In the light of Wah'y :
(And when they hear the vain talk, they avoid it and say: our deeds are for us and your deeds are for you. Peace be on you. We do not seek the ignorant.” (28 : 55“
             
 


Online Guests


Subscribe for Update


     Name:

Email:

        

 
 
               
Articles

------------------------------------------------------------------------------------------------------------

நூல் : அஹ்காமுல் மஸாஜித்
ஆசிரியர்: அஷ்-ஷைக் முஹம்மத் மக்தூம் அஹ்மத் முபாரக்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச்.அப்துல் நாஸரின் மதிப்புரை


மஸ்ஜித்கள் அல்லாஹ்வைப் பயந்து பணிந்து, குனிந்து வணங்கி வழிபடும் அதியுன்னத, ஈடிணையற்ற, முற்றிலும் அல்லாஹ்வுக்குச் சொந்தமான இடங்களாகும். மனித குலத்தை நல்வழிப்படுத்தி, நேர்வழியில் இட்டுச்செல்வதில் மஸ்ஜித்களின் பணி மகத்தானது. சகல சமூக விவகாரங்களும் மஸ்ஜித்களை மையமாகக் கொண்டு நடைபெற வேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. ரஸூலுல்லாஹ் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது காலத்தில் அல்-மஸ்ஜிதுன் நபவியை இயக்கிய வரலாறு இதற்கு தகுந்த முன்னுதாரணமாகவுள்ளது. அன்று அப்புனித மஸ்ஜிதில் வணக்க வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டன. கற்றல், கற்பித்தல் நடைபெற்றன. இஸ்லாத்தின் பால் மக்களை அழைப்பதற்கான ஏற்பாடுகளும், இஸ்லாத்தின் முன்னேற்றத்திற்கு குறுக்கே நிற்கும் சத்துருக்களுடனான போராட்ட முஸ்தீபுகளும் செய்யப்பட்டன. தூதுக்குழுக்கள் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டன. பொதுமக்கள் பிரச்சினைகள் செவிமடுக்கப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டன. முறைப்பாடுகள் செவிமடுக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டன. ஸக்காத், சதக்கா, ஜிஸ்யா போன்றவை சேகரிக்கப்பட்டு பகிரப்பட்டன. திருமண உடன்படிக்கைகள் நடந்தேறின. பொதுமக்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் அவ்வப்போது வழங்கப்பட்டன. இவ்வாறு வணக்கத்தளமாக, கல்விக்கூடமாக, இராணுவத் தலைமைப் பீடமாக, வரவேற்பு மண்டபமாக, நீதிமன்றமாக, திறைசேரியாக, பாராளுமன்றமாக என எல்லா வகையிலும் சமூகத்தின் கலங்கரைவிளக்கமாக தலைநிமிர்ந்து நின்று சமூகத்தை முழுமையான கட்டுக்கோப்பின் கீழ் வைத்திருந்த பெருமை நபிகளார்காலத்து மஸ்ஜிதுன் நபிக்குண்டு.

தரணியின் எந்தவொரு மூலையில் ஒரு மஸ்ஜித் அமைந்திருந்தாலும் அதன் பணி மேலே கூறப்பட்டதாகவே இருக்க வேண்டும். மஸ்ஜித்களின் பணி வெறும் இபாதத்களோடு சுருங்கிவிட்ட நிலையில், அவ்விபாதத்களை நிறைவேற்றுவதிலும் மஸ்ஜித்களுக்குள்ளே சண்டைகளும், சச்சரவுகளும், கைகலப்புகளும் மலிந்து அவற்றுக்கு நீதி தேடி முஸ்லிமல்லாதோர்முன்னிலையிலும், நீதிமன்றங்களிலும் கைகட்டி, வாய்பொத்தி முஸ்லிம்கள் நிற்க அதனைப் பார்த்து சந்தி சிரிக்கும் அளவிற்கு முஸ்லிம் சமூகம் நீசத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்ட இக்காலத்தில், தமது சுய அரசியல் இலாபங்களுக்காக மஸ்ஜித்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் அயோக்கியத்தனமான அரசியலை முஸ்லிம் அரசியல்வாதிகள் துணிந்து முன்னெடுக்கும் இச்சந்தர்ப்பத்தில், நெறிகெட்ட செல்வந்தர்கள், அரசியல்வாதிகளின் பின்புலத்தில் அடியாட்களினதும், பாதாள உலகச் சக்திகளினதும் கெடுபிடிகளுக்கு மஸ்ஜித்கள் ஆளாகி அல்லல்படும் நிலையில் அவற்றிலிருந்து சமூகத்திற்கு நேர்வழி கிடைக்காதது மட்டுமல்லாமல் ஊரின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் மஸ்ஜித்களிலிருந்தே வேட்டுவைக்கப்படுகின்றது.

