வாழ்வியலுக்கான வளமான, நிறைவான, உறுதியான
வழிகாட்டலை நல்கிய வல்ல அல்லாஹ்வைப் புகழ்கிறேன்.
இறை நெறியில் வாழ்ந்து அந்நெறியில் அடுத்தவரும் வாழ
வழிகாட்டிய இறுதித் தூதர் உத்தம நபி முஹம்மத் (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவர் தம் அருமைத் தோழர்கள்
மீதும் சலாத்தும் ஸலாமும் சொல்கிறேன்.
வௌ;ளிக்கிழமைதோறும் மஸ்ஜித்களில்
நடைபெறும் ஜுமுஆக் கடமையின் பிரிக்க முடியாத அம்சம்
குத்பா. ஜுமுஆவை நிறைவேற்றும் பொருட்டு மஸ்ஜிதில்
குழுமியுள்ள மக்களை நோக்கி மிம்பரில் ஏறி நின்று இமாம்
நிகழ்த்துகின்ற உபந்நியாசம் ஜுமுஆவின் குத்பா என அழைக்கப்படுகிறது.
சொற்பொழிவாற்றும் இமாமின் குரல் சமுகமளித்திருப்போரின்
செவிகளில் துல்லியமாகக் கேட்க வேண்டும், அவர்கள் அவரைப்
பார்க்க வேண்டும் எனும் நோக்கில் மஸ்ஜிதில் அமைக்கப்படுகின்ற
மேடை மிம்பர் எனப்படுகிறது.
ஜுமுஆ, குத்பா, மிம்பர் ஆகியவை இன்று
நேற்றல்ல, ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்
காலம் முதல் உள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்-மஸ்ஜித் அல்-நபவியில்
ஆரம்பத்தில் பேரீத்த மரக் குற்றியொன்றுடன் சாய்ந்து
நின்று பிரசங்கம் செய்பவர்களாகவிருந்தார்கள். பின்னர்
ஒரு தரமான மிம்பர் அவர்களுக்கென அமைக்கப்பட்டது.
மனிதர்களை வழிகாட்ட, அவர்களுக்கு
இஸ்லாத்தைச் சொல்லிக் கொடுத்திட, அவர்களை உடல், உள
ரீதியாக பரிசுத்தப்படுத்த, ஜிஹாதிய உணர்வை அவர்களின்
இதயங்களில் ஊட்டிட, உறங்கிக்கொண்டிருக்கும் அவர்களின்
உணர்வுகளைத் தட்டி எழுப்பி விட, அவர்களின் தப்பு,
தவறுகளைத் திருத்திட, சமூக ஒற்றுமையைப் பலப்படுத்திட
என பரந்து விரிந்த ஆழமான அரும்பெரும் பாரிய நோக்கங்களை
மையமாகக் கொண்டு அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்களின் குத்பாக்கள் அமைந்திருந்தன. இது வரலாற்று
உண்மை.
இப்படித்தான் மிம்பர் சொற்பொழிவுகள்
அமைய வேண்டும். காலதேசவர்த்தமானத்தைக் கவனத்திற்கொண்டு
குத்பாக்கள் நிகழ்த்தப்பட வேண்டும். சுமார் 25 - 30
வினாடிகள் தற்காலத்தில் குத்பாவுக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
குறிப்பிட்ட ஒரு விடயத்தை மாத்திரம் ஒரு குத்பாவில்
எடுத்து விளக்கப்படுத்தினால் மக்கள் நன்கு கிரகிப்பர்.
மஸ்ஜிதிலிருந்து திரும்பிச் செல்லும் போது இன்று இதுதான்
குத்பாவில் சொல்லப்பட்டது என்ற பதிவுடன் தெளிவாகப்
பயன்பெற்றவர்களாகச் செல்வர். அவ்வாறல்லாமல் முழு நேரத்தையும்
பயன்படுத்தி கதை அளப்பது கட்டோடு கூடாது.
குழுமியிருப்போரின் தரம், பின்னணி
போன்றவற்றையும் கவனத்திற்கொண்டு குத்பாவை நிகழ்த்த
வேண்டும். புரிய, கிரகிக்க கஷ்டமானவற்றை, முடியாதவற்றை
எடுத்தாள்வது வீண் வேலையாக அமைவதுடன், கேட்போரைக்
குழப்பத்திலாழ்த்தி விடும்.
