மனித
வாழ்வை நெறிப்படுத்தி வளப்படுத்துவதில் இறை மார்க்கம்
புனித இஸ்லாம் சட்டங்களோடு சரி நிகர் சமானமாக பண்பாடுகளையும்
இணைத்து வைத்துள்ளது. சட்டங்களை (அஹ்காம்) மாத்திரம்
நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒரு முஸ்லிம் பரிபூரண முஸ்லிமாகிவிடுவதுமில்லை.
பண்பாடுகளை (அக்லாக்) மாத்திரம் கைக்கொள்வதன் மூலம்
ஒரு முஸ்லிம் முழுமையான முஸ்லிமாகிவிடுவதுமில்லை. அஹ்காமும்
அக்லாக்கும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன..
வாழ்வியலின் சகல அம்சங்களையும்
தழுவிய இறை நெறி இஸ்லாம் வியாபாரக் கொடுக்கல் வாங்கலையும்
செம்மையாய் நெறிப்படுத்தியுள்ளது. வாங்குபவர், விற்பவர்,
சரக்கு, கிரயம், விற்பதாக அல்லது வாங்குவதாக தெரிவித்தல்,
விற்பதற்கான அல்லது வாங்குவதற்கான தெரிவிப்பை ஏற்றுக்கொள்ளல்
என விபரமாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் சட்டங்களையும்
பண்பாடுகளையும் வகுத்துள்ளது. அவை முழு அளவில் பின்பற்றியொழுகப்பட்ட
நிலையில் நடந்தேறும் வியாபாரக் கொடுக்கல் வாங்கலே இஸ்லாத்தின்
பார்வையில் அங்க சம்பூரணமான வியாபாரக் கொடுக்கல் வாங்கலாகும்.
வியாபாரக் கொடுக்கல்
வாங்கலை ஆளுகின்ற சட்டங்களை ஓரளவேனும் அறிந்து புரிந்து
வைத்திருக்கின்ற நம்மில் பலர் அதன் பண்பாடுகள் பற்றிய
அறிவைப் பெறுவதில் ஆர்வம் காட்ட முயல்வது வரவேற்கற்பாலது.
இப்பின்னணியில் இஸ்லாம் கூறும் வியாபாரத்தின் பண்பாடுகள்
சிலவற்றை தெரிந்துகொள்ள இக்கட்டுரையில் முயற்சி செய்யப்படுகின்றது.
உண்மை:
வியாபாரி தனது சரக்குகளை
விற்று ஆதாயம் பெற்று தனது வியாபாரத்தை இன்னுமின்னும்
வளப்படுத்திக்கொள்ள விரும்புகின்றான். இதற்காக விற்பனையின்
போது வாடிக்கையாளரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அருமையாய்
உபசரித்து அழகாகப் பேசுகின்றான். இயன்ற மட்டும் தனது
பொருட்களை அவருக்கு விற்று காசாக்கிக் கொள்வதில் மிகுந்த
அக்கறை செலுத்துகின்றான். இத்தருணத்தில் வியாபாரி உண்மையாய்
நடந்து கொள்வது அவசியத்திலும் அவசியமாகும். வியாபாரப்
பொருள் பற்றி முற்றிலும் உண்மையான வர்ணனையை அவர் வாடிக்கையாளருக்கு
வழங்க வேண்டும். பொய் அதில் அறவே கலந்திடலாகாது. முழுக்க
முழுக்க அல்லாஹ்வைப் பயந்த நிலையில் வியாபாரம் நடைபெற
வேண்டும். உண்மைக்குப் புறம்பான எதுவும் வியாபாரத்தின்
போது அனுமதிக்கப்படவில்லை.
அல்லாஹ்வை அஞ்சி நன்முறையில்
உண்மையுடன் வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை சிலாகித்தும்
மாற்றமாக நடப்பவர்களை எச்சரித்தும் நாயக வாக்கியங்கள்
வந்துள்ளன. பின்வரும் ஹதீஸ் இவ்விடயத்தில் கவனத்திற்குரியதாகும்:
“நிச்சயமாக
வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவர் அல்லாஹ்வைப்
பயந்து நன்முறையில் உண்மையுடன் நடந்து கொண்டோரைத் தவிர.”
