Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Appreciations

அஷ்-ஷைக் எஸ்.எல்.எம். நசார் (ரஹ்மானி)
இறந்தும் இறவாத மனிதர்


அஷ்-ஷைக் ஸுலைமான் லெப்பை முஹம்மத் நசார் (ரஹ்மானி) அவர்கள் வபாத்தாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. அவரை நினைக்கும் ஒவ்வொரு கணமும் கனமாகவே இருக்கிறது.

மூன்று தசாப்த நெருக்கமான உறவை அவ்வளவு எளிதில் மறக்கத்தான் முடியுமா? பாசம், நேசம் நிரம்பி வழிந்த உறவு திடுமென விடைபெற்றுக்கொண்டது இலகுவாகத்தான் இருக்குமா?

அஷ்-ஷைக் நசார் ஹழ்ரத் அவர்கள் என் இதயத்தில் வாழ்பவர். 1984.09.13 அன்று அக்குறணை அல்-ஜாமிஅத் அல்-ரஹ்மானிய்யாவில் நான் மாணவனாக நுழைந்தது முதல் அன்னாருடன் ஏற்பட்ட இறுக்கமான தொடர்பு அது. 2014.09.02 அன்று அவர் வபாத்தாகும் வரை அப்படியே நீடித்தது.

மர்ஹூம் நசார் ஹழ்ரத் அவர்களை எனது ரஹ்மானிய்யஹ் காலத்தில் விடுகை வகுப்பிலிருந்த தலைமை மாணவராகவும் கல்லூரி மாணவத் தலைவராகவும் கண்டேன். ஏணி வைத்தாலும் எட்ட முடியாத உயரத்திலிருந்த அப்பெரு மாணவரும் முதல் வகுப்பிலிருந்த இச்சிறு மாணவரும் எங்கனம் நெருங்கிப் பழகினர் என்பது கேள்வியே. அவரிடமிருந்த மனிதம் என்னை அவர்பால் ஆகர்ஷித்தது, அவரை அன்புகொள்ளச் செய்தது. அவ்வளவுதான்.

அஷ்-ஷைக் நசார் ஹழ்ரத் ரஹ்மானிய்யாவில் எல்லோராலும் நேசிக்கப்பட்டவர். ‘நசார் நானா’ என அனைவராலும் அன்பாக, மரியாதையாக அழைக்கப்பட்டவர். தனிப்பட்ட சந்திப்புகளின்போது அவர் சுமந்திருந்த பட்டங்கள்கொண்டு அவரை விளிப்பதைக்காட்டிலும் ‘நசார் நானா’ என்று நான் அவரை விளித்ததே அதிகம்.

உண்மை, நேர்மை, மென்மை, எளிமை, பொறுமை, சகிப்பு, விட்டுக்கொடுப்பு, பணிவு, அன்பு, இரக்கம், பரிவு, பிறர் நலம் பேணல், உதவி மனப்பான்மை, நிதானம், அமைதி அவரை அலங்கரித்தன. சதா புன்முறுவல் தவழும் அவரது வதனம் அவரின் அடையாளம். மனித நேயத்தால் மக்கள் மனங்களை வென்ற மன்னர். இறையச்சம், இதய சுத்தி, தூய எண்ணம், பேணுதல் அவரை உயரவைத்தன.

அஷ்-ஷைக் நசார் அவர்கள் ஒரு புன்னகை மன்னன். அவரைத் தெரிந்த சகலரும் இதனை அறிவர். உயிர் வாழும் காலத்தில் அவரின் முகத்தை அரசோச்சிய புன்சிரிப்பு காலமான பின்னரும் அதனை அரசோச்சியதை ஜனாஸாவைப் பார்த்த யாவரும் கண்டுகொண்டனர். ‘சில முகங்கள் அந்நாளில் பிரகாசித்தவையாக, சிரித்தவையாக, உவகையடைந்தவையாக இருக்கும்’ (80 : 38 – 39) எனும் இறை வசனங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.