கதீப் தான் முன்வைக்கின்ற செய்திகளை
பகுப்பாய்வு செய்து ஆதாரபு+ர்வமாக, ஆணித்தரமாக, துலக்கமாக
முன்வைக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை பொது மக்கள்
முன் கொட்டி விடாமல் கூடுமானளவு பொதுவான விடயங்களை
எடுத்தாள வேண்டும்.
மக்கள் உணர்ச்சிவசப்பட்டு இயங்கிடும்வண்ணம்
உபதேசங்கள் அமையலாகாது. பிறந்து வாழ்ந்த பு+மியாகிய
மக்காவிலிருந்து அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு,
எல்லாச் சொத்துக்களும் பறிக்கப்பட்டு வீசிய கையும்
வெறும் கையுமாக வெளியேறிய அன்பு நபி (சல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்களும் சஹாபிகளும் மதீனா நோக்கிப் போகும்
வழியில் வௌ;ளிக்கிழமை ஒன்று அவர்களை சந்தித்தது. ஸாலிம்
இப்னு அவ்ஃப் குலம் வசித்துக்கொண்டிருந்த இடம் வந்த
போது ஜுமுஆ நேரம் ஆகவே பத்ன் அல்-வாதீ எனுமிடத்தில்
அனைவரும் ஜுமுஆவை நிறைவேற்றினர். இமாமாக நின்ற ரஸூல்
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்று அங்கு நடத்திய பிரசங்கத்தில்
தமது வெளியேற்றம் பற்றியோ, மக்கா முஷ்ரிக்களின் ஈவிரக்கமற்ற
செயல், கொடுமை, வக்கிரம் குறித்தோ ஒரு வார்த்தை தானும்
வாய்திறக்கவில்லை. மாற்றமாக பெரும்பாலும் இறையச்சம்,
அல்லாஹ்வுக்கும் மனிதனுக்குமிடையிலான உறவு பற்றியே
அவர்கள் அன்று எடுத்துரைத்தார்கள்.
ஜுமுஆ குத்பாவை நடத்துகின்ற கதீபின்
பணி மகத்தானது, பொறுப்புவாய்ந்தது, பளுவானது, பாரதூரமானது.
மிம்பர் மீது நின்று கொண்டு உபந்நியாசம் செய்கின்ற
அவரின் தோற்றம், முகபாவம், குரல் யாவுமே கேட்போரின்
உள்ளங்களில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டியவை. இறைத்
தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குத்பா
செய்யும் போது அவர்களின் விழிகள் சிவந்து விடும்,
அவர்களின் சப்தம் உயர்ந்து விடும், அவர்களின் சினம்
கடுமையாகும், ஒரு படையைப் பற்றி எச்சரிக்கை செய்பவர்
போல் அவர்கள் காட்சி தருவார்கள் என ஸுன்னா வர்ணனை
தருகிறது.
வௌ;ளிக்கிழமைகளில் பாரின் பட்டி தொட்டி
எங்கும் நடைபெறுகின்ற குத்பாக்கள் சமூகத் தளத்தில்
பெரும் தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. நிசப்தம் ஆள்கின்ற
நிலையில் வுழூஃவுடன் கிப்லாவை முன்னோக்கி அமர்ந்துகொண்டு
அமைதியாய் பக்தி சிரத்தையோடு செவிமடுக்கின்ற ஒரேயொரு
உபதேசம் வௌ;ளிக்கிழமை குத்பா மாத்திரமே. இந்த வகையில்
மிம்பர் மிகச் சிறந்த, சிரேஷ்ட, புனிதமான ஊடகமாகும்.
இந்தப் பின்னணியில் மேற்சொல்லப்பட்ட
விடயங்களைக் கருத்திற்கொண்டு குத்பாக்கள் நிகழ்த்தப்படும்
போது அந்த குத்பாக்கள் உயிரோட்டமுள்ளவையாய், வினைத்திறன்,
விளைத்திறன்மிக்கனவாய் அமைகின்றன. அவற்றை நிகழ்த்தும்
இமாம்கள் வெற்றிகரமான கதீப்கள்.
