Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Forewords

நூல் : தலாக் - விவாகரத்து நிகழ்வது எதற்காக?


ஆசிரியர் : மவ்லவி முஹம்மத் ரஸீன் மலாஹிரீ

அப்துல் மஜீத் அக்கடமியின் பணிப்பாளரும் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் பணிப்பாளருமாகிய அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்கள் அளித்த அணிந்துரை


சர்வ புகழும் படைத்து, பரிபாலித்து, போஷித்து, காத்துவரும் பரம தயாளன் ரப் அல்-ஆலமீனுக்கு உரித்தானது. சலாத்தும் ஸலாமும் இருண்டு, வறண்டுபோயிருந்த மானுட வாழ்வை ஒளியூட்டி செழிப்பாக்கிவைத்த இறுதி நபி முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களின் பரிசுத்த கிளையார்கள், பண்பு நிறைந்த தோழர்கள், அன்னாரின் நேரான நெறியை சீராகத் தொடர்வோர், அதற்காக அழைப்போர், உழைப்போர் யாவர் மீதும் உண்டாகட்டுமாக!

தாம்பத்தியம் மனித வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியாகும். ஒப்பந்தத்தை அத்திவாரமாகவும் அன்பையும் கருணையையும் தூண்களாகவும் கொண்டு நிர்மாணிக்கப்படும் கட்டிடமே மண வாழ்வு. ஒருவரையொருவர் புரியாத இருவர் அன்புப் பிணைப்புடன் இணைந்து பரஸ்பரம் அன்பைப் பகிர்ந்துகொண்டு, கருணை காட்டி, புரிந்துணர்ந்து, நன்மை நாடி வாழும் மகிழ்ச்சி துள்ளி விளையாடுகிற ஓர் இன்பமயமான வாழ்க்கை திருமண பந்தம். அன்புமயமான தாம்பத்தியம் இன்பமயமான தாம்பத்தியம்.

இரு மனம் ஒரு மனமாக இணைந்து ஆரம்பித்த திருமணம் அன்பினாலேயே எழுதப்படும் இல்லறம். முடி பிடிக்கும்போதே முடிவிலா மகிழ்ச்சி காண திடசங்கற்பம் பூண்டுகொள்ளும் மணாளனும் மணாளியும் ஒரு வகை இனம்புரியாத புதியதொரு வாழ்க்கைக்குள் புகுகின்றனர். இனிக்க இனிக்க வாழ்ந்து களிக்க இணைபிரியாத வாழ்க்கை என முடிவுசெய்து துவங்கும் பந்தம்.

இல்லறம் நல்லறமாக வேண்டுமானால் கணவனும் மனைவியும் ஈருடம்பும் ஓர் உள்ளமுமாய் ஆக வேண்டும். முடித்ததற்காக வாழாமல் பிடித்ததற்காக வாழ வேண்டும். மனதில் பாரத்தோடு வாழாமல் நெஞ்சில் ஈரத்தோடு வாழ வேண்டும்.

குடும்ப வாழ்க்கையின் முதல் நாள் குவியும் வாழ்த்துக்கள் சொல்வதுதான் என்ன? ‘அல்லாஹ் உமக்கு பரக்கத் செய்வானாக! உம் மீது பரக்கத் செய்வானாக! உங்களிருவருக்குமிடையில் நன்மையில் ஒன்றுசேர்த்துவைப்பானாக!’ எனும் மணமக்களை வாழ்த்தும் துஆ பரக்கத்தும் நன்மையும் ஒற்றுமையும் பொங்கிப் பிரவகிக்கும் வாழ்க்கையை அவர்களுக்கு வேண்டுவதாகும். இஸ்லாத்தின் ஆசையும் அதுவே. மனிதர்களின் ஆசையும் அதுவே.

மணமுடித்த பின் மனமுடைந்துபோய் மணமுறிவுக்குப் போவோர் பலர். முன்னெப்பொழுதும் இல்லாத அளவு தற்காலத்தில் விவாகரத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. தம்பதியர் வாழ்க்கை தடம்புரண்டது, குடும்ப வாழ்க்கை குலைந்தது என்பதெல்லாம் ஒரு காலத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொரு தடவை கேள்விப்படும் செய்திகள். ஆனால் இன்றைய நாட்களில் எல்லா இடங்களிலும் அன்றாடம் கேள்விப்படும் செய்திகள். இந்த நிலைக்கு காரணம்தான் என்ன?

இந்த கேள்விக்கு விடை தேடும் ஓர் அழகான, அற்புதமான ஆக்கமே வாசகர்களின் கரங்களில் தவழும் இந்த நூல். ‘தலாக் - விவாகரத்து நிகழ்வது எதற்காக?’ எனும் பெயர் தாங்கிய இந்த நூல் மவ்லவி முஹம்மத் ரஸீன் மலாஹிரீ அவர்களின் படைப்பாகும்.

