எங்கள்
தேசம் பத்திரிகை 100ஆவது இதழ் - 2007
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் செய்தி
ஒரு பத்திரிகையை நடாத்துவதென்பது
முட்கள் நிறைந்த கரடு முரடான பாதையில் நடப்பது போன்றதோர்
முயற்சி. அந்த முயற்சிக்கு சொல்ல வேண்டியதைத் தைரியமாகச்
சொல்லலும், சொன்ன பின் விளைவுகளை தைரியமாக எதிர்கொள்ளலும்
மிக அவசியமாகத் தேவைப்படும் தகைமைகளாகும். அதிலும் பல்லினச்
சமூக நாடொன்றில் சிறுபான்மை இனத்தவரின் பத்திரிகை ஒன்றை
தோற்றுவித்து அது இடை நடுவே சோர்வடைந்து சரிந்து விடாமல்
எழுந்து நிற்கச் செய்வது அதிலும் சிரமமானதொன்றாகும்.
பத்திரிகைத் தர்மத்தின்
வரையறைக்குள் நின்று சமச் சீரான நிலையைக் கையாண்டு தகவல்களை
மக்கள் முன் கொண்டு செல்கையில் சொல்லவந்த தகவல் அந்த
அளவுக்குப் பகிரங்கமாகச் சொல்ல வேண்டிய பெறுமானம் உள்ளதா,
அது ஏதாயினுமோர் வகையில் ஒரு தனி நபரது அல்லது ஓர் அமைப்பினது
அல்லது ஒரு சமூகத்தினது மன உளைவை ஏற்படுத்தி பாரதூரமான
விளைவுகளுக்கு இட்டுச்செல்லுமா என்பதைப் பற்றியெல்லாம்
சிந்தித்தே அதைச் சொல்ல வேண்டியுள்ளது என்பதை ஒரு பத்திரிகை
உணர்ந்திருத்தல் அவசியம்.
அதிலும் ஒரு முஸ்லிம்
பத்திரிகை பொதுவான பத்திரிகை தர்மத்துக்கு அப்பால் இஸ்லாமிய
விழுமியங்களுக்கு பங்கம் ஏற்படாமலும் செயற்பட வேண்டியுள்ளது.
பண்பாடுகள், ஒழுக்க மாண்புகள் என்பனவெல்லாம் வெகுவாகக்
குன்றிச் செல்லும் இந்நாட்களிலே ஒரு முஸ்லிம் பத்திரிகை
என்ற பெருமைக்குரிய பெயரை பாதுகாத்த வண்ணம் தனது செயற்பாடுகளை
“எங்கள் தேசம்” முன்னெடுக்க வேண்டும் என்றுதான் நாம்
எதிர்பார்க்கிறோம்.
மன நிறைவுடனும், பெரும்
பூரிப்புடனும் தனது 100ஆவது இதழை ‘எங்கள் தேசம்’ வெளியிட்டு
வைக்கும் இவ்வினிய நாளிலே அது தனது தளராத நெடிய பயணத்தைத்
தொடர வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில்
வாழ்த்துகிறேன், பிரார்த்திக்கிறேன்.
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 2007.04.19
|