சர்வ வல்லமை மிக்க அல்லாஹ் தஆலாவைப்
புகழ்கிறேன். அவனின் இறுதித் தூதர் எங்கள் தலைவர்
முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்
அவர்தம் தூய குடும்பத்தவர்கள், அருமைத் தோழர்கள் மீதும்
சலாத்தும் ஸலாமும் சொல்கிறேன்.
இஸ்லாமிய ஷரீஆவின் இரண்டாம் மூலாதாரமான
ஸுன்னஹ் அன்று தொட்டு இன்று வரை மிக மிகக் கவனமாக,
கன கச்சிதமாக எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இறுதி இறைத் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், உடற் கட்டமைப்பு,
குண நலன்கள் ஆகியவற்றை எடுத்தாளுகின்ற ஹதீஸ் துறை
வரலாறு நெடுகிலும் அறிஞர் பெரு மக்களின் அபார கவனத்தைப்
பெற்று வந்துள்ளது.
ஹதீஸ்களைப் படித்தல், திரட்டல், எழுதுதல்,
போதித்தல், வியாக்கியானஞ் செய்தல், நூலுருப்படுத்தல்,
எழுதப்பட்ட ஹதீஸ் நூற்களை சுருக்குதல், விரிவுபடுத்தல்,
விளக்குதல், குறிப்புரை, பொழிப்புரை, அரும்பதவுரை
வழங்குதல் என பன்முக முயற்சிகள் பாரிய அளவில் ஸுன்னஹ்வுக்காக
நடைபெற்றுள்ளன. ஹதீஸ் நூலாக்கத்திலும் கையாளப்பட்டுள்ள
முறைமைகள் பிரமிக்கத்தக்கவை. முஸ்னத், முஃஜம், அத்ராஃப்,
ஜாமிஃ, முஸ்தக்ரஜ், முஸ்தத்ரக், மஜாமீஃ, ஸவாஇத், ஸுனன்,
முசன்னஃப், முவத்தஃ, அஜ்ஸாஃ, அஹ்காம் என்றெல்லாம்
வகை வகையான ஹதீஸ் கிரந்தங்கள் வகை தொகையின்றி காணப்படுகின்றன.
ஸுன்னஹ்வுக்குச் செய்யப்பட்ட இவ்வாறான
அளப்பரிய அரும் பணிகளுள் ஒரு வகை பணிதான் நாற்பது
ஹதீஸ்களை ஒரு நூலில் தொகுத்து விடுவது. பிரபல இமாம்கள்
பலர் இக்கைங்கர்யத்தைச் செய்துள்ளதோடு ஹதீஸின் நீண்ட
நெடிய வரலாற்றில் இதுகாறும் இந்தப் பணி தொடர்ந்தவண்ணமுள்ளது.
அப்த் அல்லாஹ் இப்ன் அல்-முபாரக், முஹம்மத் இப்ன்
அஸ்லம் அல்-தூஸி, அல்-ஹஸன் இப்ன் ஸுஃப்யான் அல்-நஸாஈ,
அபூ பக்ர் அல்-ஆஜுர்ரி, அபூ பக்ர் அல்-அஸ்ஃபஹானி,
அபூ பக்ர் அல்-குலாபாதி, அபூ பக்ர் அல்-பைஹகீ, அபூ
ஸஃத் அல்-மாலீனி, அபூ உஸ்மான் அல்-சாபூனி, அபூ அப்த்
அல்-ரஹ்மான் அல்-ஸுலமி, அபூ நுஐம் அல்-அஸ்ஃபஹானி,
இப்ன் அல்-ஜஸரி, இப்ன் அஸாகிர், இப்ன் ஹஜர் அல்-அஸ்கலானி,
யஹ்யா அல்-நவவி, அபூ தாஹிர் அல்-ஸிலஃபி, அபூ அப்த்
அல்லாஹ் அல்-ஹாகிம், முஹிப் அல்-தீன் அல்-தபரி, அல்-தாரகுத்னி,
அப்த் அல்-ரஹ்மான் அல்-ஸுயூதி, அபூ இஸ்மாயீல் அல்-ஹரவி,
அப்த் அல்லாஹ் இப்ன் முஹம்மத் அல்-அன்சாரி, அபூ அல்-ஃபரஜ்
அல்-முக்ரிஃ (ரஹிமஹும் அல்லாஹ்) மற்றும் இவர்கள் போன்ற
பல புகழ் பூத்த அறிவு மேதைகள் நாற்பது ஹதீஸ்கள் தெரிவுசெய்து
அவற்றைத் தனியாக நூலாக்கிய பெருமைக்குரிய பெரு மகான்களாவர்.
