Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Forewords

நூல் : தலாக், குல்உ, ஃபஸ்க், இத்தஹ் எதற்காக? எப்போது? எப்படி?


ஆசிரியர் : மவ்லவி முஹம்மத் ரஸீன் மலாஹிரீ

அப்துல் மஜீத் அக்கடமியின் பணிப்பாளரும் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் பணிப்பாளருமாகிய அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்கள் வழங்கிய அணிந்துரை


அருளாளன், அன்பாளன் அல்லாஹ் தஆலாவைப் போற்றிப் புகழ்கின்றேன். அவன் அன்புத் தூதர் எங்கள் நாயகம் நபி முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களின் அருமைக் குடும்பத்தவர்கள், அன்புக்கினியத் தோழர்கள், அவர்களின் உன்னத வழியைத் தொடர்வோர், அதற்காக அழைப்போர், உழைப்போர் அனைவர் மீதும் சலாத்தும் ஸலாமும் சொல்கிறேன்.

இல்லறம் நல்லறமாக அமைய திருமணத்துக்கு முன்னிருந்து ஆரம்பித்து இஸ்லாம் வழிகாட்டல்களை வழங்குகிறது. தாம்பத்தியம் சதா இன்பத்தில் மிதக்க வேண்டும். துன்ப அரக்கன் அதனை அணுகக் கூடாது. பன்னீரும் பரவசமுமாக வாழ வேண்டும். கண்ணீரும் கம்பலையுமாக வாழலாகாது. இது இஸ்லாம் இயம்பும் இன்ப இல்லறம்.

ஆனந்தம் விளையாடும் வீட்டை வையகம் முழுவதும் காணத் துடிக்கும் இறை வழி இஸ்லாம் அதற்கான சரியான, நிலையான நெறிமுறையைத் தந்துள்ளது. அந்நெறிமுறையிலிருந்து தடம்புரளும்போது தேனாக தித்திக்க வேண்டிய திருமண வாழ்வு கற்றாழையாகக் கசக்கும். சில வேளை முறிவில் முடியும். அந்தோ பரிதாபம்.

விவாகமானவர்கள் விவேகமற்று இறை வழியை புறந்தள்ளி, புறக்கணித்து வாழ்ந்து திருமண வாழ்வில் நிம்மதியைத் தொலைத்து ஈற்றில் பந்தத்தை அறுத்துக்கொள்ள தள்ளப்படும் நிலை உண்மையில் துர்ப்பாக்கியமாகும். தம்பதிகள் இந்த நிலையை அடைவதை இஸ்லாம் கிஞ்சித்தும் விரும்பவில்லை.

இனிமேல் ஆடைக்கு அறவே அண்டைபோட முடியாது எனும் நிலை வருவது போல இல்லற வாழ்வு இனிக்க இனி வழியே இல்லை எனும் நிலை வந்துவிட்டால் தம்பதியர் பிரிந்துகொள்ளத் தேவையான வழிகாட்டல்களையும் இஸ்லாமிய மார்க்கம் வழங்காமல் விட்டுவிடவில்லை. தலாக், குல்உ, ஃபஸ்க் என இவ்வழிகாட்டல்கள் அகன்று விரிகின்றன.

தலாக், குல்உ, ஃபஸ்க், இத்தஹ் ஆகிய ஒவ்வொன்றும் தனித்தனியான பாடங்களாகும். இவ்விடயங்கள் பற்றிய விபரங்களை விளக்கி விருந்துவைக்கிறார் மவ்லவி முஹம்மத் ரஸீன் மலாஹிரீ அவர்கள்.

‘தலாக், குல்உ, ஃபஸ்க், இத்தஹ் எதற்காக? எப்போது? எப்படி?’ என நாமமிட்டு தனது முயற்சியை இத்தால் மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் மவ்லவி முஹம்மத் ரஸீன். எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ள முடியுமான எளிய தமிழில் இந்நூல் அமைந்துள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சகலரும் படித்து பயன் பெற வேண்டிய ஒரு நூலாக நான் இதனைப் பார்க்கின்றேன்.

‘தலாக், குல்உ, ஃபஸ்க், இத்தஹ் எதற்காக? எப்போது? எப்படி?’ எனும் நூல் இஸ்லாமிய இலக்கியப் பூங்காவில் மணம் கமழும் மலர்ச் செடியாக இணைந்துகொள்கிறது. நூலுக்கும் நூலாசிரியருக்கும் வாழ்த்துக்கள்.

உயிர்ப்புடன் பேனா பிடித்து துடிப்புடன் ஆக்கங்கள் யாத்து தரணி வாழ் மாந்தர் பயனடைய இந்நூலாசிரியர் மவ்லவி முஹம்மத் ரஸீன் அவர்கள் தொடர்ந்து எடுத்துவரும் முயற்சி மெச்சத்தக்கது.

ஆசிரியரின் படைப்புக்கள் யாவும் சமூக தலத்தில் நின்று நிலவிட, நிலைத்து பயனளித்திட முழுமனதாக வல்ல ரஹ்மானை வேண்டி மகிழ்கிறேன்.

எச். அப்துல் நாஸர்.
229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்,
ஸ்ரீ லங்கா.

1437.10.13
2016.07.18


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page