சமூகத்தின் கேந்திரமான மஸ்ஜித்களின் இப்பரிதாப நிலை கண்டு குமைந்து குமைந்து வேதனைப்படும் ஓர்இதயம் வேதனையோடு வெதும்பும் தன் உளக் குமுறலை மக்கள் மன்றத்தில் முன்வைத்து, மஸ்ஜித்களின் பணியை அவசரமாகவும், அவசியமாகவும் மீள் அறிமுகம் செய்ய வேண்டுமென்ற தனது வேட்கையை வெளிப்படுத்தும் முயற்சியே “அஹ்காமுல் மஸாஜித்” எனும் இந்நூலாகும். அறிவு முதிர்ச்சியும், அனுபவ முதிர்ச்சியும் ஒருசேர வாய்க்கப்பெற்ற நாடறிந்த நல்லறிஞர், மஹரகம கபூரிய்யா கலாசாலையின் நீண்ட கால அதிபர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் தலைவர், இந்நாள் உப தலைவர்அஷ்-ஷைக் முஹம்மத் மக்தூம் அஹ்மத் முபாரக் யாத்த இந்நூல் காலத்தின் தேவையறிந்து மேற்கொள்ளப்பட்ட கைங்கரியமாகும். தனது நீண்ட கால தஃவாக் கள அனுபவத்தை மனக்கண் முன் நிறுத்தி தனக்கே உரிய பாணியில் இந்நூலை அவர்எழுதியிருப்பதை படிப்போர்நன்கு அவதானிக்கலாம்.

அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய, ஒவ்வொரு மஸ்ஜிதிலும், இல்லத்திலும் நிரந்தரமாக பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய இந்நூல் மஸ்ஜித்களின் பணி மீள் அறிமுகம் செய்யப்படுவது பற்றி சகலரும் சிந்திக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதே எனது பணிவான அபிப்பிராயமாகும். இது போன்ற இன்னும் பல நூற்களை மானிட சமூகத்தின் பொருட்டு எழுதி, வெளியிட அல்லாஹ்வின் அனுக்கிரகத்தை ஆசிரியருக்கு வேண்டுகிறேன்.


229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
மன்னார்வீதி,
புத்தளம்.

2005.06.06

   
COMMENTS
 
------------------------------------------------------------------------------------------------------------
  More Forewords :

 
நூல் : அஹ்காமுல் மஸாஜித் - ஆசிரியர் : அஷ்-ஷைக் முஹம்மத் மக்தூம் அஹ்மத் முபாரக்
நூல் : கம்பஹா மாவட்டம் தந்த உலமாப் பெருந்தகைகள் - ஆசிரியர் : அஷ்-ஷைக் எம்.எச்.எம்.லாபிர்
நூல் : இஸ்லாம் வலியுறுத்தும் ஹிஜாப் - ஆசிரியர் : மவ்லவி எஸ்.இஹ்ஸான்
நூல் : மீண்டும் ஒரு மதீனா - ஆசிரியர் : ஆர்.எம். நிஸ்மி
நூல் : மவ்லவி அப்துல் காலிக் ஜுமுஆ பேருரைகள் - ஆசிரியர் : முஹம்மத் ரஸீன்
நூல் : நாளாந்த வாழ்வில் நமக்கான ஒழுங்குகள்
தொகுப்பு : அக்குறணை அல்-ஜாமிஅஹ் அல்-ரஹ்மானிய்யஹ்விலிருந்து ஹி.பி. 1433 - கி.பி. 2012ஆம் ஆண்டு அஷ்-ஷைக் பட்டம் பெற்று வெளியேறும் 17 பேர்
நூல் : தமிழ், சிங்கள, ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் நாற்பது நபி மொழிகள்


 
 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© Ash-Shaikh Abdul Nazar