(அறிவிப்பவர்: ரிபாஅஹ் இப்னு ராபிஃ (ரழியல்லாஹு அன்ஹு),
நூல்: முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
எனவே உண்மையைக் கைக்கொள்வது
ஏனைய சந்தர்ப்பங்களில் போலவே விற்றலின் போதும் ஒரு முக்கிய
பண்பாக விதந்துரைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை:
ஒரு முஸ்லிம் நம்பிக்கையின்
பிரதிபிம்பமாக இருப்பான். ஏமாற்றல் அவனுக்கு வெறுப்பிலும்
வெறுப்பாக இருக்கும். சொல், செயல் எல்லாவற்றிலும் நம்பிக்கை
அவசியம் தேவையென இஸ்லாம் வற்புறுத்தி நிற்கின்றது. அல்லாஹு
தஆலா தனது தூதர்களிடம் கட்டாயப்படுத்திய பண்புகளுள்
ஒன்று நம்பிக்கை.
நம்பிக்கையாக நடப்பவனை
எல்லோரும் நம்புவர், அவனுடன் நம்பிக்கையுடன் பழகுவர்,
உறவாடுவர். ஏமாற்றுபவனுடன் எவரும் உறவு வைத்துக்கொள்ள
அஞ்சுவர்.
வியாபாரத்தில் நம்பிக்கை
இன்றியமையாதது. அதன் அனைத்து அம்சங்களிலும் நம்பிக்கை
அவசியம். நம்பிக்கையான வர்த்தகரின் வர்த்தகம் பெயர்,
புகழுடன் நிலைத்து நிற்கும். சந்தையில் அதற்குள்ள நன்மதிப்பு
வாடிக்கையாளர்களை அதனை நோக்கி இழுத்தழைத்துச் செல்லும்.
நம்பிக்கையான வியாபாரி
பற்றி புகழ்ந்து பேசினார்கள் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்):
“உண்மையான
நம்பிக்கையான வியாபாரி நபிமார்கள், உண்மையாளர்கள், ‘ஹீத்களுடன்
இருப்பார்.” (அறிவிப்பவர்: அபூ சஈத் (ரழியல்லாஹு அன்ஹு),
நூல்: ஸுனன் அல்-திர்மிதி)
ஏமாற்றி வியாபாரம்
செய்வது முற்றிலும் தடுக்கப்பட்டது. ஒன்றிருக்க வேறொன்றைச்
சொல்லி, ஒன்றைக் காட்டி மற்றொன்றைக் கொடுத்து வியாபாரம்
பண்ணுவது ஏமாற்று வியாபாரமாகும்.
உணவுக் குவியலில் நனைந்த
பகுதியை அடியிலும் உலர்ந்த பகுதியை மேலாகவும் வைத்து
விற்றுக்கொண்டிருந்த மனிதரை தடுத்து வழிப்படுத்தி “எம்மை
ஏமாற்றுபவன் எம்மைச் சேர்ந்தவனல்லன்” என்று செப்பினார்கள்
நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். (அறிவிப்பவர்:
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு), நூல்: சஹீஹ் இப்னி ஹிப்பான்)
முஸ்லிம் சமூகம் நம்பிக்கைக்குரிய
சமூகம். அதன் ஒவ்வோர் அங்கத்தவனும் நம்பிக்கையாளனாக
இருப்பது கட்டாயம். ஏமாற்றுப் பேர்வழிகள் முஸ்லிம் சமூகத்தில்
சேர்ந்திருக்க அருகதையற்றோர் என்பதே ரஸூல் (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களது மேற்படி கூற்றின் கருத்தாகும்.
வியாபாரத்தின் போது நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் இதனைக் கூறியிருப்பது இன்னும் கூர்ந்து அவதானிக்கப்பட
வேண்டும்.
இதனையெல்லாம் பார்க்கும்
போது வியாபாரத்தில் நம்பிக்கை ஒரு முக்கிய பண்பென்பது
துலாம்பரமாகின்றது.