‘அல்-அர்பஊன்’ எனப்படும் நாற்பது
ஹதீஸ் நூற்கள் வரிசையில் முதன்முதலில் தொகுக்கப்பட்ட
நூல் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கீர்த்தி
மிகு பேரறிஞர் அப்த் அல்லாஹ் இப்ன் அல்-முபாரக் (ரஹ்மத்
அல்லாஹ் அலைஹ்) அவர்களது நூலாகும். அல்-அர்பஊன்களில்
காலம்காலமாக மக்கள் மனங்களில் பசு மரத்தாணி போல் நன்கு
பதிந்திட்ட, உலகப் புகழ் பெற்ற சேகரம் அறிவுலக மேதை
யஹ்யா அல்-நவவி (ரஹ்மத் அல்லாஹ் அலைஹ்) அவர்களின்
அல்-அர்பஊனாகும். அல்-அர்பஊன் அல்-நவவிய்யஹ் என மரியாதையாக
அழைக்கப்படும் மங்கா மதிப்பு வாய்க்கப் பெற்ற இந்தத்
தொகுப்புக்கு எண்ணிறந்த விரிவுரைகள் எழுதப்பட்டுள்ளன.
இன்னமும் வியாக்கியான நூற்கள் அல்-அர்பஊன் அல்-நவவிய்யஹ்வுக்கு
எழுதப்பட்டு வெளிவந்தவாறுள்ளன.
அல்-அர்பஊன் நூற்கள் யாவும் ஒரே நோக்கில்,
ஒரே போக்கில் இல்லை என்பதை அந்நூற்களை ஆழ்ந்து, உன்னிப்பாகப்
படிக்கும் எவரும் புரிந்துகொள்வர். வித்தியாசம் வித்தியாசமான
விடயதானங்கள் அடங்கிய விதம் விதமான ஹதீஸ்கள் சிறியவை,
பெரியவை, நடுத்தரமானவை என அளவில் வேறுபாடோடு அல்-அர்பஊன்களில்
இடம்பிடித்துள்ளன. நாற்பது ஹதீஸ்களைத் தொகுத்து நூலாக்கும்
வேலையில் ஈடுபாடு காட்டிய அறிஞர்கள் சிலர் தாம் தாம்
மனித குலத்துக்கு அத்தியாவசியமானவை எனக் கருதிய ஹதீஸ்களையும்
வேறு சிலர் விடயங்கள், ஆட்கள், ஊர்கள் அடிப்படையில்
தாம் தெரிவுசெய்திட்ட ஹதீஸ்களையும் அல்-அர்பஊன் ஆக்கங்களாக
வெளிக்கொணர்ந்துள்ளனர். தொகுத்தவர் ஒவ்வொருவரும் தனக்கென
வரையறுத்துக்கொண்ட பிரமாணத்துக்குள் நின்று இதனைச்
செய்துள்ளனர் என்பது கவனிக்கற்பாலது. மொத்தத்தில்
ஹதீஸ் துறையில் அல்-அர்பஊன் நூற்களுக்கு காலத்தால்
அழிந்து போகாத அலாதி இடமுண்டு.
