Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

கல்ஹின்னை ஜாமிஅத் அல்-பத்தாஹ் பத்தாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2007


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் செய்தி


நெஞ்சில் நிறைந்த ஜாமிஅத் அல்-பத்தாஹ்

ஜந்து தசாப்தங்களுக்கும் மேல் ஆரவாரமின்றி அமைதியாக பந்தா, பகட்டு இன்றி பணிவுடன் சன்மார்க்க சேவை ஆற்றிவரும் மலையகத்தின் தாய் அரபுக் கல்லூரி கல்ஹின்னை ஜாமிஅத் அல்-பத்தாஹ்வின் பத்தாவது பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை வரலாற்றுப் பதிவாக்கி அடுத்து வரும் தலைமுறையினரும் அக மகிழ, உணர்ச்சி ததும்ப படித்துச் சுவைத்திடச்செய்யும் பொருட்டு வெளியிடப்படும் நினைவு மலருக்கு இவ்வடியேனின் எழுதுகோலும் நான்கு வரிகள் எழுதுவதில் நெஞ்சு பூரிப்படைகின்றது.
குறிஞ்சி நிலத்தில் வற்றாத அறிவு ஊற்றாய் 1949 முதல் அரை நூற்றாண்டையும் தாண்டிய நிலையில் அறிஞர்களை உருவாக்கும் அறப்பணி புரிந்துவரும் ஜாமிஅத் அல்-பத்தாஹ் ஈழத்து அரபு மத்ரஸாக்கள் வரிசையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒரு கல்லூரியாகும். திவ்விய வஹ்யின் தெவிட்டாத கல்வியை வளப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் மாணவர்களுக்கு அமுதாய் ஊட்டி சத்திய சன்மார்க்கத்தைக் கற்றுத் தேரிய ஆலிம்களை தரணிக்குத் தந்துதவும் கைங்கரியத்தை கச்சிதமாகச் செய்துவருவதை எவரும் பாராட்டாதிருக்க முடியாது.

காலத்துக்குக் காலம் அடுத்தடுத்து ஜாமிஅத் அல்-பத்தாஹ்வை இயக்கிய, இயக்கிக்கொண்டிருக்கின்ற நிருவாகிகள், அதிபர்கள், ஆசான்களின் இடையறாத, அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பின் பிரதிபலனாய் இக்கலாசாலை தொடரான வளர்ச்சியைக் கண்டுவருகின்றது. ஆட்டுக் குட்டியாய்த் துள்ளிக் குதிக்கும் ஆசைகளையும் ஆர்ப்பரிக்கும் அலைகளாய் மேலெழுந்துவரும் மேலெண்ணங்களையும் கட்டுப்படுத்திய நிலையில் குறைந்த வேதனத்துடன் நிறைந்த சேவை புரிந்த, புரிந்துவருகின்ற தியாகச் செம்மல்களான அதன் அதிபர்களும், ஆசிரியர்களும், மத்ரஸாவின் நிர்வாக இயந்திரத்தை கோளாறு இன்றி இயக்குவதில் கர்மசிரத்தையோடு காரியமாற்றிய, காரியமாற்றிவருகின்ற கனவான்களான அதன் நிருவாகிகளும், கலாசாலையின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் இன்புற்றவர்களாக மனம் சலிக்காது, முகம் சுளிக்காது தமது கருவூலங்களிலிருந்து வாரி வழங்கிய, வழங்கிக்கொண்டிருக்கின்ற வள்ளல்களும் இத்தருணத்தில் நன்றிப் பெருக்கோடு நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

இதனை எழுதுகின்ற வேளை 1980களின் பிந்திய அரைப் பகுதி என் மனத் திரையில் வந்து போகின்றது. ஆம்; கல்ஹின்னைக்கான பொதுப் போக்குவரத்து வசதிகளும் ஏனைய வசதிகளும் கம்மியாக இருந்த காலம் அது. பேருந்துக்காய் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். கால் கடுக்க காத்திருந்து பஸ்ஸைக் கண்டதும் விடுகின்ற நிம்மதிப் பெருமூச்சு அதில் அடைந்துள்ள பஸ் கொள்ளா பயணிகள் தொகையைக் கண்ட மாத்திரத்திலேயே இழு மூச்சாக மாறி விடும். மலைகளின் நடுவே, விரிந்து பரந்த வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்களை ஊடறுத்துச் செல்லும் பாதையிலே நத்தையாய், ஆமையாய் நகரும் பஸ் வண்டி கல்ஹின்னைக் கிராமத்தை அடையாளப்படுத்தும் பெருங்கல்லை அண்மித்ததும் இயற்கையாகவே மனதில் மகிழ்ச்சி தோன்றும். கல்ஹின்னையை அடைகின்றோம் என்பதனாலா அல்லது பிரசவ வேதனை தரும் பஸ் பயணம் முடிவுறுகிறது என்பதனாலா இக்களிப்பு?