தாராளத்தன்மை:
இஸ்லாம் தாராளத்தன்மையின்
மார்க்கம். தன்னைப் பின்பற்றுவோரிடமும் அது தாராளத்தன்மையை
வெகுவாக எதிர்பார்க்கின்றது. தாராள மனப்பான்மை சட்ட
எல்லைகளைத் தாண்டியதாகும், வரம்புகள் அற்றதாகும். வியாபாரத்தின்
போதும் இவ்வுண்ணத பண்பு கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
வியாபாரியும் தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
வாடிக்கையாளரும் தாராளத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
பேரம் பேசுவது, இலாபம் வைப்பது, விற்பது, கிரயத்தைப்
பெறுவது, பொருளைக் கையளிப்பது, பொருளைக் கையேற்பது போன்ற
அனைத்து அம்சங்களிலும் இருவரும் தாராள மனதுடன் ஒருவர்
மற்றவரின் நலன் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிசெய்யும்
வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
தனது நலனில் மட்டும்
அக்கறை காட்டி இறுகிய நெஞ்சுடன் விற்பவரும் நடந்துகொள்ளக்
கூடாது, வாங்குபவரும் நடந்துகொள்ளக் கூடாது. நெஞ்சு
விரிந்த நிலையில் தாராள மனதுடன் வியாபாரக் கொடுக்கல்
வாங்கலில் ஈடுபடுவோருக்கு வல்லவன் அல்லாஹ்வின் அருள்
வேண்டி பிரார்த்தித்தார்கள் அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள்.
“விற்றாலும்
வாங்கினாலும் மீளக் கேட்டாலும் தாராளத்தன்மையுள்ள மனிதனுக்கு
அல்லாஹ் அருள் புரிவானாக!” (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழியல்லாஹு
அன்ஹு), நூல்: சஹீஹ் அல்-புகாரி)
வியாபாரக் கொடுக்கல்
வாங்கலை தாராளத்தன்மையுடன் நடத்துவது அலாதியான அதி முக்கிய
பண்பாடென்பது இங்கு தெளிவாகின்றது.
சத்தியம் செய்வதைத் தவிர்ந்துகொள்ளல்:
சாமான்களை விற்றுப்
பணமாக்கும் பொருட்டு பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டிய
சந்தர்ப்பங்கள் ஏற்படும். எல்லாமே மாறிப் போய் விட்ட
இந்நாட்களில் வியாபாரமும் பெரும் போட்டிக்கு மத்தியில்
நடைபெறுவது வெள்ளிடை மலை. சந்தையின் இயல்பே இது தானா
என எண்ணும் அளவுக்கு கடும் போட்டா போட்டி வர்த்தகர்கள்
மத்தியில் நிலவுகின்றது. எதனைச் சொல்லியாவது வாடிக்கையாளரைத்
திருப்திப்படுத்தி சரக்கை அவர் தலையில் கட்டி பணமீட்டிக்
கொள்வதில் முனைப்புடன் செயற்படுகின்ற வர்த்தகர்கள் சில
பல வேளைகளில் சத்தியம் செய்யத் தவறுவதுமில்லை. அது அவர்களுக்கு
ஒரு பொருட்டும் அல்ல.
சத்தியம் செய்தல் உண்மைக்காக
இருந்தாலும் சரியே தவிர்க்கப்பட வேண்டியதாகும். குற்றச்சாட்டுக்களை
மறுத்துரைக்க வேண்டிய கட்டங்கள் போன்ற சந்தர்ப்பங்களில்
மாத்திரம் அனுமதிக்கப்பட்ட சத்தியம் செய்தலை சாதாரணமாக
வியாபாரக் கொடுக்கல் வாங்கலின் போதெல்லாம் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பொய் சத்தியம் செய்வது பொல்லாத பாவம் என்பதுடன் உண்மை
சத்தியம் செய்வது விரும்பத்தகாததாகும்.
வியாபார வேளையில் உண்மையைப்
பேசி நேர்மையுடன் நன்முறையில் நடந்துகொள்வது போதுமானது,
வர்த்தகத்தில் அபிவிருத்தி தரவல்லது. மாற்றமாக சத்தியம்
செய்தல் பரக்கத்தை இல்லாதொழித்து விடும். பின்வரும்
நபி மொழி இதற்கு சான்றாகும்:
“சத்தியம்
சரக்கை விற்கச் செய்யும், பரக்கத்தை ஒழிக்கச் செய்யும்.”
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு), நூற்கள்:
சஹீஹ் அல்-புகாரி, சஹீஹ் முஸ்லிம்)
அதிலும் வியாபாரத்தில்
பொய் சத்தியம் செய்வது அல்லாஹ்வின் தண்டனைக்குரியதாகும்.