ஒரு சிறந்த மாணவராக, ஒரு நல்லாசானாக, ஒரு திறமையான அதிபராக, ஓர் உன்னதமான குடும்பத் தலைவராக, ஒரு விரும்பத்தக்க ஊர்த் தலைவராக, அறிவும் ஒழுக்கமும் ஒருசேர சங்கமிக்கின்ற ஒரு கண்ணியமான ஆலிமாக சமூகம் அவரைக் கண்டுகொண்டது. சமூகம் அன்னார் மீது தன் இதயக் கமலத்தில் மறைத்துவைத்திருந்த ஈரமான பாசத்தை அவரது ஜனாஸாவின்போது வெளிப்படுத்தியது. சுமார் ஈராயிரம் பேர் அவரது நல்லடக்கத்துக்காக திரண்டு அவருக்காக தொழுது, அழுது பிரார்த்தித்தனர். நசார் ஹழ்ரத் அவர்களின் ஜனாஸஹ் ஒரு வரலாறாகியது. அன்னாரின் ஊரான நமடகஹவத்தவின் சரித்திரத்தில் இல்லை கலேவெல பிரதேசத்து சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. ஆம். ஐம்பது வருடங்கள் குறுகிய காலம் வாழ்ந்துவிட்டு விடைபெற்றுக்கொண்ட அவர் உண்மையில் ஒரு வரலாற்றை படைத்துவிட்ட சரித்திர புருஷர்.

கடமைபார்த்த இடங்களில் கடமையில் கண்ணியம் பேணிய கனவான் என அவ்வந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்களால் புகழப்பட்டவர் அஷ்-ஷைக் நசார் ஹழ்ரத். ‘ஆசிரியப் பணியே அறப் பணி. அதற்கே உன்னை அர்ப்பணி!’ என்ற முதுமொழியை தாரகமந்திரமாகக் கொண்டு இறுதி மூச்சுவரை ஆசிரியப் பணிக்கே தன்னை அர்ப்பணித்திருந்தார். அதன் விளைவாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் அவருக்கு உள்ளனர். அன்னாரின் ஜனாஸாவில் திரண்ட பெரும் திரளில் அவரின் மாணவர்கள் நிறையப் பேரைக் காணக்கூடியதாகவிருந்தது.

2014.03.26 அன்றிரவு நத்வத்துர் ரஹ்மானிய்யீனின் நிறைவேற்றுக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அங்கத்தவர்கள் சிலர் ரஹ்மானிய்யாவில் இராத் தரித்தோம். நிறைவேற்றுக் குழு உறுப்பினர் நசார் ஹழ்ரத்தும் எம்மோடு இருந்தார். இராப் போசனத்தின் பின்னர் அவரின் ரஹ்மானிய்யாக் காலத்தில் அவர் உறங்கிய இடத்தை அவரோடு இருந்த நமக்கு காட்டி அந்த நாள் ஞாபகமூட்டினார். அதன் பிறகு அவரும் அஷ்-ஷைக் எச்.எல்.எம். மம்ஷாத் (ரஹ்மானி) ஹழ்ரத் அவர்களும் அஷ்-ஷைக் எம்.கே.எம். பாஸில் (ரஹ்மானி) ஹழ்ரத் அவர்களும் நானும் பலதும் பத்தும் பேச ஆரம்பித்தோம். வம்பளக்கவில்லை. எல்லாம் பயனுள்ள சமாச்சாரங்கள்தான்.

சுமார் 10:30 மணியளவில் துவங்கிய நமது சம்பாஷணை நள்ளிரவையும் தாண்டி அதிகாலை 02:00 மணிவரை எம்மை அறியாமலேயே நீடித்தது. என்ன ஆச்சரியம்! இந்த அளவளாவலில் எல்லோரைவிடவும் அதிகம் விடயங்களைப் பகிர்ந்துகொண்டவர் மர்ஹூம் நசார் ஹழ்ரத் அவர்கள்தான். தன் வாழ்க்கையில் கண்ட இன்பம், துன்பம், மகிழ்ச்சி, துக்கம், இலேசு, கஷ்டம், இலாபம், நஷ்டம், சுகம், நோய், மேடு, பள்ளம், சோதனைகள், வேதனைகள், ரணங்கள், இடர்கள், நிஷ்டூரங்கள், அநியாயங்கள், எதிர்ப்புகள், சவால்கள் என பலதை அவர் நம்மோடு மனம்விட்டு பகிர்ந்துகொண்டார்.