மத்திய மாகாணத்தின் மற்றுமொரு அரபுக் கல்லூரியான அக்குறணை ரஹ்மானிய்யாவிலிருந்து வியாழன், வெள்ளிகளில் ஏனையோர் ஏனைய இடங்களை நாடி நகர்கையில் நானோ கல்ஹின்னை நோக்கி பயணிப்பேன். அது வெறும் பயணமல்ல. ஜாமிஅத் அல்-பத்தாஹ்வின் அக்காலை அதிபர், கல்விக் கேள்விகளில் சிறப்புற்று விளங்கிய மதிப்புக்குரிய மர்ஹூம் எம்.ஏ.ஸி. திக்ருல்லாஹ் ஹழ்ரத் அவர்களுடனும், அவரை அடுத்து அதிபர் பதவியை அலங்கரித்த திறமை மிக்க ஆலிம் சங்கைக்குரிய எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் ஹழ்ரத் அவர்களுடனும், ஆற்றல்மிக்க மாணவர்களுடனும் அறிவார்ந்த உரையாடல்களை நாடிய பயணங்கள். சொல்லொனா பிரயாணக் கஷ்டங்களையும் அசௌகரியங்களையும் தணியாத அறிவுத் தாகம் தணித்துவிடும். இவை என்றுமழியா பசுமையான நினைவுகள். இன்றுகூட நினைக்கும்போது அந்த நாட்கள் மீண்டும் வர மாட்டாதா என்றுதான் ஏங்குகிறேன்.

எழில் கொஞ்சும் கல்ஹின்னையின், அது உரிமையுடன் பெருமை பேசும் அறிவுக்கூடம் ஜாமிஅத் அல்-பத்தாஹ்வின் புகழ்பாட அரபுக் கவி புனைந்த காலஞ் சென்ற திக்ருல்லாஹ் ஹழ்ரத் அவர்கள் பின்வருமாறு புல்புல் இசைத்தார்:

بـفـتـاحــيـة تـبـهـى = وجامـعـة نسـميـها
أحبائي ذوي الشكـر = لقد ذقـنا العلاء بها
تفوح بها علوم زكا = وجلهـنا سريلانـكا
طريق الفوز والظفر = لتهدينا السبيل زكا

புகழ்பூத்த ஈழத்துக் கவிமணி மர்ஹூம் எம்.சி.எம். ஸுபைர் இக்கவியடிகளை அவற்றின் ஓசை நயம் ததும்ப இனிய தமிழில் இவ்வாறு மொழிமாற்றம் செய்தார்:

ஜாமிஆ பத்தாஹ்வினால் நாங்கள்
நல்லுயர்வுகள் பல பெற்றொளியுற்றோம்
பாமணம் நுகரும் நல்லண்பர்களே!
பண்பாடும் நம் நன்றி யாவர்க்குமாம்
ஸ்ரீ லங்காவின் செல்வ கல்ஹின்னையில்
செழித்திலங்கும் இல்முகள் எல்லாம்
நறுமணம் வீசி நல் வழித் தெளிவூட்டி
நமை வெற்றிப் பாதை இட்டேகும்

ஐம்பத்தெட்டு ஆண்டுகள் இறை பணியில் ஈடுபட்டு பல ஆலிம் பெருந்தகைகளை உற்பத்திசெய்து சாதனை படைத்த பெருமிதத்துடன் பத்தாவது பட்டமளிப்பு விழா காணும் ஜாமிஅத் அல்-பத்தாஹ் ஐம்பத்தெட்டு வருடங்களாய் தான் பயணித்த பாதையை ஒரு கணம் திரும்பிப் பார்க்கவே வேண்டும். இந்நீண்ட பிரயாணத்தின்போது சந்தித்தவற்றை அனுபவங்களாகக் கொண்டு இன்னும் ஒழுங்கான உறுதியான திட்டத்துடன் பயணத்தைத் தொடர வேண்டும்.

சமூக மாற்றம், சூழல் மாற்றம், சூழ்நிலை மாற்றம், சிந்தனை மாற்றம், பார்வை மாற்றத்துக்கேற்றாற் போல், அவற்றுக்கு ஈடுகொடுக்குமாற் போல் கல்வித் திட்டங்களும், போதனா முறைகளும் வடிவமைக்கப்பட வேண்டும். காலத்தின் தேவைகளை நிறைவேற்றாத, சவால்களுக்கு முகங்கொடுக்க முடியாத, பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைச் சொல்லாத, சிக்கல்களை அவிழ்க்க உதவாத கல்வியினால் தனிமனிதனோ, சமூகமோ பயனடையப் போவதில்லை என்பது சர்வ நிச்சயம். ‘கல்வியில் மிகச் சிறந்தது நிலைமைக்குரிய கல்வியாகும்’ என்ற சான்றோர் கூற்று இவ்விடத்தில் நோக்கற்பாலது. எனவே காலத்துக்கேற்ற தரமான கல்வியை வழங்குவதை உறுதிசெய்வது ஜாமிஅத் அல்-பத்தாஹ் முன்னுள்ள மாபெரும் சமூகக் கடமையாகும்.

ஜாமிஅத் அல்-பத்தாஹ் அறிவுப் பூங்காவில் ஆலிம்கள் 45 பேர், ஹாஃபில்கள் 16 பேர் இதுகாறும் நல்லறிவு புஷ்பங்களாக புஷ்பித்து நறுமணம் கமழ நானிலத்தில் உலா வருகின்றனர் என்பதை நினைத்துப் பார்க்கையில் உள்ளங்களில் உவகை பெருக்கெடுக்கின்றது. இவ்வறிவுப் பூஞ்சோலை இறுதி நாள் வரை நீடித்து நிலைத்து வாழ்ந்து ஆயிரமாயிரம் ஆலிம், ஹாஃபில் மலர்களை மலரச் செய்து காசினியை மணக்க வைக்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன், பிரார்த்திக்கிறேன்.


229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

2007.04.11

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page