பின்வரும் நாயக வாக்கியம் இதனை உணர்த்துகின்றது:
“மறுமை
நாளில் மூவருடன் அல்லாஹ் பேசவும் மாட்டான், அவர்களைப்
பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும்
மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு” என
நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
“அவர்கள் தோல்வியடைந்தார்கள், நஷ்டமைந்தார்கள். அல்லாஹ்வின்
தூதரே! அவர்கள் யார்?” எனக் கேட்டார்கள் அபூ தர் (ரழியல்லாஹு
அன்ஹு) அவர்கள். “கரண்டைக் காலுக்குக் கீழ் ஆடை அணிபவன்,
தான் செய்த உபகாரத்தை சொல்லிக்காட்டுபவன், தனது சரக்கை
பொய் சத்தியம் செய்து விற்பவன்” என நபி (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
அபூ தர் (ரழியல்லாஹு அன்ஹு), நூல்: சஹீஹ் முஸ்லிம்)
ஓர் உண்மையான இறையச்சமுள்ள
வியாபாரியின் உயர்ந்த பண்பாடுகளுள் ஒன்றாக சத்தியம்
செய்தலைத் தவிர்ந்திருப்பதை கூறலாம்.
நடைபெற்று முடிந்த வியாபாரக் கொடுக்கல் வாங்கலை முறித்துக்கொள்ளல்:
விற்பவரும் வாங்குபவரும்
வியாபாரக் கொடுக்கல் வாங்கலை முறித்துக்கொள்ளும் விருப்ப
நிபந்தனையின்றி நடத்தி முடித்துவிட்ட பின் வாங்கியவர்
பொருளை திருப்பிக் கொடுக்கவோ, விற்றவர் பொருளை திருப்பிக்
கேட்கவோ சட்ட ரீதியாக அனுமதியில்லை. சில வேளைகளில் இவ்வாறான
சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு. இத்தகைய சந்தர்ப்பங்களில்
இருவரும் மனம் ஒப்பி நடைபெற்று முடிந்த வியாபாரக் கொடுக்கல்
வாங்கலை முறித்துக்கொள்ள முன்வருதல் மற்றுமொரு வியாபார
பண்பாடாகும்.
வாங்கியவருக்கு சில
வேளை வாங்கும் போதிருந்த மனநிலை மாறி அப்பொருள் தற்போதைக்கு
தேவையில்லை என்றுணர அதனை மீண்டும் விற்றவரிடம் கொண்டு
செல்ல விரும்பலாம். விற்றவர் என்ன சொல்வாரோ, மீள எடுத்துக்கொள்வாரா,
இல்லையா என்றெல்லாம் அவர் எண்ணத்தில் ஊசலாட தயங்கித்
தயங்கி விற்றவரிடம் செல்கிறார். அவரோ பெருமனதுடன் அச்சரக்கை
மீளப் பெற்றுக்கொண்டு எடுத்திருந்த கிரயத்தை அப்படியே
திருப்பிக்கொடுத்து பண்பாட்டுடன் நடந்துகொள்கிறார்.
இது ஒரு வகை.
சில வேளை விற்றவர்
ஏன் விற்றேன், சாமான் எனக்குத் தேவையாக உள்ளதே என அங்கலாய்த்துக்
கொண்டு வாங்கியவரிடம் சென்று தனது நிலையை எடுத்துச்
சொல்கிறார். வாங்கியவரோ தாராள மனதுடன் கிரயத்தை மீளப்
பெற்றுக் கொண்டு பொருளை திருப்பிக் கொடுத்து பண்பாடாக
நடந்துகொள்கின்றார். இது மற்றுமொரு வகை.