வெற்றிகரமான கதீப்களின் காத்திரமான
வௌ;ளி ஜுமுஆ உரைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டு நூலுரு
பெறுவது வரலாற்றில் காணப்படுகின்றது. ஒரு மஸ்ஜிதில்
ஆற்றப்பட்ட உயிருள்ள, சத்துள்ள குத்பாவை அந்த குத்பாவைக்
கேட்க வாய்ப்புக் கிடைக்காமல் போனோருக்காகவும், பேச்சு
பேசிய பொழுதிலேயே முடிந்து விடும், காலாதி காலம் அதனைப்
பாதுகாத்து பரம்பரை பரம்பரையாய் அது பயனளிக்க வேண்டுமென்ற
நோக்கத்துடனும் ஜுமுஆ உபந்நியாசங்கள் தொகுக்கப்படுகின்றன.
அஷ்-ஷைக் அப்துல் ஜலீல் அப்துல் காலிக் அவர்கள் ஆற்றிய
ஜுமுஆ குத்பாக்களில் சிலவற்றைத் தொகுத்து நூலாக்கம்
செய்யப்பட்டுள்ளதையும் இப்பின்புலத்திலேயே பார்க்க
வேண்டியுள்ளது.
அஷ்-ஷைக் முஹம்மத் ஜலீல் அப்துல்
காலிக் அவர்கள் நன்கு அறியப்பட்ட ஒரு தாஈ. தப்லீஃ
ஜமாஅத்துடன் தன்னை இரண்டற இணைத்துக்கொண்டு தஃவாப்
பணி புரிபவர். ஹாபில், ஆலிமான இவர் தஃப்ஸீர், ஹதீஸ்
துறைகளில் விசேட கற்கைகளைப் பு+ர்த்தி செய்தவர். தற்போது
கொழும்பு இப்னு உமர் ஹதீஸ் கல்லூரியின் தலைவராகவும்,
கொழும்பு அல்-ரஷாத் ஷரீஆ கல்லூரியின் போதனாசிரியராகவும்
செயற்படுகிறார். சுமார் இருபது வருடங்களாக ஜுமுஆ சொற்பொழிவாற்றி
வருபவர்.
அஷ்-ஷைக் ஏ.ஜே. அப்துல் காலிக் அவர்கள்
மிகுந்த பிரயாசத்துடன் தயாரித்து வௌ;ளிக்கிழமைகளில்
மிம்பரில் வைத்து மக்களின் செவிக்கும் சிந்தனைக்கும்
விருந்து வைத்த குத்பாக்கள் பல. அவற்றில் முத்தாக
17 குத்பாக்கள் முதல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இவற்றை அஷ்-ஷைக் முஹம்மத் ரஸீன் அவர்கள் தொகுத்துள்ளார்.
ஆற்றப்பட்ட உரைகளை செம்மைப்படுத்தி எழுத்துரு பெறச்
செய்வது சொல்லப்போனால் பேச்சுக்காகத் தயாராகுவதைக்காட்டிலும்
கடினமானது, சிரமமானது. இத்தகைய பாரமான சிரமசாத்தியமான
பணியை சிரமேற்கொண்டு சிரமம் பாராது செய்து முடித்துள்ளார்
அஷ்-ஷைக் முஹம்மத் ரஸீன் அவர்கள்.
மிகப் பெரும்பாலும் தனிநபரை, குடும்பத்தை,
சமூகத்தை, தஃவாக் களத்தை குறிவைத்த குத்பாக்களை இத்தொகுப்பில்
காண முடிகிறது. படிக்கின்ற வேளை இச்சிறியோனுக்குத்
தோன்றிய சில யோசனைகளை இந்நூலை மேன்மேலும் மெருகூட்டும்
பொருட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்வைத்துள்ளேன்.
கதீபையும் தொகுத்தவரையும் நெஞ்சார
வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், இருவருக்குமாக இறைவனை
இறைஞ்சுகிறேன். இருவரும் இன்னுமின்னும் அதீத ஆர்வத்துடன்,
மிகுந்த வேட்கையுடன் இத்தகைய உன்னத பணிகளை முன்னெடுக்க
வேண்டுமென மேற்கொண்டு பிரார்த்திக்கிறேன். இத்தொகுப்பு
சமூகத்து அங்கங்களுக்கு அகன்று, விரிந்து, ஆழமாய்ப்
பயனளித்திட அல்லாஹ் தஆலாவைப் பணிந்து கேட்கிறேன்.
எச். அப்துல் நாஸர்.
229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.
20.06.1431
04.06.2010