பாரின் பல்வேறு பிரதேசங்களில் அங்கங்கே
வாழ்ந்த அறிஞர்கள் அவ்வப்போது மேற்கொண்ட அல்-அர்பஊன்
ஆக்க முயற்சி காலவோட்டத்தில் அஜமிகளையும் கருத்திற்கொண்டு
மொழிபெயர்ப்புகளையும் காணவாரம்பித்தது. அரபு மொழியில்
ஹதீஸும் கூடவே அதன் மொழிபெயர்ப்பும் ஒருசேர வெளிவந்த
நூற்கள் பல உள.
நாற்பது ஹதீஸ் சேகரங்கள் இலங்கைத்
தீவுக்கும் புதிதன்று. ஹதீஸ்களும் மொழிமாற்றமுமாக
ஒன்றிணைந்து சில அல்-அர்பஊன்கள் நம் நாட்டில் வெளிவந்துள்ளன.
இவ்வரிசையில் சேர்ந்துகொள்ளும் மற்றுமொரு அல்-அர்பஊன்
வாசகர் கரங்களில் தவழும் ‘தமிழ், சிங்கள, ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன்
நாற்பது நபி மொழிகள்’ எனும் இந்நூல்.
ஒவ்வொரு ஹதீஸும் மூன்று பாஷைகளில்
மொழியாக்கம் செய்யப்பட்டு இந்த அல்-அர்பஊன் அமைந்திருப்பது
அதன் சிறப்பம்சமாகும். அத்துடன் அதில் கொண்டுவரப்பட்டுள்ள
ஹதீஸ்கள் அனைத்தும் அளவிற் சிறியவையாக அமைந்துள்ளமை
இலகுவாக மனனமிடுவதற்கு துணை புரிகின்றது. சின்னஞ்
சிறிய ஹதீஸ்களானாலும் பென்னம் பெரிய பயன்களை அள்ளி
அள்ளித் தருகின்றவை என்பது ஈண்டு நோக்கற்பாலது.
‘தமிழ், சிங்கள, ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன்
நாற்பது நபி மொழிகள்’ எனும் நாமம் தாங்கிய இந்த அல்-அர்பஊனை
தொகுத்துள்ளவர் ஓர் இளம் ஆலிம் அஷ்-ஷைக் எம்.ஆர்.
முஜீபுர் ரஹ்மான் அவர்கள். கண்டி மாவட்டத்தில் பல்கும்புற
கிராமத்து மஸ்ஜிதின் இமாமும் கதீபும், அக்கிராமத்தில்
அமைந்துள்ள மத்ரஸத் நூர் அல்-ஹுதாவின் முதல்வருமாகிய
இவர் அக்குறணை அல்-ஜாமிஅஹ் அல்-ரஹ்மானிய்யஹ்வின் ஷரீஆத்
துறைப் பட்டதாரியாவார். உயர் அரபு மொழியில் டிப்ளோமா
கற்கைநெறியை அண்மையில் பூர்த்திசெய்துகொண்டுள்ளார்.
இளந்தாரிப் பருவத்திலும் இயல்பாகவே அமைதி அரசோச்சுகின்ற
நமக்கு நெருக்கமான, விருப்பமான, அன்புக்கினிய, அருமையான
சகோதரர் அஷ்-ஷைக் முஜீபுர் ரஹ்மான் அவர்களின் இப்படைப்பு
சமூகத்து அங்கங்களுக்கு அகமும் புறமும் பயன்கொடுக்கப்
போதுமானது.
இந்த ஆக்கத்தின் மூலம் மனிதர்கள்
பயனடைய, ஆக்கியவர், ஊக்குவித்தவர், துணைநின்றவர் யாவரும்
நன்மையடைய, நூலாசிரியரின் எழுதுகோல் கொண்டு இன்னும்
பல ஆக்கப் படைப்புக்கள் வெளிவர ஏகன் அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.
எச். அப்துல் நாஸர்.
229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.
25.02.1433
20.01.2012