இரண்டு பாகங்கள் கொண்ட இந்நூல் சமகாலத்தில் மணவிலக்கு நடைபெறுவதற்கான காரணங்களை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. நிலை நேர்வு பற்றிய ஆய்வுகள் நூலில் நிறைய இடம்பெற்றுள்ளன. அத்தோடு விவாக விலக்கைத் தவிர்ப்பதற்கான பரிகாரங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

நூலாசிரியர் தன் சொந்த அனுபவத்தை இந்த நூலில் பகிர்ந்துகொள்வது இங்கு நோக்கற்பாலது. கணவன் மனைவி உறவு கற்கண்டாய் தித்திக்குமென எல்லோரையும் போல் எதிர்பார்த்து கனவுகள் பல சுமந்து இல்லற வாழ்வில் நுழைந்த ஆசிரியர் சற்றும் எதிர்பாராத துயரங்களை சந்திக்க நேரிட்டதோடு, மணப் பந்தமும் முற்றுப் புள்ளியைப் பெற்றது. அவரின் இந்த சோகக் கதையை வாசகர்களோடு ஒளிவுமறைவின்றி பகிர்ந்துகொள்வது சற்றே வித்தியாசமானது. இக்காலத்தில் விவாகரத்துக்கள் நிகழ்வதற்கான காரணங்கள், அவற்றைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்ய தான் வரிந்துகட்டிக்கொண்டு இறங்கிய வேளை அவரது சுய அனுபவம் அவருக்கு பக்கபலமாக நின்றிருக்கும் என்பது திண்ணம்.

படம் எடுத்து படையையே பயப்படச்செய்யும் பாம்பாக எழுந்து நிற்கும் பூதாகரமான பிரச்சினையாக மணமுறிவு நிகழ்கால வாழ்வியலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு பிரச்சினை டமாரென வெடித்தெழுகின்றபோது அது தோன்றியதற்கான காரணத்தை அறிவது அதனைத் தீர்ப்பதற்கு உதவும். ஒரு பிரச்சினை தொடர்ந்தெரியும்போது நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து பார்ப்பது அதனை முடிவுக்குக் கொண்டுவர அல்லது அது நடைபெறுவதைக் குறைக்க உதவும். இந்தப் பின்னணியிலேயே இந்த நூல் உருவாகியுள்ளது.

சமகால பேசு பொருள்களுள் விவாக விலக்குமொன்று. நீதிமன்றங்களில் அதிகம் விசாரிக்கப்படும் வழக்கு வகைகளில் குடும்பப் பிணக்கு, பிளவும் அடங்கும். மாநாடுகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், பட்டிமன்றங்கள், குத்பாக்கள், பொதுப் பேச்சுக்கள் யாவற்றிலும் மணவிலக்கு தனித் தலைப்பிடப்பட்டு ஓர் அலாதியான விடயமாக எடுத்தாளப்படுகிறது. கணவன் மனைவி பூசல்களை தீர்த்துவைக்க தனியான மனவள ஆலோசனை வேறு. இத்தனை வழிகாட்டல்கள், புத்திமதிகள், ஆலோசனைகளுக்கு மத்தியிலும் விவாகரத்து ஏணி மேல் ஏணி வைத்து ஆகாயத்தையே எல்லையாகக் கொண்டு ஏறிச் செல்கிறது. கொஞ்சமும் குறைந்த பாடில்லை.

தம்பதியர் இருவரும் வட துருவம் தென் துருவமென இரு வேறு திசைகளில் வெவ்வேறாக பயணித்து குடும்ப வாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகிட மூல காரணங்கள் யாவை என்பதை இலகுவாக அறிந்து பகுப்பாய்வு செய்து, கூடவே தீர்வுகளையும் கண்டிட பொதுவாக அனைவருக்கும் விசேடமாக சமூக ஆர்வலர்களுக்கும் உளவள ஆலோசகர்களுக்கும் சொற்பொழிவாளர்களுக்கும் மவ்லவி முஹம்மத் ரஸீன் மலாஹிரீ அவர்கள் சிரமப்பட்டு செய்துள்ள இம்முயற்சி கைகொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

ஆக்கத்தையும் ஆக்கியவரையும் பாராட்டி மகிழ்கிறேன். இந்தப் படைப்பினூடாக அடைய எதிர்பார்க்கப்படும் உச்ச பலன் கிடைக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.

எச். அப்துல் நாஸர்.
229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்,
ஸ்ரீ லங்கா.

1437.10.13
2016.07.18


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page