மல்லிகை 2008 டிசம்பர் இதழ் படித்தேன்.
அதில் சகோதரர் எஸ்.எச்.எம். ஜமீல் எழுதியிருந்த
“பித்தன் கதைகள்“ எனும் ஆக்கத்தில் இடம்பெற்றிருந்த
“இந்நாட்டின் தலைசிறந்த ஆய்வாளரான எம்.எம்.எம். மஹ்ரூப்
அவர்கள் இச்சிறுகதைத் தொகுதிக்கான நீண்ட விமர்சன நோக்கொன்றினைச்
செய்துள்ளார்.“ எனும் வரிகள் என் கவனத்தை ஈர்த்தன. இப்பின்னணியில்தான்
இதனை எழுதி அனுப்புகின்றேன்.
எம்.எம்.எம். மஹ்ரூப் ஈழத் திரு நாடு
கண்ட தலைசிறந்த அறிஞர், ஆய்வாளர், எழுத்தாளர், விமர்சகர்,
ஆசிரியர். அவரின் ஆக்கப் படைப்புக்கள் இதற்கு தக்க சான்றாகும்.
அவரை அறிந்த, புரிந்த எவரும் அன்னாரின் அபார ஆற்றலை,
பன்முகப் புலமையை முழு மனதாக ஏற்றுக்கொள்வர்.
அவர் நிறையவே எழுதினார். உள்நாட்டு,
வெளிநாட்டு நாளிதழ்கள், பருவ வெளியீடுகள், சஞ்சிகைகள்
அவரின் எழுத்தாக்கங்களை சுமந்து வந்தன. சர்வதேச புகழ்பூத்த
ஆய்வு சஞ்சிகைகளில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள்
தலைமுறை தலைமுறையாக நிலைத்து நின்று ஆய்வாளர்களுக்கும்,
ஏனையோருக்கும் பயன்தரக்கூடிய கனதியான, காத்திரமான ஆக்கங்களாகும்.
அவரின் ஓர் ஆய்வுக் கட்டுரையைப் படிப்பது பல நூற்களைப்
படிப்பதற்கு சமம்.
அன்னாரின் அந்திம காலத்தில்தான் அவரது
எழுத்துக்களைப் படிக்க, அவரைப் பற்றி அறிய சிறியவனான
எனக்கு வாய்ப்புக் கிட்டியது. அவரின் படைப்புகளுடாக
அவரை சந்தித்துள்ளேன். அவரை நேரடியாக சந்திக்கும் சந்தர்ப்பம்
கிட்டவில்லையே என இன்னமும் கவலைப்படுவதுண்டு. தொலைபேசியில்
சில தடவைகள் அவருடன் கதைத்துள்ளேன்.
இப்பெரு மனிதர் பற்றி, அவர் தம் சேவைகள்
பற்றி, அவரின் ஆக்க இலக்கியப் பங்களிப்பு பற்றி இது
வரையும் ஆக்கபூர்வமான குறிப்பிட்டுக் கூறத்தக்க எதுவுமே
காணக்கிடைக்காமலிருப்பது பெருங் கவலையாகும். அவரை நேரடியாகக்
கண்டோர், பழகியோர், பயன்பெற்றோர், அவரின் மாணவர்கள்
என்றெல்லாம் பலர் உள்ளனர். யார் யாருக்கெல்லாம் எதை
எதையோ செய்கின்ற நாம் உறுப்படியான காலத்தால் அழிந்து
போகாத விலைமதிக்க முடியாத பொன்னான எண்ணிறந்த இலக்கிய
ஆய்வுப் பணிகளை ஆரவாரமின்றி அமைதியாக இருந்து செய்து
விட்டு சென்ற மர்ஹூம் எம்.எம்.எம். மஹ்ரூபை மாத்திரம்
நினைக்கத் தவறுவதேன்? இது செய்நன்றி கொல்லலாகாதா?
பல்வேறு தலைப்புக்களில் அவர் அவ்வப்போது
எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை ஒன்று திரட்டி ஒரு தொகுப்பாக
வெளியிட்டால்கூட சமூகத்துக்கு மிகுந்த பயன்தரும். சகோதரர்
எஸ்.எச்.எம். ஜமீல் போன்றோர் தாராளமாக இதற்கு முன்வரலாம்.
கல்விமானாக, எழுத்தாளராக நன்கு அறியப்பட்ட சகோதரர் எஸ்.எச்.எம்.
ஜமீல் இத்யாதி பணிகளைச் செய்து சாதனை படைத்தவர். மறைந்த
அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸின் செனட் உரைகளைக்கூட அண்மையில்
தொகுத்து வெளியிடுவதில் பாரிய பங்காற்றியுள்ளார். அவரும்,
அவரை ஒத்தோரும் இதனை செய்து முடிக்கத் தவறினால் வேறு
யாரும் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. இன்றைய இளந்
தலைமுறையினருக்கு எம்.எம்.எம். மஹ்ரூப் எனும் நாமம்கூட
பெரும்பாலும் முற்றிலும் புதிதுதான்.
இது எனது பணிவான ஆலோசனை. சமூகத்துக்காக
எழுதியவரை சமூகம் எழுதத் தவறக் கூடாது. அப்படி நடந்தால்
அது மிகப் பெரும் வரலாற்றுத் தவறாகும், நன்றி கெட்ட
செயலுமாகும்.
ஏதும் முயற்சிகள் இது தொடர்பில் முன்னெடுக்கப்படுமானால்
எனது பங்களிப்பையும் நல்கத் தயார் “இன் ஷா அல்லாஹ்“.