பேசும்போது வழமையாகவே தமாஷாகப் பேசும் அவர் அன்றிரவும் ஹாஸ்யம் ததும்பவே இவற்றை அடுக்கிக்கொண்டு சென்றார். அவரது வாழ்க்கையில் குறுக்கே நின்று குந்தகம் விளைவிக்கப்பட்ட சம்பவங்களை இடைக்கிடையே அவர் உணர்ச்சிபூர்வமாக வர்ணித்த வேளை அவற்றால் மனிதர் ரொம்பவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உணர முடியுமாயிருந்தது. நொந்துபோயுள்ள அன்னாரின் இதயம் அச்சம்பவங்களை நினைக்கும்தோறெல்லாம் வேதனையால் குமைந்து குமைந்து வெதும்புகின்றது என்று புரிந்துகொண்டோம். இவ்வளவு சீக்கிரத்தில் அவர் எம்மை விட்டு விடைபெற்றுக்கொள்ளப்போகிறார் என்று யாருக்குத் தெரியும்? அவரது மரணச் செய்தி வந்த மாத்திரத்தில்தான் உணர்ந்தேன்.

1986.01.16 அன்று அஷ்-ஷைக் நசார் அவர்கள் ரஹ்மானிய்யாவில் கற்கைநெறியை பூர்த்திசெய்துகொண்டு ஊர் ஏகிய சமயம் அவரின் இல்லத்தில் விருந்துண்ண எம்மை அழைத்திருந்தார். சுமார் இருபது மாணவர்கள் ரஹ்மானிய்யாவிலிருந்து அவர் மனை சென்று ஒரு நாள் தங்கியிருந்து விருந்துண்டு மகிழ்ந்தோம். வியாழக்கிழமை பிற்பகல் சென்று வெள்ளிக்கிழமை மாலை மீண்டோம். அவரின் வீட்டுக்கு அடுத்தாற்போலுள்ள நமடகஹவத்த ஜுமுஅஹ் மஸ்ஜிதில் அவர் அந்த வெள்ளியன்று ஜுமுஅஹ் குத்பஹ் நிகழ்த்தினார். அவரது வேண்டுகோளுக்கிணங்கி அடியேன் ஜுமுஅஹ் தொழுகையை முன்னின்று நடத்தினேன்.

ரஹ்மானிய்யஹ் காலம் முடிந்து உயர் கல்விக்காக அன்னார் பாகிஸ்தான் போயிருந்த வேளையில் என்னோடு கடிதத் தொடர்பு வைத்திருந்தார். அவர் கைப்பட எழுதிய கடிதங்கள், ஏனைய கடிதங்கள் யாவும் என்னிடம் இன்றும் பாதுகாப்பாக உள்ளன.

1989.09.10 அன்று நசார் ஹழ்ரத்தின் தகப்பனாரின் ஜனாஸாவுக்காக ரஹ்மானிய்யாவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் ஷைக் அல்-ரஹ்மானிய்யஹ் மற்றும் ஆசிரியர்கள் சகிதம் நமடகஹவத்த போய் வந்தோம்.

ரஹ்மானிகளின் அமைப்பான நத்வத்துர் ரஹ்மானிய்யீனின் முன்னேற்றத்துக்கு மர்ஹூம் நசார் ஹழ்ரத் அவர்களின் பங்களிப்பு நிறைய நிறைய இருந்தது. நீண்ட காலம் அதன் பொருளாளராகவும் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் தொண்டாற்றினார். நேரம் ஒதுக்கி கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், பொறுப்புக்களை ஏற்று நிறைவேற்றல் இன்னும் ஏனைய வகைகளில் அவர் பாரிய பங்காற்றினார். ஒரு சிரேஷ்ட ரஹ்மானி என்ற வகையில் அவரது அறிவு, புத்தி, ஆலோசனை, உபதேசம் நத்வாவுக்கு விசேடமாக தேவைப்பட்டது. அவ்வப்போது தேவையானவற்றை நல்கி நத்வாவின் நன்றிக்கும் துஆவுக்கும் உரித்தானவர்.