இரு வகைகளிலும் பண்பாடு
பளிச்சிடுகின்றது. இருவருமே அல்லாஹ்வின் மன்னிப்புக்குரியவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்
இவ்வாறு சொன்னார்கள்:
“யார்
ஒரு முஸ்லிமுக்கு அவரது வியாபாரத்தை மன்னிப்பாரோ அல்லாஹ்
அவரின் தவறை மன்னிப்பான்.” (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா
(ரழியல்லாஹு அன்ஹு), நூல்: ஸுனன் அபீ தாவூத்)
கடனை எழுதிக் கொள்ளலும் அதற்கு சாட்சி வைத்தலும்:
உடனடி கிரயக் கொடுப்பனவு,
பிந்திய கிரயக் கொடுப்பனவு இரண்டுமே வியாபாரத்தின் போது
சகஜமானவையாகும். சமகால சந்தை நிலை பெரும்பாலும் கடனுக்கு
கொள்வனவு செய்வதாகவே உள்ளது. கடனைப் பொறுத்த மட்டில்
அதனை எழுதிக்கொள்வதும் அதற்கு சாட்சி வைத்துக்கொள்ளலும்
ஓர் உயர்ந்த பண்பாடாக இஸ்லாத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வியாபாரக் கடன்களும்
இப்பண்பாட்டுக்குட்பட்டவையாகவே அமைய வேண்டும். மறதி,
தடுமாற்றம் மனிதப் பலவீனங்களாகும். இவை கடன் கொடுத்தவருக்கும்
ஏற்படலாம், கடன் எடுத்தவருக்கும் ஏற்படலாம். வீண் பிரச்சினைகள்,
மனக்கசப்புகள், பகைமைகள் என இதன் தீய விளைவுகளின் பட்டியல்
நீண்டு செல்கிறது. கடன் நிமித்தம் பிறந்த பிரச்சினைகள்
பூதாகரமாகி இமாலயப் பிரச்சினைகளாக விஸ்வரூபமெடுத்து
கொலையிலும் தற்கொலையிலும் முடிந்துள்ள நிகழ்வுகள் ஏராளம்
ஏராளம்.
பிரச்சினைகள் எழுவதற்கு
முன்னரே அவற்றுக்கான பரிகாரங்களை சொன்ன மார்க்கம் இஸ்லாம்.
வெள்ளம் வரு முன் அணை கட்ட வேண்டும். கடன் கொடுக்கும்
சந்தர்ப்பத்தில் கொடுப்பவரின் பெயர், பெறுபவரின் பெயர்,
கடன் தொகை, கொடுக்கப்படும் இடம், காலம், மீளக் கொடுக்கப்படவேண்டிய
காலம், முறை போன்ற விபரங்கள் தெளிவாக ஒரு கடதாசியில்
எழுதப்பட்டு அதில் கொடுப்பவரும் பெறுபவரும் கையொப்பமிட்டு
உறுதிப்படுத்தி, அக்கடதாசியில் அதனை உறுதிப்படுத்தும்
பொருட்டு இரு சாட்சிகள் ஒப்பமிட்டு நேர்த்தியான ஆவணமொன்றாக
அதனைப் பாதுகாத்து வைக்கும் சிறந்த பண்பாடு எப்பொழுதும்
கடைப்பிடிக்கப்பட வேண்டியதாகும். வியாபாரக் கடன்கள்
இதற்கு விதிவிலக்கல்ல.
கடன் பற்றிய சட்டதிட்டங்கள்,
பண்பாடுகள் குறித்து பேசும் வசனமே அல்-குர்ஆனின் மிக
நீண்ட வசனமாகும்.
“விசுவாசிகளே!
ஒரு குறிப்பிட்ட தவணை வரை நீங்கள் ஒருவருக்கொருவர் கடன்
கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டால் அதை எழுதிக்கொள்ளுங்கள்.
மேலும் எழுதுபவர் உங்களிடையே நீதத்தைக் கொண்டு எழுதவும்.
எழுத்தாளர் அல்லாஹ் அவருக்கு கற்றுக்கொடுத்தது போன்று
எழுதுவதற்கு மறுக்க வேண்டாம். ஆகவே அவர் எழுதிக் கொடுக்கவும்.
இன்னும் எவர் மீது கடன் இருக்கிறதோ அவர் வாசகத்தைக்
கூறவும். தன் இரட்சகனாகிய அல்லாஹ்வை அவர் பயந்துகொள்ளவும்.
அதில் யாதொன்றையும் அவர் குறைத்து விட வேண்டாம். எவர்
மீது கடன் இருக்கின்றதோ அவர் அறிவற்றவராக அல்லது பலவீனமானவராக
அல்லது தானே வாசகஞ் சொல்லச் சக்தியற்றவராக இருந்தால்
அவருடைய பாதுகாவலர் நீதமாக வாசகங் கூறவும். மேலும் உங்கள்
ஆண்களிலிருந்து இரு சாட்சிகளை நீங்கள் சாட்சிகளாக்கிக்
கொள்ளுங்கள். அவ்வாறு இருவரும் ஆண்களாக இல்லாதிருந்தால்
சாட்சியாளர்களில் நீங்கள் பொருந்திக்கொள்ளக்கூடியவர்களில்
ஓர் ஆணும் இரு பெண்களுமாகும். அவ்விருவரில் ஒருவர் மறந்து
விடலாம். அப்போது அவ்விருவரில் ஒருத்தி மற்றொருத்திக்கு
நினைவுபடுத்துவாள். சாட்சிகள் அழைக்கப்படும் போது மறுக்க
வேண்டாம். இன்னும் சிறிதாயினும் அல்லது பெரிதாயினும்
அதன் தவணை வரையில் அதனை எழுதிக்கொள்வதில் சடைவடைந்து
விடாதீர்கள். இது அல்லாஹ்விடத்தில் மிக்க நீதியானதும்
சாட்சியத்தை மிக்க உறுதிப்படுத்தக் கூடியதும் நீங்கள்
சந்தேகிக்காமல் இருப்பதற்கு மிக்க நெருக்கமானதுமாகும்.”
