Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Forewords

நூல் : இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்


ஆசிரியர் : அஷ்-ஷைக் எம். அஜ்மல் முளப்பர்

ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத் தலைவர்,
நத்வத்துர் ரஹ்மானிய்யீனின் செயலாளர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் (ரஹ்மானி) அவர்களின் அணிந்துரை



வணக்கத்துக்குப் பாத்திரமானவனான வல்லவன் அல்லாஹ் தஆலாவை முதற்கண் புகழ்ந்து துதிக்கின்றேன். வளமான வாழ்வை வையகத்தாருக்கு அறிமுகம்செய்துவைத்த வாஞ்சைக்குரிய நபி முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அன்னாரின் பாசத்துக்குரிய குடும்பத்தவர்கள், நேசத்துக்குரிய தோழர்கள், அவர்களது வழியைத் தொடர்பவர்கள், அதற்காக அழைப்பவர்கள், உழைப்பவர்கள் யாவர் மீதும் சலாத்தும் ஸலாமும் கூறுகின்றேன்.
இஸ்லாத்தின் ஏவல்கள், விலக்கல்கள் அனந்தம். அவற்றைத் தெரிந்து, தெளிந்து அவற்றுக்கேற்ப வாழ்வது மானிடர் கடமை. இஸ்லாத்தின் ஏவல்கள், விலக்கல்கள் அருள் மறை அல்-குர்ஆனிலும் புனித ஹதீஸிலும் உள்ளன. அவற்றை நுணுகி ஆராய்ந்து, பகுத்து, தொகுத்து தந்துள்ளனர் கண்ணியமான இமாம்கள்.

விலக்கப்பட்டவை பட்டியலில் பாவங்கள் அடங்கும். பாவங்கள் சிறியவை, பெரியவை என இரு வகைப்படும். பெரும் பாவங்கள் வரிசையில் சூனியமும் சேர்க்கப்பட்டுள்ளது.

சூனியம் குறித்து குர்ஆனும் ஸுன்னாவும் பல இடங்களில் மிக மிகத் தெளிவாக பேசுகின்றன. இத்தகைய சூனியம் பற்றி அப்படியொன்றே கிடையாது என வாதம் புரிவோரும் உள்ளனர்.

நற்பணிகள் புரிவதில் நல்லார்வம் கொண்டு அர்ப்பணத்துடன் உழைத்துவரும் நத்வத்துர் ரஹ்மானிய்யீன் அக்குறணை ஜாமிஅஹ் ரஹ்மானிய்யஹ் மாணவரிடையே சூனியம் பற்றி ஆய்வுக் கட்டுரைப் போட்டியொன்றை 2014இல் நடத்தியது. இப்போட்டியில் பங்குபற்றியோர் சமர்ப்பித்த ஆய்வுகளில் சூனியம் தொடர்பில் பல்வேறு உப தலைப்புக்களின் கீழ் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கிடைக்கப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகள் தகுதிவாய்ந்த ஆலிம்கள் மூலம் மதிப்பீடுசெய்யப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டு பரிசில்களுக்கு முன்வைக்கப்பட்டன. பங்குகொண்ட எல்லோருமே பொதுவாக நன்றாக ஆக்கங்களைத் தயாரித்திருந்தனர். அனைவருக்கும் என்னுடையவும் நத்வத்துர் ரஹ்மானிய்யீனுடையவும் பாராட்டுக்கள். அவர்களையும் அவர்களின் முயற்சிகளையும் அல்லாஹ் தஆலா அங்கீகரித்தருள்வானாக!

மதிப்பீட்டின் பின்னர் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்துக்குத் தெரிவான ஆய்வுக் கட்டுரை தரம் ஆறில் பயின்றுகொண்டிருந்த மாணவர் எம். அஜ்மல் முளப்பருடையதாகும்.

சகோதரர் அஜ்மல் அக்குறணையைச் சேர்ந்தவர். சுறுசுறுப்பானவர், துடிதுடிப்பானவர். நூலகப் பூங்காவில் புகுந்து நூல் மலர்களில் அமர்ந்து தகவல் தேன்களை சேகரித்து வெளிக்கொணர்ந்த தனது ஆக்கப் படைப்பை வெறும் போட்டியோடு, பரிசோடு மட்டுப்படுத்தி என்ன பயன் என்று யோசித்துவிட்டு அதனை மக்கள் பயனுக்கு விட முன்வந்துள்ளார். ஆகவே முதற் பரிசு தட்டிக்கொண்ட அவரின் ஆய்வு இப்படி நூலாக வெளிவருகின்றது. சகோதரர் அஜ்மலின் யோசனையும் முயற்சியும் மெச்சத்தக்கவை.

சூனியம் குறித்த ஒரு தெளிவான பார்வை இந்த நூலைப் படிக்கும் எவரும் பெற்றுக்கொள்ளும்வண்ணம் முறையான ஒழுங்கில் எளிய தமிழில் அது அமைந்துள்ளது. ஆய்ந்தோய்ந்து பார்க்காமல் சூனியம் என்றே ஒன்று இல்லை என்று கூறி அதனை அடியோடு மறுப்போருக்கும் அதற்காக விவாதத்துக்கழைப்போருக்கும் அதன் பேரில் சவால்விடுவோருக்கும் இவ்வாய்வில் தெளிவுண்டு.

சூனியம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி தேவையான ஒரு நேரத்தில் நத்வத்துர் ரஹ்மானிய்யீன் ஒழுங்குசெய்த அவசியமான பணியாகும். சகோதரர் அஜ்மலின் ‘இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்’ எனும் நாமம் தாங்கிய இப்படைப்பு பொருத்தமான ஒரு தருணத்தில் வெளிவருகின்ற பயன்மிக்க நூலாகும்.

இந்த ஆய்வுப் படைப்பு அதன் நோக்கத்தை அடைய, அதன் மூலம் எழுதியவரும் வாசிப்பவரும் ஏனையோரும் நன்மையடைய இவ்வடியேனின் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்.


எச். அப்துல் நாஸர்.
229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

1436.07.24
2015.05.14





 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page