பெரும் தொகை அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த நசார் ஹழ்ரத் தந்தையை இழந்த பின் அக்குடும்பத்தை சீராக, சிறப்பாக வழிநடாத்தி சிறந்த தலைமைத்துவம் கொடுத்துதவினார். ஜனாஸஹ் அன்று அவரின் உடன்பிறப்புக்கள் அவரது நல்லுதவியை, நல்வழிகாட்டலை கண்ணீர் மல்க அடுத்தவருடன் இங்கொன்றும் அங்கொன்றுமாக நன்றிப் பெருக்குடன் பகிர்ந்துகொண்டனர்.

தனது ஊரான நமடகஹவத்த கிராமத்தை அதன் ஜுமுஅஹ் மஸ்ஜிதின் தலைவராகவிருந்து திறமையாக வழிநடாத்தினார் மர்ஹூம் நசார் ஹழ்ரத். இன்றும்கூட அக்கிராமத்தில் அவருக்கு தனியான நற்பெயரும் நற்புகழும் உண்டு.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கலேவெல கிளைத் தலைவராகத் திகழ்ந்து அதன் உயர்வுக்கு உதவியவர் அஷ்-ஷைக் நசார்.

அஷ்-ஷைக் நசார் ரஹ்மானிய்யஹ் ஈன்றெடுத்த ஒரு நித்திலம். ஷரீஅஹ் கல்விக்காக தன்னை ஒப்புக்கொடுத்து உழைத்த ஒரு பெருந்தகை. அறிவுக்கும் நடத்தைக்கும் இடைவெளி காணாதவர். சொல்லுக்கும் செயலுக்குமிடையில் வேலி கட்டாதவர். வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்ந்து முடித்த பாக்கியவான். ஒரு மனிதனின் வாழ்வு எவ்வாறு பயன் மிக்கதாக அமைய வேண்டுமென்பதற்கு அன்னார் சிறந்த முன்னுதாரணம்.

2014.09.02 அந்தி சாயும் வேளை நமடகஹவத்த முஸ்லிம் மையவாடியில் கண்ணுக்கு எட்டிய வரை தொப்பி அணிந்த தலைகள். ஜனாஸஹ் நல்லடக்கம் நிறைவுபெறுகிறது. ஈற்றில் நீண்ட துஆ. அனைவரும் ஆமீன் சொல்கிறார்கள். அது முடிய முகத்தில் கைகளை தடவிக்கொள்கிறேன். இடப் பக்கம் பார்க்கிறேன். ‘இங்கே வாருங்கள்!’ என்றவாறு ஒரு சமிக்ஞை எனக்கு. ஆம். அது வேறு யாருமல்ல. ஷைக் அல்-ரஹ்மானிய்யாதான். நசார் ஹழ்ரத்தையும் நம்மையும் அறிவும் ஒழுக்கமும் ஊட்டி ஆளாக்கிவிட்ட பெரும் மனிதர், ஆசிரியத் தந்தை. அருகே சென்றேன். ‘என்ட சாலிஹான புள்ள’ என்றார் தழுதழுத்த குரலில். அதற்கப்பால் அன்னாருக்கு பேச வரவில்லை. கண்கள் குளமாகின. கூடவே என் கண்களும் குளமாகின. வல்லவர், நல்லவர் என மாணவருக்கு ஆசிரியர் சொல்லுகின்ற நற்சாட்சி மாணவர் உயிர் வாழும் காலத்தில் கிடைப்பது சகஜம். மரணித்த பின் கிடைப்பது அரிது. இப்பெறற்கரிய பாக்கியம் கிடைக்கப் பெற்ற வெகு சொற்பப் பேரில் நசார் ஹழ்ரத்தும் அடங்குகிறார்.