(2 : 282)
சதக்கா:
சதக்கா பொதுவாக வலியுறுத்தப்பட்ட
ஓர் இபாதத்தாகும். ஒரு முஸ்லிமின் இதயம், கரம் இரண்டும்
அடுத்தவர் நோக்கி விரிந்திருக்க வேண்டும். பிறரின் இன்ப
துன்பங்கள், சுக துக்கங்களில் கவனம் செலுத்தும் நல்ல
பண்பை ஊக்குவிக்கும் இஸ்லாம் அதற்கான ஒரு முக்கிய வழியாக
சதக்காவை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
ஆனால் விசேடமாக வியாபாரிகள்
சதக்காவில் அதிக அக்கறை காட்டி சிரத்தையுடன் ஈடுபடுமாறு
வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளது. ஷைத்தான் வியாபாரக்
கொடுக்கல் வாங்கலில் நமக்குத் தெரியாமலே சமுகமளித்திருக்கும்
மூன்றாமவனாவான். வியாபாரிகளை பாவங்களுக்கு பலியாகி விடச்
செய்வது அவன் நோக்கமாகும். சில பல வேளைகளில் அறிந்தோ,
அறியாமலோ வர்த்தகர்கள் அவன் வலையில் சிக்கிக்கொள்வதுண்டு.
ஷைத்தானின் தூண்டுதலால் வியாபாரத்தின் போது நடைபெற்று
விடுகின்ற பாவங்கள், தப்புத் தவறுகளுக்கு சதக்கா பிராயச்சித்தமாக
அமைகிறது. அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் கூறினார்கள்:
“வியாபாரிகளே!
திண்ணமாக ஷைத்தானும் பாவமும் வியாபாரத்தில் சமுகமளிக்கின்றனர்.
எனவே உங்கள் வியாபாரத்தை சதக்காவுடன் கலந்து விடுங்கள்.”
(அறிவிப்பவர்: கைஸ் (ரழியல்லாஹு அன்ஹு), நூல்: ஸுனன்
அல்-திர்மிதீ)
சதக்கா வியாபாரத்தின்
ஓர் உபரி அங்கமாக அமைந்து வியாபாரிக்கு பிராயச்சித்தமாக,
ஏழை எளியோருக்கு உதவியாக இருப்பது இங்கு கண்கூடு. இதுவும்
வியாபாரிகள் கைக்கொள்ள வேண்டிய ஒரு சிறந்த பண்பாடாகும்.
மொத்தத்தில் நம் வியாபார
முயற்சிகள் சட்டங்களைப் பேணி பண்பாடுகளைக் கைக்கொண்டு
சட்டப்படியானவையாக, பண்பாடானவையாக அமைந்திடல் வேண்டும்.
ஒரு முஸ்லிம் வர்த்தகனின் வியாபார நடவடிக்கைகள் உண்மையில்
அப்படித்தான் இருக்கும். உண்மை, நேர்மை, வாய்மை, நம்பிக்கை,
நானயம், தாராளத்தன்மை முதலான உதார குணங்கள் கண்ணியத்துக்குரிய
சஹாபிகளின் வியாபாரங்களில் முழு அளவில் பளிச்சிட்டன.
எமது வர்த்தக முயற்சிகளும் அவர்களைப் பின்பற்றி அமையுமாயின்
அல்லாஹ்வின் கிருபையால் பிற மதத்தவரும் நம்மைப் பற்றி
நல்லெண்ணம் கொள்வர், நாம் பின்பற்றி வாழ்கின்ற புனித
இஸ்லாத்தை நோக்கி ஆகர்ஷிக்கப்படுவர். சொல் நாவை விட
செயல் நா மிகத் தெளிவானது.
1429.09.21
2008.09.22
|