிப்பவர்
: அபூ மூஸா அல்-அஷ்அரி (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன்
அபீ தாவூத்)
நீதியை வெறும் வார்த்தைகளுக்குள் மாத்திரம்
அடக்கி வாய்ச் சவடால் விடுகின்ற தலைவராக இராது எல்லாருக்கும்
எல்லா சந்தர்ப்பங்களிலும் நியாயவானாக திகழ்ந்தார்கள்
முத்தான முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.
நீதியின் முன் சகலரும் சமமே என்பதற்கு அன்னார் நடைமுறையில்
செயல் வடிவம் கொடுத்தார்கள். பின்வரும் நிகழ்வு காசினியின்
கண்ணைத் திறக்கச் செய்யப் போதுமானது:
“ஆயிஷா (ரழியல்லாஹு
அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மக்ஸூம் கோத்திரத்தைச்
சேர்ந்த திருடிவிட்ட பெண்ணின் விவகாரம் குரைஷிகளுக்கு
கவலையை ஏற்படுத்தியது. அவள் விடயமாக அல்லாஹ்வின் தூதர்
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் யார் பேசுவது
என அவர்கள் பேசிக்கொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களின் அன்புக்குரிய உஸாமத் இப்னு
ஸைத் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களைத் தவிர எவர் அவர்கள்
மீது துணிவர் என்றனர் அவர்கள். உஸாமா (ரழியல்லாஹு அன்ஹ்)
அவர்கள் அவர்களிடம் பேசினார்கள். அல்லாஹ்வின் தண்டனைகளில்
ஒரு தண்டனையில் நீர் சிபாரிசு செய்கிறீரா? என அல்லாஹ்வின்
தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செப்பி விட்டு
பின்னர் எழுந்து பகிரங்க பிரசங்கம் செய்தார்கள். பின்னர்
உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்களில்
சிறப்பானவர் திருடினால் அவரை விட்டுவிடுபவர்களாகவும்
அவர்களில் பலகீனர் திருடினால் அவர் மீது தண்டனையை நிலைநாட்டுபவர்களாகவும்
அவர்கள் இருந்தமைதான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹம்மதின்
மகள் பாத்திமா திருடினாலும் அவளின் கையை நான் வெட்டுவேன்
என்றார்கள்.” (நூல் : சஹீஹ் அல்-புகாரி)
நீதி அனைத்தினதும் ஒழுங்கு
உண்மையில் நீதி இல்லை என்றால் உலக
விவகாரம் எதுவும் நேராக, சீராக, செம்மையாக இராது, எங்கும்
எப்போதும் அநீதி அரசோச்சும், ஒழுங்கின்மை தலைவிரித்தாடும்,
சட்டமின்மை தாண்டவமாடும், நினைத்தவர் நினைத்ததை நினைத்த
மாத்திரத்தில் நினைத்தவாறு செய்ய தலைப்படுவார், சட்டமும்
ஒழுங்கும் நிலைநாட்டப்பட மாட்டாது, விரும்பியவர்களெல்லாம்
சட்டத்தை தம் கையில் எடுத்துக்கொள்வர், காட்டுத்தர்பார்
மக்களை ஆளும். தலைகீழாக மாறியுள்ள இன்றைய உலகின் தாறுமாறான
நாளாந்த நடப்புகள் அநீதத்தின் நேரடி விளைவுகளும், பக்க
விளைவுகளும் என்பதை எல்லோரும் அவசியம் புரிய வேண்டும்.
தற்காலத்தில் தனி மனித, குடும்ப, சமூக,
பொருளாதார, கல்வி, அரசியல் வாழ்வு எல்லாமே நீதியைத்
தொலைத்து அதனடியாக நிம்மதியையும் தொலைத்து விட்டது.
இதன் விளைவாக வெட்டுக் குத்து, கொலை போன்ற பயங்கர நிகழ்வுகளும்
நடந்தேறி வருகின்றன. ஆம். நீதி தொலைந்தால் எல்லாமே தொலைந்து
விடும். நீதி தொலைந்தால் அநீதி மட்டுமே எஞ்சும். நீதி
அனைத்தினதும் ஒழுங்கு என்பது சர்வ நிச்சயம். இமாம் இப்னு
தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு இயம்புகிறார்கள்:
“அது நீதி சகலவற்றினதும்
ஒழுங்காகும். உலக விவகாரம் நீதியைக் கொண்டு நடத்தப்பட்டால்
அது (உலகம்) நேராக இருக்கும். அதனையுடையவருக்கு மறுமையில்
எந்தப் பங்கும் இல்லாவிட்டாலும் சரியே. அது (உலகம்)
எப்போது நீதத்தைக் கொண்டு நடத்தப்படவில்லையோ அது நேராக
இராது. அதை உடையவருக்கு ஈமானிலிருந்து மறுமையில் அவருக்கு
கூலியாகக் கொடுக்கப்படக்கூடியது இருந்தாலும் சரியே.”