ஆரவாரமின்றி அமைதியாக, பெருமையின்றி கலப்பற்ற எண்ணத்தோடு, பந்தா, பகட்டின்றி பண்புடன் வாழ்ந்து, பணி புரிந்து மறைந்த இந்த வரலாற்று நாயகனை வரலாறு நெடுகிலும் மக்கள் பேசுவர், எழுதுவர் இன் ஷா அல்லாஹ். ‘நீர் ஓர் எழுத்தாளனாக இரு! முடியாவிட்டால் ஓர் எழுத்தாக இரு! எழுதியவர்களும் எழுதப்பட்டவர்களும் மாத்திரமே வரலாறில் நிலைத்து நிற்கிறார்கள்.’ என அடியேன் அடிக்கடி சொல்லிவருவதுண்டு. அஷ்-ஷைக் நசார் எதுவும் எழுதியதாக நான் அறியேன். ஆனால் அவர் ஓர் எழுத்து என்பதை நான் அறிவேன்.

இத்தருணத்தில் அஷ்-ஷைக் நசார் அவர்களுடன் கழித்த நாட்களும் நாளிகைகளும் என் மனத் திரையில் மின்னி மின்னி மறைகின்றன. என்னென்னவோ எண்ணங்கள் என் நெஞ்சில் பொங்கி எழுகின்றன. அவர் நினைவு என் இதயத்தை ஆட்கொள்கிறது. அவர் தோற்றம் என் விழித்திரையில் படர்கிறது. அவர் குரல் என் செவிப்பறையில் ரீங்கரிக்கிறது. அவர் என் உள்ளத்தில் முகாமிட்டுள்ளார். இத்தனை உணர்வுகள் அலைமோத பசிய நினைவுகளுடன் இந்த வரிகளை எழுதி நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் போகிறேன்.

நசார் ஹழ்ரத் ரஹ்மானிகளுக்குள்ளும் சில சாதனைகள் படைத்து பெருமை பெறுகிறார். தனது பிள்ளையைக் கட்டிக்கொடுத்து முதல் மாமாவான ரஹ்மானியும் அவரே. பேரப் பிள்ளை கண்டு முதல் பாட்டனான ரஹ்மானியும் அவரே. அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று அவன் பக்கம் திரும்பிக்கொண்ட முதல் மர்ஹூம் ரஹ்மானியும் அவரே. இருக்கும்வரைதான் நகைச்சுவையால் நம்மை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவைத்தார் என்று பார்த்தால் இல்லை இறந்த பிறகும் அவரை எண்ணி எண்ணி சிரித்துக்கொண்டே இருங்கள் என்று எம்மை வைத்துவிட்டார்.

நசார் ஹழ்ரத் ஒரு சரித்திரம். அவரை விட்டுவிட்டு நத்வத்துர் ரஹ்மானிய்யீனின் வரலாறோ, நாவலப்பிட்டி தார் அல்-உலூம் அல்-ஹாஷிமிய்யாவின் வரலாறோ, கொலன்னாவ தார் அல்-உலூம் அல்-ஹ{மைதிய்யாவின் வரலாறோ, பாணந்துரை குல்லிய்யத் இப்ன் உமரின் வரலாறோ, நமடகஹவத்தவின் வரலாறோ, கலேவெலவின் வரலாறோ எழுத முடியாது. அஷ்-ஷைக் நசார் ஹழ்ரத்துக்கு சமூகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.

சத்திய ஆலிம், சன்மார்க்க ஊழியர், ஒழுக்க சீலர் அஷ்-ஷைக் நசார் ஆய்வுசெய்யப்பட வேண்டிய ஒரு முக்கிய மனிதர். அவரின் வாழ்க்கை ஆழமாக, அகலமாக, நுணுக்கமாக, துல்லியமாக ஆராயப்படுமாயின் அது மிக மிகப் பிரயோசனமானதாக அமையும்.

அவர் குறித்து ஆயிரந்தான் எழுதப்பட்டாலும் அனைத்தும் பொன்னுக்குப் பிரதி புஷ்பம் என்றளவில் நின்றுகொள்ளும்.

யா அல்லாஹ்! என் நெஞ்சில் நிறைந்த நசார் ஹழ்ரத் அவர்களையும் அவர்தம் நற்செயல்கள், நற்பணிகள் யாவற்றையும் அங்கீகரித்தருள்வாயாக! அவரை மன்னித்து, அவர் குறைகளை மறைத்து, அன்னாரை ஜன்னத் அல்-பிர்தவ்ஸில் வாழ்வாங்கு வாழச்செய்வாயாக!

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1439.12.21
2018.09.02

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page