Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

உள்நாட்டு யுத்தம் முடிவு - 2009


சமாதான விரும்பிகள் சகலருக்கும் ஆனந்தம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
அவர்களின் செய்தி


26 ஆண்டுகள் தொடர்ந்த போர் முடிவைக் கண்டிருப்பதாக கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2009.05.19 அன்று உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றத்திலிருந்து தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் அறிவித்த செய்தி உண்மையில் பூவுலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் வாழும் சமாதான விரும்பிகள் சகலரினதும் மனங்களில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாகும்.

சுமார் மூன்று தசாப்தங்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட, பல்லாயிரக் கணக்கானோரை ஊனமுறச்செய்த, பல கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்தொழித்த, பல நூறு பேரை மன நோயாளர்களாக்கிய, பல்லாயிரம் பேரை புலம் பெயரச் செய்த, எண்ணிறந்த விதவைகளையும், அநாதைகளையும் தோற்றுவித்த, அசாதாரண மூளை வளங்கள், துறை விற்பன்னர்கள் பலரை பலிகொண்ட, பௌதீக வளங்கள் பலவற்றை சிதைத்த, பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குள் தள்ளிய, கவர்ச்சிகுமிகு இவ்வழகிய தீவையே குட்டிச்சுவராக்கிய, நாட்டின் முன்னேற்றத்தை பல ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்திய பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கெதிரான போரை சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தத்தையும் சமாளித்துக்கொண்டு துணிவுடன் முன்னெடுத்த கௌரவ ஜனாதிபதி, பொறுப்புடன் செயற்பட்ட பாதுகாப்பு செயலாளர், உயிரைப் பணயம்வைத்து, அஞ்சா நெஞ்சத்துடன், நாட்டுப் பற்று மேலிட்ட நிலையில் யுத்தத்தை முன் கொண்டுசென்ற முப்படைகளின் தளபதிகள், படைவீரர்கள், அலுத்துக்கொள்ளாமல், அர்ப்பண உணர்வு ததும்ப, பக்கபலமாக நின்றுதவிய பொலிஸ் மாஅதிபர், பொலிஸார் என எல்லோரையும் இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றிப் பெருக்குடன் நெஞ்சார வாழ்த்துகிறேன். இதுகாறும் சமரில் உயிர் நீத்த ஆயிரக் கணக்கான படை வீரர்களையும், அவர் தம் உற்றத்தார், சுற்றத்தாரையும் இதயம் கனக்க, விழிகள் பனிக்க நினைத்துப் பார்க்கிறேன்.

உதிரம் சிந்தும், உயிர் பறிக்கும் பயங்கரவாதம் அடித்து முடக்கப்பட்ட வீர முயற்சி இந்நாட்டு வரலாற்றில் மற்றுமொரு அத்தியாயத்தை தோற்றுவித்திருக்கிறது. எதிர்காலத்தில் வரலாறு பாடத்தில் இணைக்கப்பட வேண்டிய ஒரு புதிய அத்தியாயம் இது. ஜனாதிபதியின் திறமையான தலைமை, தளபதிகளின் சிறப்பான வழிகாட்டல், படையினரின் வீரதீரச் செயல்கள் என்பன எல்லோராலும் மனம் திறந்து, வாய் திறந்து பாராட்டப்பட வேண்டியவை.

ஒரு சமூகம் மற்றுமொரு சமூகத்தை வெற்றிகொண்டதாகவோ அல்லது ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்திடம் தோல்வியுற்றதாகவோ இவ்வெற்றியை அர்த்தப்படுத்த வேண்டாம் என கௌரவ ஜனாதிபதி அவர்கள் கூறியிருப்பது உண்மையில் வரவேற்க வேண்டியதும் எல்லோரும் கவனத்திற் கொள்ள வேண்டியதுமாகும். சமாதானம் வென்றது, பயங்கரவாதம் தோற்றது என்பதே யதார்த்தம்.

நீண்ட நெடுங்கால பயங்கரவாதக் கெடுபிடிகளிலிருந்து விடுபட்டுள்ள இத்தருவாயில் ஒரு புதிய எதிர்காலத்தை அனைத்துப் பிரஜைகளும் ஆவலுடன் அன்னார்ந்து பார்க்கின்றனர். ஆம். அவ்வெதிர்காலத்தை நன்கு திட்டமிட்டு கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் தனது உரிமைகளை தங்கு தடையின்றி அனுபவிக்கும்வண்ணம் சுதந்திரத் தென்றல் நம் மேனிகளில் ஸ்பரிசிக்க வேண்டும். ஒரு சமூகம் மற்ற சமூகத்தை பரஸ்பர புரிந்துணர்வுடன் பார்க்கும் நிலை தோன்ற வேண்டும். கௌரவ ஜனாதிபதி அவர்களின் உரை இவற்றையெல்லாம் தெளிவாகவே உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தமை நம் அகங்களையும், கண்களையும் குளிரச் செய்கின்றது. இது ஒரு நீண்ட பயணம். ஒவ்வொரு பிரஜையும் இதில் பயணிதான். நாட்டுத் தலைவரின் தனிமனிதப் பொறுப்பன்று. எல்லோரினதும் கூட்டுப் பொறுப்பு.

செழிப்பான, ஒளிமயமான, சுபிட்சமான, அமைதியான, ஆரோக்கியமான ஓர் எதிர்காலத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் எம் தேசத்துக்கு எழுதியருள்வானாக!


2009.05.19

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page