(நூல் : அல்-இஸ்திகாமா)
ஆள்பவர் முஃமினாக இருந்தும் நீதியின்
அடிப்படையில் அவர் ஆளவில்லை என்றால் அவரது ஆட்சியின்
கீழ் உலகம் சீராக இராது. ஆள்பவர் முஃமினாக இல்லாமலிருந்தாலும்
நீதியின் அடிப்படையில் அவர் ஆண்டால் அவரது ஆட்சியின்
கீழ் உலகம் சீராக இயங்கும். இதுதான் மேதை இப்னு தைமிய்யா
(ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மேற்படி கூற்றின் கருத்தாகும்.
இந்தப் பேருண்மையை யூதர்கள்கூட புரிந்திருந்தார்கள்.
கைபர் போரைத் தொடர்ந்து முஸ்லிம்களின் கைவசமான யூதர்களின்
பயிர் நிலங்களை முஸ்லிம்கள் யூதர்களிடம் ஓர் ஒப்பந்தத்தின்
கீழ் கையளித்தனர். மகசூலை முஸ்லிம்களும் யூதர்களும்
சரி பாதியாக பகிர்ந்துகொள்ளல் என்பதே அந்த ஒப்பந்தமாகும்.
நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அப்துல்லாஹ்
இப்னு ரவாஹா (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களை அறுவடையை கணிப்பதற்காக
கைபருக்கு அனுப்பி வைப்பார்கள். அவர்கள் நுணுக்கமாக,
துல்லியமாக கணிப்பதை விரும்பாத யூதர்கள் தமக்கு சாதகமாக
கணிப்பதற்கு அவர்களைத் தூண்டும் வகையில் நகைகளை இலஞ்சமாகக்
கொடுக்க முயன்றனர். ‘அல்லாஹ்வின் எதிரிகளே! எனக்கு ஹராமை
உணவளிக்கிறீர்களா? அல்லாஹ் மீது ஆணையாக! நிச்சயமாக நான்
மனிதர்களில் எனக்கு மிக விருப்பமானவரிடமிருந்து உங்களிடம்
வந்துள்ளேன். நீங்கள் உங்கள் கூட்டத்தினராகிய குரங்குகள்,
பன்றிகளைவிடவும் எனக்கு மிக வெறுப்பானவர்கள். உங்களை
நான் வெறுப்பதும் அவர்களை நான் நேசிப்பதும் உங்களுக்கிடையில்
நான் நீதமாக நடக்காமலிருப்பதற்கு என்னைத் தூண்டாது’
என்றார்கள் ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழியல்லாஹு
அன்ஹ்) அவர்கள். ‘இதனைக் கொண்டுதான் வானங்களும் பூமியும்
நேராக நின்றன’ என்றனர் யூதர்கள். (நூல் : அல்-பைஹகி)
நீதியின் பரிமாணம்
உண்மையில் நீதமென்று வரும்போது அல்லாஹ்வின்
பார்வையில் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற வேறுபாடு
கட்டோடு கிடையாது. பிரபஞ்சம் எல்லா மனிதர்களுக்கும்
பொதுவானது. அதிலும் குறிப்பாக பூமியை அல்லாஹ் மனிதர்களுக்காக
வைத்திருப்பதாக கூறுகிறான்.
“மேலும் பூமியை
அவன் (அல்லாஹ்) மனிதர்களுக்காக வைத்தான்.” (55 : 10)
ஓர் இடத்தில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதார்
சேர்ந்து வாழும்பொழுது அவர்களுக்கிடையில் அமைதியான சக
வாழ்வை உறுதிப்படுத்த நீதி இன்றியமையாததாகும். ஏனெனில்
மனிதன் என்ற அளவுகோல் ஒன்று மட்டுமே நீதியின் பரிமாணமாகும்.
இதன் காரணமாகத்தான் அநீதி இழைக்கப்பட்டவன் முஸ்லிமல்லாத
ஒருவனாக இருந்தாலும் அவனின் பிரார்த்தனையை அல்லாஹ் தஆலா
ஏற்றுக்கொள்கிறான். கீழ்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக்
கொள்ளலாம்:
“அநீதி இழைக்கப்பட்டவனின்
பிரார்த்தனையைப் பயப்படுங்கள்! அவன் நிராகரிப்பாளனாக
இருந்தபோதிலும் சரியே. ஏனெனில் அதற்கிடையே தடை கிடையாது.”
(அறிவிப்பவர் : அனஸ் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : முஸ்னத்
அஹ்மத்)
பேரறிஞர் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்)
அவர்கள் இதனை விளக்கும்வண்ணம் இவ்வாறு செப்புகிறார்கள்:
“இதனால்தான்
திண்ணமாக அல்லாஹ் நீதமான அரசை நிலைக்கச் செய்கிறான்.
அது காஃபிராக இருந்தாலும் சரியே. அநீதமான அரசை அவன்
நிலைக்கச் செய்வதில்லை. அது முஸ்லிமாக இருந்தாலும் சரியே
என்று கூறப்பட்டுள்ளது. உலகம் நியாயம், நிராகரிப்புடன்
தொடர்ந்திருக்கும். அநியாயம், இஸ்லாத்துடன் அது தொடர்ந்திருக்காது
என சொல்லப்படுகிறது.” (நூல் : அல்-இஸ்திகாமா)
நீதம் புனிதம்
நீதம் புனிதம். அநீதம் அசிங்கம். நீதி
பிசகி நடந்துகொண்டு தம்மை புனிதர்கள் என்றும் தாம் வாழுமிடம்
புனிதமானது என்றும் மார்தட்டிக்கொள்வது முற்றிலும் அறிவீனமாகும்.
பின்வரும் நிகழ்வில் நாம் இதனை நன்கு படிக்கலாம்:
“கடல் மார்க்கமாக
ஹிஜ்ரத் மேற்கொண்டவர்கள் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களிடம் திரும்பி வந்தபோது அபீசீனியா
மண்ணிலே நீங்கள் கண்டவற்றில் ஆச்சரியமானவற்றை நீங்கள்
எனக்கு அறிவிக்க மாட்டீர்களா? என்று கூறினார்கள் அல்லாஹ்வின்
தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். அவர்களில்
சில இளைஞர்கள் கூறினர்: ஆம். அல்லாஹ்வின் தூதரே! நாம்
அமர்ந்துகொண்டிருந்தபோது அவர்களின் துறவிகளின் மூதாட்டிகளில்
ஒரு மூதாட்டி தன் தலையில் தண்ணீர் குடமொன்றை சுமந்தவளாக
எம்மைத் தாண்டிச் சென்றாள். அவர்களைச் சேர்ந்த ஓர் இளைஞனை
அவள் தாண்டிச் சென்றாள். அவன் தனது இரு கைகளில் ஒன்றை
அவளின் இரு புயங்களுக்கிடையில் வைத்து அவளைத் தள்ளிவிட்டான்.
அவள் தன் முழங்கால்களில் விழுந்தாள். அவளின் குடம் உடைந்தது.
அவள் உயர்ந்தபோது அவனைத் திரும்பிப் பார்த்தாள். ‘துஷ்டனே!
அல்லாஹ் குர்ஸியை வைத்து முன்னோர் பின்னோரை ஒன்றுசேர்த்து
அவர்கள் சம்பாதித்துக்கொண்டிருந்தவற்றை கைகளும், கால்களும்
பேசினால் உனக்குத் தெரியும். என் விவகாரமும் உன் விவகாரமும்
நாளை அவனிடம் எப்படி இருக்கும் என்பதை நீ அறிந்துகொள்வாய்’
என்றாள். ‘அவள் உண்மை சொன்னாள். அவள் உண்மை சொன்னாள்.
அவர்களின் பலவானிடமிருந்து அவர்களின் பலவீனனுக்கு எடுக்கப்படாத
ஒரு சமூகத்தை அல்லாஹ் எப்படி புனிதப்படுத்துவான்? என்று
அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்
கூறுகிறார்கள்.” (அறிவிப்பவர் : ஜாபிர் (ரழியல்லாஹு
அன்ஹ்), நூல் : ஸுனன் இப்னி மாஜஹ்)
நீதி என்றால் அது என்ன என்று மனிதன்
கேட்குமளவுக்கு இன்றைய நாட்களில் நீதம் மறைந்து போய்
விட்டது. நீதிமன்றங்களில்கூட மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல்
போய் விட்டது. நீதத்தின் கோட்டைகளாக மிளிர வேண்டிய நீதிமன்றங்களில்தான்
நீதி, நியாயம் கழுத்து நெரித்துக் கொள்ளப்படுவதாக மனிதர்கள்
பகிரங்கமாகப் பேசிக்கொள்கின்றனர். நீதி பிறழா தலைவன்
ஒருவனைக் காண்பது குதிரைக் கொம்பு. நீதத்தை உறுதிசெய்ய
வேண்டிய தலைமைகளே அதற்கு வேட்டுவைக்கின்றன. இன்று நீதி
குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது போல் சரித்திரத்தில்
நீதி குழி தோண்டிப் புதைக்கப்பட்டதை காண்பது கஷ்டம்.
அந்தோ பரிதாபம்!
நிலைமை இந்த அளவு மோசமடைந்துள்ளதால்
நீதி, நியாயம் நமக்கெங்கே இந்த உலகில் கிடைக்கப்போகிறது
என மக்கள் நிராசைகொண்டவர்களாக நீதித் தீர்வுகளை, நியாயத்
தீர்ப்புகளை நாடுவதைக்கூட படிப்படியாக கைவிட்டு வருவது
கண்கூடு.
எனவே மீண்டும் குவலயம் நீதி, நியாயம்
காண வேண்டும்! எல்லா மனிதர்களும் நிம்மதியாக வாழ வேண்டும்!
அமைதி, சமாதானம் ஆகாயம் வரை உயர்ந்து நிற்க வேண்டும்!
இதுவே தரணி வாழ் மாந்தர் எல்லோரினதும் வேணவா.